மருத்துவப் பேட்டி - மன நோயின் அறிகுறி...
- டாக்டர். இந்திரா கைலாசம்
சந்தேகம் சார்ந்த மனச்சிதைவு நோய் இது. பெரும்பாலும் நடுத்தர வயதினருக்கே வரும், 30 வயதுக்கு மேல்தான் தோன்றுகிறது. தவறான நம்பிக்கைகள் மேலோங்கி நிற்கும். அவை மிகவும் பொருத்த மற்றும் உண்மை நிலைக்கு புறம்பாகவும் இருக்கும். எவ்வளவுதான் தர்க்க ரீதியாக விளக்கம் கொடுத்தாலும் கூட இந்த தவறான நம்பிக்கைகளை நோயாளியின் மனதிலிருந்து அகற்றுதல் கடினம். அந்த அளவுக்கு அவைகள் வேரூன்றியிருக்கும்.
நோய் வருவதற்கு முன் இவர்கள் கொண்டிருந்த குண இயல்புகளை ஆராய்ந்தால் இவர்கள் சமூக உறவுகள் மிகவும் குறை உடையனவாகவே இருந்திருக்கும் என்பது தெரிய வரும். அன்பு இல்லாதவர்களாகவும் மற்றவர்களிடம் நம்பிக்கையில்லாமலும் வெறுப்பு கொண்டு ஒதுங்கி வாழ்ந்திருப்பர். எதிலும் உண்மையான ஈடுபாடு கொள்ளாமல். பட்டும் படாமல் இருந்திருப்பர்.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம் செய்யும் குணமும் அகம்பாவம், எதிர்ப்பு மனப்பான்மை அலட்சியம், மற்றவர் மனம் புண்படும்படிப் பேசுதல், நடத்தல் முதலிய குண இயல்புகளும் இவர்களிடம் நிறைந்து காணப்படும். இந்நோய்க்கு ஆளானவர்கள் பெரும்பாலும் திருமணமானவர்களாகவே இருப்பார்கள். ஏதாவது ஒரு வேலையிலும் இருப்பர். எனவே இவர்களுடைய பண்பிய தொகுப்பு குமரப் பருவம் சார்ந்த மனச்சிதைவு நோயாளிகளைக் காட்டிலும் அதிகமாகவே வளர்ச்சி பெற்றிருக்கும்.
தன்னைப் பிறர் துன்புறுத்துவதாகத் தவறாக நம்புவதே இந் நோயின் மிக முக்கியமான அறிகுறியாகும். இது தவிர தன்னைப் பற்றி மிகப் பெருமையாக கொள்ளுதலும் தன் நிராசைகளைக் கற்பனையால் நிறைவேற்றிக் கொண்டு அது உண்மையில் நடந்தது போல விவரித்துப் பேசுதலும் சில சமயம் இவர்கள் எப்போதும் மன அழுத்தத்துடனும் அளவுக்கு மீறிய எச்சரிக்கை உணர்வுடனும் தனித்தே இருப்பர். ஆயினும் இவர்களுடைய சமூக உறவுகள் அதிகமாகப் பாதிக்கப்படுவதில்லை. சந்தேக எண்ணங்களைத் தவிர பிற விஷயங்களில் அவர்களுடைய கூரிய அறிவுத்திறன் மங்காமலிருக்கும்.
இத்தகையோருக்கு முறையானமருத்துவம் அளிக்கப்படாவிட்டால் அவர்களின் பண்பியல் தொகுப்பு சீர்குலைகிறது. இதனால் சந்தேக எண்ணங்கள் மிக வலிமை பெறுகின்றன.
அதற்கேற்றார் போல் உணர்ச்சிகளும் மாறுபடுகின்றன. பேச்சிலும்அர்த்தமற்ற புது வார்த்தைகள் கலந்து வர ஆரம்பிக்கின்றன.
நோய் தோன்றிய ஆரம்ப காலத்திலேயே சிகிச்சை அளிப்பதுதான் மிகச்சிறந்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக இது பெரும்பாலும் நடப்பதில்லை. நோயாளி தானாகவே மனநல மருத்துவரை அணுகுவது என்பது மிக அரிது.
சமீபத்திய கணக்கெடுப்புப்படி தமிழகத்தில் இத்தகைய நிலை வருடாவருடம் கூடிக்கொண்டு தான் செல்கிறது. ஆதலால் நோய் தோன்றிய உடனே மன நல மருத்துவரை அணுகி முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவது மிகவும் நல்லது என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
மன நோயின் அறிகுறி... - மருத்துவப் பேட்டி - Medicines - மருத்துவம் - நோய், இவர்கள், பெரும்பாலும், மிகவும்