திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கானம் கடியரங்காக் கைம்மறிப்பக் கோடலார் வானம் விளிப்பவண்டு யாழாக - வேனல் வளரா மயிலாட வாட்கண்ணாய்! சொல்லாய் உளராகி உய்யும் வகை. |
111 |
கானங் கடியரங்காகக் கோடலார் வியந்து கைம்மறிப்ப, முகில் பாட, வண்டுகள் யாழாக, வேனற் காலத்துக் களியாத மயில் களித்தாடாநிற்க, வாட்கண்ணாய்! சொல்லாய்; காதலரைப் பிந்ந்தார்இறந்துபடாது உளராகியுய்யுந் திறத்தை.
தேரோன் மலைமறையத் தீங்குழல் வெய்தாக வாரான் விடுவானோ வாட்கண்ணாய்! - காராய் குருந்தோடு முல்லை குலைத்தனகாண் நாமும் விருந்தோடு நிற்றல் விதி. |
112 |
பகலோன் மலையின்கண் மறைய இனிய குழல் இன்னாதாய் வெய்தாக இக்காலத்தின்கண் வாராதே விடுவானோ? வாட்கண்ணாய்! பசுமையார்ந்த குருந்துடனே முல்லைகள் பூங்கொத்தை ஈன்றான காண்; இனி நாமும் அவர்க்கு விருந்துசெய்து ஒழுகிநிற்றல் நெறி.
பறியோலை மேலொடு கீழா இடையர் பிறியோலை பேர்த்து விளியாக் - கதிப்ப நரியுளையும் யாமத்தும் தோன்றாரால் அன்னாய்! விரியுளைமான் தேர்மேல்கொண் டார். |
113 |
படுத்துக் துயிலும் பறி கீழாக ஓலைப்படன் மழைத்துளியைக் காத்தற்கு மேலாக இடையர்கள் கிடந்து யாடுகளைப் பிறித்தற்குக் கருவியாகிய பிறியோலையைப் புடை பெயர்வித்து அழைத்துரப்ப, நரிகள் அஞ்சிக் கதறும் யாமத்தின்கண்ணும் தோன்றாராற் றோழி! விரிந்த உளையையுடைய மாவாற் பூட்டப்பட்ட தேரை மேற்கொண்டு போயினார்.
பாத்துப் படுகடல் மாந்திய பல்கொண்மூக் காத்துக் கனைதுளி சிந்தாமைப் - பூத்துக் குருந்தே! -பருவங் குறித்துவளை நைந்து வருந்தேயென் றாய்நீ வரைந்து. |
114 |
ஒலிக்கின்ற கடலைப் பருகி அந்நீரைக் காத்துக் கருமுற்றிப் பகுத்துச் செறிந்த துளிகளைச் சிதறுவதற்கு முன்பே பூத்துக் குருந்தே! பருவத்தைக் குறித்துக் காட்டி இவளையே வரைந்து வருந்துவாய் என்றாய் நீ.
படுந்தடங்கண் பல்பணைபோல் வான்முழங்க மேலும் கொடுந்தடங்கண் கூற்றுமின் ஆக - நெடுந்தடங்கண் நீர்நின்ற நோக்கின் நெடும்பணை மென்தோளாட்குத் தேர் நின்றது என்னாய் திரிந்து. |
115 |
ஒலியா நின்ற தடங்கண்ணையுடைய பலமுரசு போல் முகில்கள் முழங்குவதன் மேலும், மின்னே கொடிய தடங் கண்ணினையுடைய கூற்றமாக, அழுகின்ற நீர் விடாது நின்ற நெடுந்தடங்கண்ணோக்கினையுடைய நெடும்பணை மென்றோளாட்கு நீ, மறித்துவந்து நின் மனை வாயிலின் கண்ணே அவன்றேர் நின்றதென்று சொல்லுவாய்;எமக்கு முன்னே சென்று தூதாக.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 21 | 22 | 23 | 24 | 25 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, இலக்கியங்கள், வாட்கண்ணாய், திணைமாலை, கீழ்க்கணக்கு, நூற்றைம்பது, பதினெண், வரைந்து, பூத்துக், குருந்தே, நெடும்பணை, நின்ற, காத்துக், மேலும், சொல்லாய், கோடலார், சங்க, யாழாக, வெய்தாக, விடுவானோ, நாமும்