திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

குருந்தே! கொடிமுல்லாய்! கொன்றாய்! தளவே! முருந்தேய் எயிறொடுதார் பூப்பித்து - இருந்தே, அரும்புஈர் முலையாள் அணிகுழல்தாழ் வேய்த்தோள் பெரும்பீர் பசப்பித்தீர் பேர்ந்து. |
116 |
குருந்தே! கொடி முல்லாய்! கொன்றாய்! தளவே! பீலி முருந்தினையொக்கும் இவளெயிற்றுடனே பூமாலையையும் பூப்பித் திருந்து கோங்கரும்பு முதலாயினவற்றை வென்று சிதைக்கும் முலையினை யுடையாளுடைய குழறாழ்ந்த நிறைந்த வேய்த்தோள்களைப் பெரும்பீர் நிறம் போலப் பசப்பித்தீர்மீட்டும்
கதநாகம் புற்றிடையக் காரேறு சீற மதநாகம் மாறு முழங்கப் - புதல்நாகம் பொன்பயந்த வெள்ளி புறமாகப் பூங்கோதாய்! என்பசந்த மென்தோள் இனி. |
117 |
சினத்தினையுடைய பாம்புகளும் புற்றினையடையும் வகை உருமேறு வெகுண்டிடிப்ப, மதத்தையுடைய யானைகள் அவ்வுரு மேற்றுக்கு எதிரே முழங்க, புதலால் சூழப்பட்ட நாகமரங்கள் வெள்ளிபோலும் இதழ்கள் புறஞ்சுற்றப் பொன்போலுந் தாதுக்களை உள்ளே பயந்தனவாதலாற் பூங்கோதாய்! நின் மென்றோள்கள் யாதுகாரணத்தாற் பசந்தன இப்பருவத்து?
கார்தோன்றிப் பூவுற்ற காந்தள் முகைவிளக்குப் பீர்தோன்றித் தூண்டுவாள் மெல் விரல்போல் - நீர் தோன்றித் தன்பருவம் செய்தது கானம் தடங்கண்ணாய்! என்பருவம் அன்றுஎன்றி இன்று. |
118 |
விளக்கு மழுங்கிப் பீர்நிறம் கோடலான் அவ்விளக்கினைத் தூண்டுவாள் மெல் விரலினைத் தோன்றிப் பூவின் மேற் சென்றன காந்தண் முகைகள் போலும் வகை கார் நீர் தோன்றுதலாற் காரின் பருவத்தைச் செய்தன கானங்கள்; இத்தைக் கண்டும், தடங்கண்ணாய்! எனக்குக் காதலர் சொல்லிய பருவம் அன்றென்னா நின்றி.
உகவும்கள் அன்றென்பார் ஊரார் அதனைத் தகவு தகவனென்று ஓரேன் - தகவேகொல் வண்துடுப்பாயப் பாம்பாய் விரலாய் வளைமுறியாய் வெண்குடையாம் தண்கோடல் வீந்து. |
119 |
மழைத்துளிகள் உகவுங் கார்ப்பருவம் அன்றென்று சொல்லாநின்றார் இவ்வூரார்; அச் சொலவு தான் அவர்க்குக் குணமோ குற்றமோ என்பதறியேன்; அதுதான் அவர்க்குக் குணமே கொல்லோ! வளவிய துடுப்பாய்ப் பாம்பாய்விரலாய் வளைமுறியாய் வெண்குடையாகாநின்றது தண்கோடலழிந்து.
பீடிலார் என்பார்கள் காணார்கொல் வெங்கதிரால் கோடெலாம் பொன்னாய்க் கொழுங்கடுக்கைக் கோடெலாம், அத்தம் கதிரோன் மறைவதன்முன் வண்டொடுதேன் துத்தம் அறையும் தொடர்ந்து. |
120 |
நம்மைப் பெருமையிலரென்று சொல்லுவார் காணாதாராகாரே! வளவிய கொன்றைகள் கொம்பெல்லாம் பொன்னாகப் பூக்க. வண்டொடு தேன்கள் துத்தம் என்னும் பண்ணினைத் தம்முட் பொருந்தி ஒலியா நின்றன காடெல்லாம்; வெய்ய கதிரோடு கூடி வெங்கதிரோன் அத்த மலையைஅடைதற்கு முன்னே.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 22 | 23 | 24 | 25 | 26 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், திணைமாலை, கீழ்க்கணக்கு, பதினெண், நூற்றைம்பது, தடங்கண்ணாய், அவர்க்குக், வளைமுறியாய், கோடெலாம், துத்தம், நீர், வளவிய, பெரும்பீர், குருந்தே, சங்க, கொன்றாய், தளவே, தூண்டுவாள், பூங்கோதாய், மெல்