சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
தன் நிலையும், தாழாத் தொழில் நிலையும், துப்பு எதிர்ந்தார் இன் நிலையும், ஈடு இல் இயல் நிலையும், துன்னி, அளந்து அறிந்து செய்வான் அரைசு; அமைச்சன் யாதும் பிளந்து அறியும் பேர் ஆற்றலான். |
56 |
தன்னுடைய நிலைமையினையும், தாழ்வின்றித் தான் செய்யும் வினையது, நிலைமையினையும், வலியினாற் றன்னுதனெதிர்ந்த மாற்றார் மாட்டுள்ள இனிய நிலைமையினையும், கேடில்லாத வுலக வழக்கு நிலைமையினையும், முன்புக் காராய்ந்தறிந்து செலுத்துவான் அரசனாவன், அந்நான்குமன்றி மற்றிமெல்லாம் வேறு பகுத்தறியும் பெரியவாற்றலையுடையான் அமைச்சனாவான்.
கருத்துரை: தன்நிலை, தன்வினைநிலை, பகைவர்நிலை, உலகியனிலை என்பனவற்றை யாராய்ந்து செய்பவனே அரசனாவான். இவற்றையே யன்றி மற்றெல்லாக் காரியங்களையும் பகுத்தறிய வல்லவனே அமைச்சனாவான்.
பொருள், போகம், அஞ்சாமை, பொன்றுங்கால் போர்த்த அருள், போகா ஆர் அறம், என்று ஐந்தும் இருள் தீரக் கூறப்படும் குணத்தான், கூர் வேல் வல் வேந்தனால் தேறப்படும் குணத்தினான். |
57 |
பொருளும், இன்பமும், இடுக்கண் வந்தாலஞ்சாமையும் பிறிதோருயிர் பொன்றவந்தவிடத்து மிக்க வருளும், நீங்காத வரியவறமுமென்று சொல்லப்பட்ட இவ்வைந்துங் குற்றந்தீரச் சொல்லப்படுங் குணத்தான் கூர்வேலை வல்ல வேந்தனாலொர் கருமத்தினின்றுய்த்துத் தேறப்படுங் குணத்தினான்.
கருத்துரை: பொருளும், இன்பமும், இடுக்கண் வந்த காலத்து அதற்கஞ்சாமையும், பிறிதோருயிர் அழிய வந்தவிடத்து அதற்கிரங்கும் அருளுடைமையும், அருமையாகிய ஆறமும் என்று சொல்லப்பட்ட இவ்வைந்தனையு முடையவன் அரசனாவொரு கருமத்தின் மேற் செலுத்துதற்குரியனாவான்.
நன் புலத்து வை அடக்கி, நாளும் நாள் ஏர் போற்றி, புன் புலத்ததைச் செய்து, எருப் போற்றிய பின், நன் புலக்கண் பண் கலப்பை பாற்படுப்பான் உழவன் என்பவே - நுண் கலப்பை நூல் ஓதுவார். |
58 |
விளைபுலத்திலுள்ள வைக்கோலினைத் தன் பாலுள்ளதாகத் திரட்டி, நாடோறும் உழும் பகடுகளைப் பாதுகாத்து, புன்புலத்தை நன்புலமாகத் திருத்தி எருவினாலதனைப் போற்றிய பின்பு, பண்ணுங்கலப்பைகளை இன்புலத்தின்கட் பகுதிப்படுப்பானுழவனாவானென்று சொல்லுவார் நுண்ணிய உழவு நூலோதிய அறிவார்.
கருத்துரை: வைக்கோலைச் சேர்த்து, அதனால் உழவெருதுகளைப் போற்றிப் புன்செய்யை எருவிட்டு நன்செய்யாகத் திருத்திப்பின், அந்த நன்செய்யைப் பண்படுத்தல் உழுதல் முதலியவற்றைச் செய்பவனே உழுதொழிலாளன் என்று சொல்லுவர் உழவு நூலோதியுணர்ந்தோர்.
ஏலாமை நன்று; ஈதல் தீது, பண்பு இல்லார்க்கு; சாலாமை நன்று, நூல்; சாயினும், 'சாலாமை நன்று; தவம் நனி செய்தல் தீது' என்பாரை இன்றுகாறு யாம் கண்டிலம். |
59 |
ஒருவர் மாட்டுச் சென்றிரந் தேலாமையுநன்று, குணமில்லாதார்க்கு ஒன்றையீதலுந் தீது, குணமில்லாதார்க்கு நூல் நிரம்ப அறிவியாமையும் நன்று, ஒருவன் சால்புடைனல்லாமை நன்று, மிகத் தவஞ் செய்தல் நன்றன்றென்று தாஞ்சாயினுஞ் சொல்லுவாரை இன்றளவும் யாங்கண்டிலேம்.
கருத்துரை: ஈயாமை முதலியன நன்மையாம், ஈதல், முதலியன தீமையாம் என்பவர் எவருமிலர்.
அரம் போல் கிளை. அடங்காப் பெண், அவியாத் தொண்டு, மரம் போல் மகன், மாறு ஆய் நின்று கரம் போலக் கள்ள நோய் காணும் அயல், ஐந்தும் ஆகுமேல், உள்ளம் நோய் வேண்டா, உயிர்க்கு. |
60 |
அரம்போலத் தன்னைத் தேய்க்குங்கிளையும், தனக்கடங்காத மனைவியும், அடங்காதனவே செய்யுந் தொழும்பும், அறிவில்லாத தன்புதல்வனும், மாறாய்த் தமக்கிடமாய் நோயைச் செய்யுமயலிருப்பு மென இவ்வைந்தும் உளவாயினுயிருடையா ருள்ளத்திற்கு மற்றுநோய் வேண்டா.
கருத்துரை: அரம்போலுஞ் சுற்ற முதலிய ஐந்துமே மக்கட்கு, உள்ளக் கவலையை விளைத்தற்குப் போதும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, நன்று, கருத்துரை, நிலையும், இலக்கியங்கள், நிலைமையினையும், சிறுபஞ்சமூலம், தீது, நூல், பதினெண், கீழ்க்கணக்கு, சாலாமை, ஈதல், உழவு, போல், வேண்டா, நோய், முதலியன, குணமில்லாதார்க்கு, செய்தல், இடுக்கண், ஐந்தும், குணத்தான், செய்பவனே, அமைச்சனாவான், சங்க, குணத்தினான், பொருளும், போற்றிய, சொல்லப்பட்ட, பிறிதோருயிர், இன்பமும், கலப்பை