சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

வலி அழிந்தார், மூத்தார், வடக்கிருந்தார், நோயால் நலிபு அழிந்தார், நாட்டு அறைபோய் நைந்தார், - மெலிவு ஒழிய, இன்னவரால் என்னாராய், ஈந்த ஒரு துற்று மன்னவராச் செய்யும் மதித்து. |
71 |
வலிகெட்டவர், மூத்தவர், வழிபட்டுண்ணாது வடக்கிருந்தார், பிணியானலியப்பட்டழிந்தார், தமது நாடுவிட்டுப் போய்த் தளர்ந்தாரென இவ்வைவரும் தளர்வொழியும்படி உற்றாரயலாரென்றாராயாதே ஈயப்பட்டதோ ருணவு மன்னவராகச் செய்யுமதித்து.
கருத்துரை: வலியழிந்தார் முதலிய ஐவருக்கும் ஒரு துற்றுணவு கொடுத்தவர் அவ்வறப்பயனால் அரசராய்ப் பிறப்பார் என்பது.
கலங்காமைக் காத்தல், கருப்பம் சிதைந்தால் இலங்காமைப் பேர்த்தரல், ஈற்றம் விலங்காமைக் கோடல், குழவி மருந்து, வெருட்டாமை,- நாடின், அறம் பெருமை நாட்டு. |
72 |
வயிற்றுட் கருவழியாமை காத்தலும், கருப்பஞ் சிதைந்தாற் பிறர்க்கு வெளிப்படாமை மறையப் பெயர்த்து வாங்குதலும், குழவியை இடைவிலங்காதபடி இயற்றிக் கோடலும், குழவி பிறந்து பிணிகொண்டால் அதற்கு மருந்தும், அக்குழவியை அச்சுறுத்தாமையும் என்னுமிவ்வைந்தினையும் பெரிதாய அறமாக நாட்டிவாயாக.
கருத்துரை: கருப்பங் கலங்காமை காத்தல் முதலிய ஐந்தும் பேரறமாக நாட்டுவாயாக என்பதாம்.
சூலாமை, சூலின் படும் துன்பம், ஈன்றபின் ஏலாமை, ஏற்ப வளர்ப்பு அருமை, சால்பவை வல்லாமை, - வாய்ப்ப அறிபவர் உண்ணாமை, கொல்லாமை, நன்றால், கொழித்து. |
73 |
சூற் கொல்லாமையால் வருந்துன்பம், சூற் கொண்டால் வருவதொரு மெய் வருத்தம், பிள்ளை பெற்று வைத்தும் பிள்ளையைக் கொள்ளாமை, பிள்ளையைப் பெற்றுக் கொண்டால் வளர்க்குமருமை, வளர்ந்த பிள்ளை சால்பு குணங்கள் மாட்டாமை, இவ்வைந்தினையும் வாய்ப்ப அறிந்தவர் ஆராய்ந்து ஓருயிரைக் கொல்லாமையும் அவ்வூனை யுண்ணாமையும் நன்று.
கருத்துரை: பிறப்பினாலுண்டாகும் ஐவகைத் துன்பங்களையும் ஆராய்ந்துணர்வோர் உயிர் கொல்லாமையும் புலாலுண்ணாமையும் நன்று என்பதாம்.
சிக்கர், சிதடர், சிதலைபோல் வாய் உடையார், துக்கர், துருநாமர், தூக்குங்கால், தொக்கு வரு நோய்கள் முன் நாளில் தீர்த்தாரே - இந் நாள் ஒரு நோயும் இன்றி, வாழ்வார். |
74 |
தலைநோயுடையாரையும், பித்துற்றாரையும், வாய்ப்புற்றுடையரையும், கயநோய் கொண்டாரையும், மூலநோய் கொண்டாரையும், அடைந்து வருந்துன்பங்களை முற்பிறப்பிற் றீர்த்தவர்க ளிப்பிறப்பினுகண் ஒரு நோயுமின்றி வாழ்வார்.
கருத்துரை: தலை நோயுடையார் முதலிய ஐவரையும் அவர் பதுந்துன்பங்களினின்று முற்காலத்தில் ஒழித்தவரே இக்காலத்தில் ஒரு நோயுமில்லாமல் வாழ்ந்திருப்பர் என்பது.
பக்கம் படாமை, ஒருவற்குப் பாடு ஆற்றல், தக்கம் படாமை, தவம்; அல்லாத் தக்கார், இழிசினர்க்கேயானும் பசித்தார்க்கு ஊண் ஈத்தல், கழி சினம் காத்தல், கடன். |
75 |
எல்லா வுயிர்க்கும் ஒத்தலும், படுந்துன்பம் ஆற்றுதலும், ஒரு பொருளின் கண்ணும் பற்றுப் படாமையும். இம்மூன்றும், தவஞ்செய்வார் குணமாவன. அவர்களல்லா இல்வாழ்வார்க்குக் குணமாவன; கிழ்க்குலத்தார்க்கே யாயினும் பசித்தவர்க்கு உண்டி கொடுத்தலும் மிக்க வெகுளிகாத்தலும்.
கருத்துரை: நடுவுநிலைமை முதலிய மூன்றும் துறவறத்தார்க்கும், பசித்தவர்க் குணவளித்தல் கோபம் காத்தல் ஆகிய இரண்டும் இல்லறத்தார்க்கு முரிய குணங்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 13 | 14 | 15 | 16 | 17 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்துரை, முதலிய, காத்தல், இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, பதினெண், சிறுபஞ்சமூலம், கொல்லாமையும், குணங்கள், பிள்ளை, வாழ்வார், குணமாவன, படாமை, கொண்டாரையும், கொண்டால், நன்று, குழவி, வடக்கிருந்தார், அழிந்தார், சங்க, நாட்டு, என்பது, வாய்ப்ப, என்பதாம், சூற்