சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு
நசை கொல்லார், நச்சியார்க்கு என்றும்; கிளைஞர் மிசை கொல்லார்; வேளாண்மை கொல்லார்; இசை கொல்லார்; பொன் பெறும் பூஞ் சுணங்கின் மென் முலையாய்! நன்கு உணர்ந்தார் என் பெறினும் கொல்லார், இயைந்து. |
46 |
தம்மை நச்சியாருடைய நசையை யெஞ்ஞான்றுங் கொல்லார், தங்கிளைஞர் மிசையும் மிசையைக் கொல்லார், உபகாரத்தைக் கொல்லார், புகழைக் கொல்லார், பொன்போலும் பூஞ்சுணங்கின் மென் முலையாய்! மிகவுமுணர்ந்தா ரெல்லாவின்பமும் பெற்றாராயினும் பிறிதோருயிரை மேவிக்கொல்லார்.
கருத்துரை: நன்குணர்ந்தார் நசை கொல்லார், கிளைஞர் மிசை கொல்லார், வேளாண்மை கொல்லார், இசை கொல்லார், ஓருயிரையுங் கொல்லார் என்பதாம்.
நீண்ட நீர், காடு, களர், நிவந்து விண் தோயும் மாண்ட மலை, மக்கள், உள்ளிட்டு, மாண்டவர் ஆய்ந்தன ஐந்தும், அரணா உடையானை வேந்தனா நாட்டல் விதி. |
47 |
மிக்க நீரும் காதும் சேறும் கிளர்ந்து விண்டோயு மாண்டமலையும் மக்களுமகப்பட வாய்ந்து சொல்லப்பட்ட வைந்தானுந் தனக்கரணாக வுடையானை வேந்தனா நாட்டத்தகும்.
கருத்துரை: நீராண் முதலிய ஐந்துவகை அரண் வலிமைகளையும் உடையான் ஒரு நாட்டுக்கு அரசனாக அமைதல் நன்மையாம்.
பொச்சாப்புக் கேடு; பொருட் செருக்குத்தான் கேடு; முற்றாமை கேடு; முரண் கேடு; தெற்றத் தொழில் மகன்தன்னொடு மாறுஆயின், என்றும் உழுமகற்குக் கேடு என்ற உரை. |
48 |
கடைப்பிடி யில்லாமை கேடு, பொருள் மிகவுடைமையார் களிக்குங் களிப்புக் கேடு, தானறிவு முதிராமை கேடு, பிறரொடு பகைகோடல் கேடு, தெளியத் தனக்குத் தொழில் செய்யு மகனோடு மாறுபட்டுச் சீறுவனாயின் உழவினால் வாழுமகற்குக் கேடாய்விடும்.
கருத்துரை: வேளாளனுக்குப் பொச்சாப்பு முதலியன கேடுதருவனவாம்.
கொல்லாமை நன்று; கொலை தீது; எழுத்தினைக் கல்லாமை தீது; கதம் தீது; நல்லார் மொழியாமை முன்னே, முழுதும் கிளைஞர் பழியாமை பல்லார் பதி. |
49 |
ஓருயிரைக் கொல்லாமை நன்று, கொலை தீது, எழுத்தினைக் கல்லாமை தீது, பிறரை வெகுளல் தீது, அறிவுடையார் தமக்கு மொழிவதற்கு முன்னேயும் பழியாத வழியொழுகுவான் பலர்க்கு மிறைவனாவான்.
கருத்துரை: பலர்க்குந் தலைவனாவானொருவன் சான்றோர் அறிவு சொல்லுக்கு முன்னமேயே தானேயுணர்ந்து கினைஞரைப் பழியாமை முதலியன அவற்கு நன்மையாம்.
உண்ணாமை நன்று, அவா நீக்கி; விருந்து கண்மாறு எண்ணாமை நன்று; இகழின், தீது, எளியார்; எண்ணின், அரியர் ஆவார் பிறர் இல் செல்லாரே; உண்ணார், பெரியர் ஆவார், பிறர் கைத்து. |
50 |
துறந்தவா நீக்கி யுண்ணாமை நோற்றனன்று, மனைவாழ்க்கையின்கண் அறிவாராயின் விருந்துனரைக் கண்மாறுத னினையாமை நன்று, தமக்கெளியாரை யிகழ்ந்துரைப்பா ராயிற் றீதாம், ஆராயிற் பெறுதற் கரியராவார் பிறர் மனையாளை விரும்பி யொழுகாதார், பெரியராவார் பிறரை யிரந்துண்ணாதார்.
கருத்துரை: அவாவை யொழித்துத் துறந்து உண்ணாது நோற்றல் நன்மை, விருந்தினரைக் கண்ணோட்டஞ் செய்தல் நன்மை, எளியாரை யிகழ்தல்தீமை, பிறர் மனைநோக்காதவர் அரியர், பிறர் பொருளுண்ணாதவர் பெரியர் என்பதாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 21 | 22 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சிறுபஞ்சமூலம் - பதினெண் கீழ்க்கணக்கு, கொல்லார், கேடு, தீது, பிறர், கருத்துரை, நன்று, இலக்கியங்கள், கீழ்க்கணக்கு, சிறுபஞ்சமூலம், கிளைஞர், பதினெண், கல்லாமை, பழியாமை, எழுத்தினைக், நீக்கி, பெரியர், நன்மை, ஆவார், அரியர், கொலை, பிறரை, தொழில், வேளாண்மை, மிசை, என்றும், சங்க, மென், முலையாய், முதலியன, நன்மையாம், வேந்தனா, என்பதாம், கொல்லாமை