பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
பாரதத் துள்ளும், பணையம் தம் தாயமா, ஈர்-ஐம்பதின்மரும் போர் எதிர்ந்து, ஐவரொடு ஏதிலர் ஆகி, இடை விண்டார்; ஆதலால், காதலரொடு ஆடார் கவறு. |
356 |
பாரதநூலுள்ளும் பந்தயப் பொருள் தம்முடைய தாயப்பொருளாகக் கொண்டு நூற்றுவரும் ஐவரோடும் சூதுப்போர் செய்து (அது காரணமாகப்) பகைவராகி இடைக்காலத்திலேயே தம்முயிரை நீக்கிக்கொண்டார்களென்றும் கேட்கப்படுதலால் அன்புடையவரோடு விளையாட்டாகவாயினும் சூதாடுதலிலர்அறிவுடையார்.
கருத்து: சூதாடல் உயிர்க்கிறுதியைத் தருவதாம்.
32. அறம் செய்தல்
சிறந்த நுகர்ந்து ஒழுகும் செல்வம் உடையார் அறம் செய்து அருள் உடையர் ஆதல்,-பிறங்கல் அமையொடு வேய் கலாம் வெற்ப!-அதுவே, சுமையொடு மேல் வைப்பு ஆமாறு. |
357 |
பிறங்கல் அமையொடு வேய் கலாம் வெற்ப மலையில் மூங்கிலுடனே வேய்கள் நெருங்கி இணங்கி நிற்கும் வெற்பனே! சிறந்தனவாகிய இன்பங்களை அடைந்து இன்புற்றொழுகும் பொருளுடையவர்கள் அறங்களைச்செய்து யாவர்மாட்டும் அருள் உடையவராகி ஒழுகுதலாகிய அச்செயலே ஒருவன் பொற்சுமையொடு அதன் மேலே மணிச் சுமையையும் வைத்துச் சுமந்து செல்லுதலை யொக்கும்.
கருத்து: செல்வ முடையார் அறமும் அருளும்உடையவராகுக.
வைத்தனை வைப்பு என்று உணரற்க! தாம் அதனைத் துய்த்து, வழங்கி, இரு பாலும் அத் தகத் தக்குழி நோக்கி, அறம் செய்யின்-அஃது அன்றோ, எய்ப்பினில் வைப்பு என்பது. |
358 |
தான் தேடி வைத்த பொருளைப் பின்னர் வந்து பயன்படுவதாகக் கருதற்க தாம் அப்பொருளை நுகர்ந்தும் பிறருக்குக் கொடுத்தும் இருமைக்கும் அழகுண்டாகுமாறு செய்யத்தகுந்த இடம் நோக்கி அறங்களைச்செய்யின் தளர்ந்த காலத்து உதவும் பொருள்என்பது அதுவன்றோ?
கருத்து: அறமே எய்ப்பினில்வைப்பாம்.
மல்லல் பெருஞ் செல்வம் மாண்டவர் பெற்றக்கால், செல்வுழியும் ஏமாப்பச் செய்வதாம்;-மெல் இயல், சென்று ஒசிந்து ஒல்கு நுசுப்பினாய்!-பைங் கரும்பு மென்றிருந்து, பாகு செயல். |
359 |
மென்மையான சாயலையும் தளர்ந்து துவண்டு வளையும் இடையினையும் உடையாய் வளமையைத் தரும் மிக்க செல்வத்தை மாட்சிமையுடையார் பெற்றால் இனிச் செல்லுகின்ற மறுமையிலும் இன்புறுமாறு அதற்கான அறத்தைச் செய்துகொள்வது பசிய கரும்பினைச் சுவைத்தறிந்து மேலும் சுவைக்கப் பாகு செய்து கொள்ளுதலை யொக்கும்.
கருத்து: பொருள் பெற்றால் இம்மைக்கும் மறுமைக்கும் -ஆவனவாகிய அறத்தை அதனைக்கொண்டு செய்துகொள்க.
ஈனுலகத்துஆயின், இசை பெறுஉம்; அஃது இறந்து, ஏனுலகத்துஆயின், இனிது, அதூஉம்; தான் ஒருவன் நாள்வாயும் நல் அறம் செய்வாற்கு இரண்டு உலகும் வேள் வாய் கவட்டை நெறி. |
360 |
அறஞ் செய்கின்ற ஒருவன் ஈனுலகத்தாயின் இசை பெறும் இவ்வுலகின் திறத்து ஆராய்வோமாயின் புகழினைப் பெறுவான் இவ்வுலகினின்றும் நீங்கி மறுமை யுலகத்தின்கண் சென்றானாயின் அவ்வுலகமும் இனிதாக ஆகும். (ஆதலின்) நாள்தோறும் நன்மையைப் பயக்கும் அறங்களைச் செய்கின்றவனுக்கு இரண்டுலகி னின்பமும் கவட்டை நெறியின்கண் உளவாகிய கலியாணங்களைப் போலும்.
கருத்து: இம்மை மறுமை இன்பங்களை அறம் எய்துவித்தலால், அதனைநாள்தோறும் செய்க.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 70 | 71 | 72 | 73 | 74 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, அறம், இலக்கியங்கள், நானூறு, ஒருவன், பதினெண், பழமொழி, செய்து, வைப்பு, கீழ்க்கணக்கு, நோக்கி, தாம், யொக்கும், பெற்றால், மறுமை, கவட்டை, பாகு, தான், அஃது, வேய், செல்வம், பொருள், சங்க, அருள், பிறங்கல், வெற்ப, கலாம், அமையொடு, இன்பங்களை