மருத்துவப் பேட்டி - கர்ப்பத்தை அறிந்து கொள்ள...
- டாக்டர் கு. ஜீவித்ஐஸ்வர்யா, எம்.பி.பி.எஸ்.
கர்ப்பத்தின் அறிகுறிகள்
மருத்துவரிடம் சென்று உறுதிப்படுத்திக் கொள்ளும் முன்னரே சில பெண்களுக்கு தான் கர்ப்பமாக இருப்பது தெளிவாகத் தெரிந்துவிடும். கர்ப்பமாக வேண்டும் என்ற ஆசையுள்ள சில பெண்கள் கர்ப்பத்தின் பல அறிகுறிகளைப் பிரதிபலிப்பார்கள். கர்ப்பம் இல்லாத போதும் இருப்பதாக நம்புவார்கள். மருத்துவர்கள் பரிசோதித்து இல்லையென்று உறுதி செய்தால் கூட அதை நம்பமறுப்பார்கள். இது கற்பனைக் கர்ப்பம் எனப்படுகிறது. இவ்வகைப் பெண்களுக்கு மனோதத்துவ சிகிச்சை அளிப்பது அவசியம்.
ஆரம்ப அறிகுறிகள்:
மாதவிலக்கின்மை
மாதவிலக்கு ஆகாமல் இருப்பது அமெனோரியா எனப்படுகிறது. இது கர்ப்பத்தின் முதல் அறிகுறி. ஆனால் முறையான மாதச் சுழற்சி உள்ள பெண்கள் குறைந்தபட்சம் 10 நாட்களுக்குப் பிறகுதான் மருத்துவரின் ஆலோசனையை நாட வேண்டும். அதற்கு முன்பு மருத்துவ ரீதியாக கர்ப்பத்தை உறுதி செய்ய முடியாது. மாதவிலக்குச் சுழற்சி முறையாக இல்லாதவர்களுக்கு மாதவிலக்கு வராததைக் கர்ப்பத்தின் அறியாகக் கூற முடியாது.
16 முதல் 40 வயது வரையிலான பெண்களுக்கு மாதவிலக்கின்மை தான் கருத்தரித்தலுக்கான பொதுவான காரணமாகக் கருதப்படும். ஆனால் கர்ப்பம் மட்டுமே அதற்குக் காரணமாகிவிடாது. குறிப்பிட்ட நோய் மற்றும் மாத்திரைகளாலும் மாதவிலக்கின்மை ஏற்படலாம்.
மார்பகங்கள் மாற்றம்
பல பெண்களுக்கு மாதவிலக்கு நேரத்தில் மார்பகங்கள் திண்மையாக இருக்கும். கர்ப்பம் தரித்தால் இந்த திண்மை இன்னும் அதிகமாகும். இந்த மாற்றங்கள் ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டிரான்களால் நடைபெறுகின்றன. இந்த இயக்குநீர்கள் குழந்தைக்குத் தேவையான பாலை மார்பகங்களில் உருவாக்குகின்றன.
மசக்கை
50 சதவிகித கர்ப்பிணிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்படும். சிலருக்கு சாப்பாட்டைக் கண்டாலே குமட்டிக் கொண்டு வரும். சிலருக்கு சிலவகை வாசனைகள் அந்த உணர்ச்சியை ஏற்படுத்தும். இது பொதுவாக காலை வேளைகளில் ஏற்படும். ஒரு சிலருக்கு மசக்கை அதிகமாக நாள் பூராவும் இருக்கக்கூடும். கர்ப்பம் தரித்த 2 வாரங்களிலிருந்து 8 வாரங்கள் வரை மசக்கை நீடிக்கும். மசக்கைக்கான நிச்சயமான காரணம் இன்னும் அறியப்படவில்லை என்றாலும் கர்ப்ப காலத்தில் அதிகமாகச் சுரக்கும் பெண்பால் இயக்குநீர்தான் இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. பொதுவாக மசக்கை 12 வாரங்களுக்குள் மறைந்துவிடும். அதற்குள் அதிக அளவு இயக்கு நீர்களுக்குத் தக்கவாறு உடம்பு தன்னைச் சரி செய்து கொள்ளும்.
இயற்கை உபாதை
கர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் சிறுநீரகங்கள் விரைவாகச் செயல்படும். இதனால் சிறுநீர்ப்பை அடிக்கடி நிறைந்து சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். இதை கர்ப்பத்தின் அறிகுறியாகக் கொள்ளலாம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
கர்ப்பத்தை அறிந்து கொள்ள... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - கர்ப்பத்தின், கர்ப்பம், மசக்கை, பெண்களுக்கு, சிலருக்கு, மாதவிலக்கின்மை, மாதவிலக்கு