முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சங்க இலக்கியங்கள் » பதினெண் கீழ்க்கணக்கு » திருக்குறள் » 132.புலவி நுணுக்கம்
திருக்குறள் - 132.புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர் நண்ணேன் பரத்தநின் மார்பு. |
1311 |
பரத்தமை உடையாய்! பெண் தன்மை உடையவர் எல்லாரும் தம்தம் கண்களால் பொதுப் பொருளாகக் கொண்டு நுகர்கின்றார்கள்; ஆகையால் உன் மார்பைப் பொருந்தேன்.
ஊடி யிருந்தேமாத் தும்மினார் யாம் தம்மை நீடுவாழ் கென்பாக் கறிந்து. |
1312 |
காதலரோடு ஊடல் கொண்டிருந்தோமாக, யாம் தம்மை நெடுங்காலம் வாழ்க என்று வாய் திறந்து சொல்லுவோம் என நினைத்து அவர் தும்மினார்.
கோட்டுப்பூச் சூடினும் காயும் ஒருத்தியைக் காட்டிய சூடினீர் என்று. |
1313 |
கிளைகளில் மலர்ந்த மலர்களைச் சூடினாலும், நீர் இந்த அழகை யாரோ ஒருத்திக்கு காட்டுவதற்காகச் சூடினீர் என்று சினம் கொள்வாள்.
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று. |
1314 |
யாரையும் விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேனாக; யாரை விட...? யாரை விட..? என்று கேட்டு ஊடல் கொண்டாள்.
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக் கண்ணிறை நீர்கொண் டனன். |
1315 |
இப்பிறப்பில் யாம் பிரிய மாட்டோம் என்று காதலியிடம் சொன்னேனாக, இனி வரும் பிறப்பில் பிரிவதாக உணர்ந்து கண் நிறையக் கண்ணீர் கொண்டாள்.
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள். |
1316 |
நினைத்தேன் என்று கூறினேன்; நினைப்புக்கு முன் மறப்பு உண்டு அன்றோ? ஏன் மறந்தீர் என்று என்னைத் தழுவாமல் ஊடினாள்.
வழுத்தினாள் தும்மினே னாக அழித்தழுதாள் யாருள்ளித் தும்மினீர் என்று. |
1317 |
யான் தும்மினேனாக; அவள் நூறாண்டு என வாழ்த்தினாள்; உடனே அதை விட்டு யார் நினைத்ததால் தும்மினீர்? என்று கேட்டு அழுதாள்?
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல் எம்மை மறைத்திரோ என்று. |
1318 |
அவளுடைய ஊடலுக்கு அஞ்சி யான் தும்மலை அடக்கிக் கொள்ள உம்மவர் உம்மை நினைப்பதை எமக்குத் தெரியாமல் மறைக்கின்றீரோ என்று அழுதாள்.
தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்குநீர் இந்நீரர் ஆகுதிர் என்று. |
1319 |
ஊடியிருந்தபோது அவளை ஊடல் உணர்த்தி மகிழ்வித்தாலும், நீர் மற்ற மகளிர்க்கும் இத்தன்மையானவராக ஆவீர் என்று சொல்லிச் சினம் கொள்வாள்.
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர் யாருள்ளி நோக்கினீர் என்று. |
1320 |
அவளுடைய அழகை நினைத்து அமைதியாக இருந்து நோக்கினாலும், நீர் யாரை நினைத்து ஒப்புமையாக எல்லாம் பார்க்கின்றீர்? என்று சினம் கொள்வாள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
132.புலவி நுணுக்கம் - Thirukural - திருக்குறள்- Pathinen Kezhkanakku - பதினெண் கீழ்க்கணக்கு - Sangam Literature's - சங்க இலக்கியங்கள் - Tamil Literature's - தமிழ் இலக்கியங்கள் - கொள்வாள், அழுதாள், காயும், யாரினும், பிறப்பில், கொண்டாள், தும்மினீர், இலக்கியங்கள், அவளுடைய, கேட்டு, சொன்னேனாக, சூடினீர், தும்மினார், எல்லாரும், literature, ஊடினாள், நினைத்து