திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு

கடற்கானல் சேர்ப்ப! கழியுலாஅய் நீண்ட அடற்கானல் புன்னைதாழ்ந்து ஆற்ற - மடற்கானல் அன்றில் அகவும் அணிநெடும் பெண்ணைத்துஎம் முன்றில் இளமணல்மேல் மொய்த்து. |
56 |
கடற்கானற் சேர்ப்பனே! கழிகள் சூழ்ந்து நீண்ட மீன் கொலைகளையுடைய கானலின்கண் மிகவும் புன்னை தழைக்கப்பட்டு, பூவிதழையுடைய இக்கானலின் கண் உள்ள அன்றில்கள் அழையாநின்ற அழகிய நெடும் பெண்ணையை யுடைத்து;எம் மில்லத்தின்முன் இளமணல்களும் மொய்த்து.
வருதிரை தானுலாம் வார்மணல் கானல் ஒருதிரை ஓடா வளமை - இருதிரை முன்வீழுங் கானல் முழங்கு கடற்சேர்ப்ப! என்வீழல் வேண்டா இனி. |
57 |
வருதிரைதான் வந்து உலவாநின்ற ஒழுகிய மணற்கானலின்கண் ஒருதிரை வந்து பெயர்வதற்கு முன்னே இரண்டு திரை வந்து வீழாநின்ற கானலின்கண் வந்து முழங்கு கடற்சேர்ப்பனே! என்னால் வந்து இப் புணர்ச்சியை விரும்பல் வேண்டா;இனி வரைந்து கொள்வாய்.
மாயவனும் தம்முனும் போலே மறிகடலும் கானலும்சேர் வெண்மணலும் காணாயோ - கானல் இடையெலாம் ஞாழலும் தாழையும் ஆர்ந்த புடையெலாம் புன்னை புகன்று? |
58 |
மாயவனும் அவன் முன்னோனும் போல, மறிகடலும் கடற்சோலையும் அச்சோலையைச் சேர்ந்த வெண்மணலும் பாராயோ! அக்கடற் சோலையின் நடுவெல்லாம் ஞாழலுந் தாழையுமாய் இருக்கும்; நிறைந்த மருங்கெல்லாம் புன்னையாயிருக்கும்; இவற்றையும் விரும்பிப் பாராய்.
பகல்வரின் கவ்வை பலவாம் பரியாது இரவரின் ஏதமும் அன்ன - புகஅரிய தாழை துவளும் தரங்கநீர்ச் சேர்ப்பிற்றே ஏழை நுளையர் இடம். |
59 |
பகல் வருவாயாயின், அலர்பலவு முளவாம்; அவ்வலர்க்கு இரங்காதே இரவு வருவையாயின், ஊறு வரும் ஏதமும் பலவுளவாம்; உள் புகுதற்கரிய தாழையடர்ந்த திரைநீர்ச் சேர்ப்பையுடைத்து, எங்கள் ஏழை நுளையர்வாழுமிடம்.
திரையலறிப் பேராத் தெழியாத் திரியாக் கரையலவன் காலினாற் கானாக் - கரையருகே நெய்தல் மலர்கொய்யும் நீள்நெடுங் கண்ணினாள் மையல் நுளையர் மகள். |
60 |
திரைகள் அலறிப் பெயரும் வகை தெழித்துத் திரிந்து கரையின்கண் அலவன்களைத் தன் காலினாலாராய்ந்து, கரையருகே நின்ற நெய்தன் மலர்களைக் கொய்யாநிற்கும் நீளிய நெடுங் கண்ணினாள் நுளையருடையமையன் மகள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 30 | 31 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திணைமாலை நூற்றைம்பது - பதினெண் கீழ்க்கணக்கு, வந்து, இலக்கியங்கள், திணைமாலை, நூற்றைம்பது, கானல், கீழ்க்கணக்கு, பதினெண், மறிகடலும், வெண்மணலும், கரையருகே, மகள், கண்ணினாள், மாயவனும், நுளையர், ஏதமும், ஒருதிரை, நீண்ட, சங்க, மொய்த்து, கானலின்கண், முழங்கு, புன்னை, வேண்டா