முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 68.வினை செயல் வகை
திருக்குறள் - 68.வினை செயல் வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது. |
671 |
ஆராய்ந்து எண்ணுவதற்கு எல்லை துணிவு கொள்வதே ஆகும், அவ்வாறு கொண்ட துணிவு காலந் தாழ்த்து நிற்பது குற்றமாகும்.
தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை. |
672 |
காலந்தாழ்த்தி செய்யத் தக்கவற்றைக் காலந்தாழ்ந்தே செய்ய வேண்டும், காலந்தாழ்த்தாமல் விரைந்து செய்யவேண்டிய செயல்களைச் செய்ய காலந்தாழ்த்தக் கூடாது.
ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல். |
673 |
இயலுமிடத்தில் எல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது, இயலாவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்ய வேண்டும்.
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும். |
674 |
செய்யத்தொடங்கியச் செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.
பொருள்கருவி காலம் வினையிடனொ டைந்தும் இருள்தீர எண்ணிச் செயல். |
675 |
வேண்டிய பொருள், ஏற்றக்கருவி, தக்க காலம், மேற்கொண்ட தொழில், உரிய இடம் ஆகிய ஐந்தினையும் மயக்கம் தீர எண்ணிச் செய்ய வேண்டும்.
முடிவும் இடையூறும் முற்றியாங் கெய்தும் படுபயனும் பார்த்துச் செயல். |
676 |
செயலை முடிக்கும் வகையும், வரக்கூடிய இடையூறும், முடிந்த போது கிடைக்கும் பெரும்பயனும் ஆகியவற்றை ஆராய்ந்து செய்ய வேண்டும்.
செய்வினை செய்வான் செயல்முறை அவ்வினை உள்ளறிவான் உள்ளம் கொளல். |
677 |
செயலைச் செய்கின்றவன் செய்ய வேண்டிய முறை, அச் செயலின் உண்மையான இயல்பை அறிந்தவனுடையக் கருத்தைத் தான் ஏற்றுக் கொள்ளவதாகும்
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று. |
678 |
ஒரு செயலைச் செய்யும் போது அச் செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே ஒட்டாரை ஒட்டிக் கொளல். |
679 |
பகைவராக உள்ளவரைப் பொருந்துமாறு சேர்த்துக் கொள்ளல், நண்பர்க்கு உதவியானவற்றை செய்தலைவிட விரைந்து செய்யத்தக்கதாகும்.
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. |
680 |
வலிமை குறைந்தவர், தம்மை சார்ந்துள்ளவர் நடுங்குவதற்காக தாம் அஞ்சி, வேண்டியது கிடைக்ககுமானால் வலிமைமிக்கவரைப் பணிந்தும் ஏற்றுக் கொள்வர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
68.வினை செயல் வகை - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - வேண்டும், செயலைச், ஆராய்ந்து, செயலின், யானையால், ஏற்றுக், மற்றொரு, கொள்வர், கொள்ளல், இடையூறும், செய்து, துணிவு, இலக்கியங்கள், செய்யும், விரைந்து, எண்ணிச், literature, வேண்டிய