சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
நீர் அறம் நன்று; நிழல் நன்று; தன் இல்லுள் பார் அறம் நன்று; பாத்து உண்பானேல், பேர் அறம் நன்று, தளி, சாலை, நாட்டல்; - பெரும் போகம் ஒன்றுமாம், சால உடன். |
61 |
நீரறஞ் செய்தன்ன்று, நிழலறஞ் செய்தன்ன்று, தன்மனையுட் பிறருறைய விடங்கொடுத்தன்ன்று, பகுத்துண்பானாயிற் பேரற நன்று, தளியுஞ்சாலையும் நிலைபெறச் செய்தல் நன்று, இவ்வைந்துஞ் செய்தார்க்குப் பெரும் போகம் பொருந்தும்.
கருத்துரை: தண்ணீர் அறம் முதலியன செய்தார்க்குப் போகப் பேறுகள் உண்டாகும்.
பிடிப் பிச்சை, பின் இறை, ஐயம், கூழ், கூற்றோடு எடுத்து இரந்த உப்பு, இத் துணையோடு அடுத்த சிறு பயம் என்னார், சிதவலிப்பு ஈவார் பெறு பயன், பின் சாலப் பெரிது. |
62 |
ஒரு பிடியுளடங்கும் பிச்சை, விரலிறையுளதங்கும் பிச்சை, உண்டோ இல்லையோ என்றையப்படும் பிச்சை, கூழ்வார்த்தல், ஒருவன் சொல்லோட்டுத் திரந்த உப்பு இத்துணையும் பொருந்திய பயன் சிறியவென்று கருதாராய்ச் சிதவலிப்பினை யீவார் பின்பு பெறும்பயன் மிகப் பெரிது.
கருத்துரை: பிடிப்பிச்சை முதலியவை சிறியவை இவைதரும் பயனும் சிறியனவென்று நினையாது கொடுப்பவர் பின்பு பெறும் பயன் மிகப்பெரிது என்பதாம்.
வெந் தீக் காண் வெண்ணெய், மெழுகு, நீர் சேர் மண், உப்பு, அம் தண் மகன் சார்ந்த தந்தை, என்று ஜந்தினுள், ஒன்று போல் உள் நெகிழ்ந்து ஈயின், சிறிது எனினும், குன்றுபோல் கூடும், பயன். |
63 |
வெவ்விய தீயைக்கண்ட வெண்ணெயும் மெழுகும், தீர்சேர்ந்த மண்ணும், உப்பும், தன்னழகிய குளிர்ந்த மகனைத் தழுவிய தந்தையுமென்று சொல்லப்பட்ட ஐந்தினுளொன்று போலே இரவலரைக் கண்டால் உள் நெகிழ்ந்து ஈதலியைந்த பொருளி சிறிதாயினு மதனால் வரும் பயன் குன்றுபோலப் பெரிதாய்க் கூடும்.
கருத்துரை: நெருப்பைக் கண்ட வெண்ணெய் முதலிய பொருள்களிலொன்றைப் போல மன முருகி இரவலர்க்கு வேண்டும் பொருள் சிறிதாய் இயைந்தவளவிற் கொடுத்த வொருவனுக்கு அச்சிறு கொடையாலுண்டாகும் பயன் மலைபோல மிகப் பெரிதாம
குளம் தொட்டு, காவு பதித்து, வழி சீத்து, உளம் தொட்டு உழு வயல் ஆக்கி, வளம் தொட்டுப் பாகுபடும் கிணற்றோடு என்று இவை பாற்படுத்தான் ஏகும் சுவர்க்கம் இனிது. |
64 |
குளத்தைக் கல்லி, மரக்காவை நட்டு, வழி சீத்துத் திருத்தி, மேடாயின நிலங்களை யுட்டோண்டி, யுழு வயலாக்கி வளம் படத்தோண்டி, வகுப்புப் படக் கிணற்றொடு சொல்லப்பட்ட இவ்வைந்தும் மிகுதிபடச் செய்தான் சுவர்க்கத்திற்குச் செல்லு மோரிடையூறின்றி.
கருத்துரை: குளம் வெட்டுதல் முதலிய அறங்களைந்தினையும், செய்தவன் புறக்கம் புகுவன் என்பதாம்.
போர்த்தும், உரிந்திட்டும், பூசியும், நீட்டியும், ஓர்த்து ஒரு பால் மறைத்து, உண்பான் மேய் ஓர்த்த அறம்; அறமேல் சொல் பொறுக்க; அன்றேல், கலிக்கண் துறவறம் பொய்; இல்லறம் மெய் ஆம். |
65 |
முழுமெய்யுந் தோன்றாமற் போர்த்தும், உடம்படைய நீறு பூசியும், சடையை நீட்டியும், உடம்பிலொரு கூற்றினை மறைத்தும் உண்டற்கு மேவியாராய்ந்து கொண்டன இவ்வேடங்களைந்தும் பண்டுள்ள நல்லார் சொல்லிய துறவறமே. துறவறமாயிற் பிறர் சொல்லிய கடுஞ்சொற்களைப் பொறுக்கப்பொறாராயிற் கலிகாலத்தின் கண் நிகழும் துறவறம் பொய்யாம், இல்லறம் மெய்யாவது.
கருத்துரை: உலகவர் பழியைப் பொறுமையுடன் ஏற்றுக்கொள்வதாயின், துறவறம் கொள்க, அன்றேல் இல்லறமே கொள்க என்பது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 11 | 12 | 13 | 14 | 15 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, பயன், நன்று, கருத்துரை, அறம், இலக்கியங்கள், பிச்சை, சிறுபஞ்சமூலம், துறவறம், பதினெண், கீழ்க்கணக்கு, உப்பு, போர்த்தும், தொட்டு, முதலிய, குளம், வளம், நீட்டியும், சொல்லிய, கொள்க, இல்லறம், அன்றேல், சொல்லப்பட்ட, பூசியும், பின்பு, போகம், செய்தன்ன்று, பெரும், நீர், சங்க, செய்தார்க்குப், பின், வெண்ணெய், நெகிழ்ந்து, என்பதாம், மிகப், பெரிது, கூடும்