சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு

மக்கள் பெறுதல், மடன் உடைமை, மாது உடைமை, ஒக்க உடன் உறைதல், ஊண் அமைவு,-தொக்க அலவலை அல்லாமை, பெண் மகளிர்க்கு - ஐந்தும் தலைமகனைத் தாழ்க்கும் மருந்து. |
51 |
தான் மக்களைப் பெறுதல், அடக்கமுடைமை, அழகுடைமை, அவனினைவிற் கொக்க உடனொழுகுதல், அவனுண்ணும் உணவுக்கு விரும்புதலென இத்தொக்க ஐந்து குணனும் பிறரையொத்தலே தனக்கொழுக்கமாகவுடையளல்லளாயிற் றங்கொழுநனைத் தம்பாற் பெண்டீர் வணங்கும் மருந்தாவாள்.
கருத்துரை: மக்கட்பேறும், ஆடக்கமுடைமையும், அழகுடைமையும், கணவனுடைய கருத்துக்கிசைய அவனொடுடனுறைதலும், அவனுண்ணும் உணவை விரும்புதலும் ஆகிய இவ்வைந்து குணங்களும் பெண்டிர்க் கிருக்குமாயின் அவை அவர் கணவரை வணக்கு மருந்தாகும் என்பதாம்.
கொண்டான் கொழுநன், உடன்பிறந்தான், தன் மாமன், வண்டு ஆர் பூந் தொங்கல் மகன், தந்தை,-வண் தாராய்! - யாப்பு ஆர் பூங் கோதை அணி இழையை, நற்கு இயையக் காப்பர், கருதும் இடத்து. |
52 |
தன்னைக்கொண்ட கொழுநனும், உடன் பிறந்தானும், மாமனும், வண்டார் பூந்தொங்கல் மகனும், தந்தையுமெனு இவ்வைவரும் யாப்பார் பூங்கோதை யணியிழையை மிகவுஞ் செறியக் காப்பாளர்; வண்டாரய்.
கருத்துரை: ஒரு பெண்ணின் கற்புக் கழிவுவராமல் காக்கத் தக்கவர் கணவன், கணவனுடன் பிறந்தவன், மாமன், மகன், தந்தை இவ்வைவரும் என்றபடி.
ஆம்-பல், வாய், கண், மனம், வார் புருவம், என்று ஜந்தும், தாம் பல் வாய் ஓடி, நிறை காத்தல் ஓம்பார், நெடுங் கழை நீள் மூங்கில் என இகழ்ந்தார், ஆட்டும் கொடுங் குழை போல, கொளின். |
53 |
பல்லும் வாயும் கண்ணும் மனமும் புருவமுமாகிய உறுப்பைந்தையுங் கண்டு அரியவர்க் கன்பாய் தாம் பல இடங்களினாடித் தங்கள் நிறையைக் காக்க மாட்டாதார் குவளையையுந் தாமரையையு மசைவிக்கின்ற காதிற் கொடுங் குழையையுடைய அரிவையை நெடிதாய்த் திரண்ட நீள்மூங்கிலைப் போலக் கருதி யிகழ்வராயின் அவர்க்கு நிறைகாக்கலாம்.
கருத்துரை: மனவுறுதியின்றிப் பெண்ணாசையால் ஓடித்திரிபவர், பெண்களின் பல்வாய் முதலிய ஐந்தையும் மூங்கிலின் தன்மையையுடையன எனக் கொண்டால், மூங்கில் என்று பெண் தன்மையை இகழந்து, பெண்விருப்பை நீக்கியவராய் விடுவர்.
பொன் பெறும், கற்றான்; பொருள் பெறும், நற் கவி; என் பெறும் வாதி, இசை பெறும்; முன் பெறக் கல்லார், கற்றார் இனத்தர் அல்லார், பெறுபவே, நல்லார் இனத்து நகை. |
54 |
கற்றுவல்லவன் பொன்னைப் பெறும், நற்கவி செய்யவல்லவன் அரசனாலே யெல்லாப் பொருளும் பெறும், வாதம் பண்ணி வெல்ல வல்லவன் யாது பெறும்மெனின் வென்றானென்னும் புகழைப்பெறும், முன்னே இளமைக்காலத்திலே கல்லாதாரும், கற்று வல்லாரினத் தல்லாதாரும் நல்லாரினத்தனடுவே இகழச்சி பெறுவர்.
கருத்துரை: கற்றான் பொன் பெறுவான், கவி பொருள் பெறுவான், வாதி இசை பெறுவான், கல்லாரும், அவரைச் சாராதவரும் இகழப்பெறுவர் என்பதாம்.
நல்ல வெளிப்படுத்து, தீய மறந்து ஒழிந்து, ஒல்லை உயிர்க்கு ஊற்றங்கோல் ஆகி, ஒல்லுமேல், மாயம் பிறர் பொருட்கண் மாற்றி, மா மானத்தான் ஆயின், அழிதல் அறிவு. |
55 |
பிறர் செய்த நன்மைகளை வெளிப்படப்பண்ணி, பிறர் செய்த தீமைகளை நினையாது மறந்தொழிந்து, பிறவுயிர்கட் கிடையூறு வந்தால் அவ்வுயிர்கட்கு விரைந்து ஊற்றங்கோலாகி, தனக்கியலுமாகிற் பிறர் பொருட்கண் வஞ்சனையைத் தவிர்ந்து, பெரிய மானங்காத்தற் பொருட்டாகத் தான் சாதல் தனக்கு அறிவாவது ஆராயின்.
கருத்துரை: நல்லன வெளிப்படுத்தல் முதலியவற்றை ஒருவன் செய்யக்கடவன். மறந்து என்னாது ‘மறந்தொழிந்து’ என்றமையால் மனத்து நினைத்தலுமாகாது என்றதாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, பெறும், கருத்துரை, இலக்கியங்கள், பிறர், சிறுபஞ்சமூலம், பெறுவான், பதினெண், கீழ்க்கணக்கு, பொன், கொடுங், மூங்கில், கற்றான், செய்த, மறந்து, தாம், வாதி, பொருள், பொருட்கண், தந்தை, உடன், பெண், உடைமை, பெறுதல், சங்க, தான், அவனுண்ணும், இவ்வைவரும், மகன், மாமன், என்பதாம், வாய்