திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு

கொழுநனை இல்லாள் கறையும், வழி நிற்கும் சிற்றாள் இல்லாதான் கைம் மோதிரமும்; பற்றிய கோல் கோடி வாழும் அரசும், - இவை மூன்றும் சால்போடு பட்டது இல. |
66 |
புருஷன் இல்லாதவர் பூப்பும், சிற்றாள் இல்லாதவனுடைய மோதிரமும், கொடுங்கோல் அரசும் சிறப்பற்றவையாகும்.
எதிர்நிற்கும் பெண்ணும், இயல்பு இல் தொழும்பும், செயிர் நிற்கும் சுற்றமும், ஆகி, மயிர் நரைப்ப, முந்தைப் பழ வினையாய்த் தின்னும்; - இவை மூன்றும் நொந்தார் செயக் கிடந்தது இல். |
67 |
சினத்தால் எதிர்த்துப் பேசும் மனையாளும், ஒழுக்கமில்லாத வேலையாட்களும், பகையான சுற்றமும் முற்பிறப்பிற் செய்த வினைப்பயனாகும். இவை முதுமைப் பருவம் வரைக்கும் ஒருவரை வருத்தக் கூடியது ஆகும்.
இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ் உலகின் நில்லாமை உள்ளும் நெறிப்பாடும், எவ் உயிர்க்கும் துன்புறுவ செய்யாத தூய்மையும், - இம் மூன்றும் நன்று அறியும் மாந்தர்க்கு உள. |
68 |
வறியவர்க்குக் கொடுக்கும் செல்வமும், நிலையாமையை எடுத்து உரைப்பதும், பிற உயிர்களுக்கு துன்பம் தரக்கூடிய செய்கைகளைச் செய்யாமல் இருப்பதும் அறவழி நிற்பவர் செய்கைகளாகும்.
அருந்தொழில் ஆற்றும் பகடும் திருந்திய மெய் நிறைந்து நீடு இருந்த கன்னியும், நொந்து நெறி மாறி வந்த விருந்தும், - இம் மூன்றும் பெறுமாறு அரிய பொருள். |
69 |
உழவுச் செயலைச் செய்யும் எருதும், நெடுநாள் மணமின்றி இருந்த கன்னியும், பசித்து வந்த விருந்தினரும், பெறற்கரிய பொருள் ஆகும்.
காவோடு அறக் குளம் தொட்டானும், நாவினால் வேதம் கரை கண்ட பார்ப்பானும், தீது இகந்து ஒல்வது பாத்து உண்ணும் ஒருவனும், - இம் மூவர் செல்வர் எனப்படுவார். |
70 |
சோலை, குளம் அமைத்தானும், வேதம் படித்த பார்ப்பானும், பிறர்க்குக் கொடுத்து உண்ணும் இல்லறத்தானும், உண்மையான செல்வர் எனப்படுவார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 12 | 13 | 14 | 15 | 16 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திரிகடுகம் - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், மூன்றும், கீழ்க்கணக்கு, பதினெண், திரிகடுகம், பொருள், வேதம், குளம், உண்ணும், எனப்படுவார், செல்வர், வந்த, பார்ப்பானும், சுற்றமும், சிற்றாள், நிற்கும், சங்க, மோதிரமும், அரசும், இருந்த, ஆகும், கன்னியும்