பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

மெய்யா உணரின், பிறர் பிறர்க்குச் செய்வது என்?- மை ஆர் இருங்கூந்தல் பைந்தொடி!-எக்காலும் செய்யார் எனினும், தமர் செய்வர்; பெய்யுமாம், பெய்யாது எனினும், மழை. |
351 |
கருமை நிறைந்த நீண்ட கூந்தலையும் பசிய தொடியினையும் உடையாய்! உண்மையாக ஆராயின் உறவினரல்லாதோர் பிறருக்குச் செய்யப் போவது என்ன இருக்கின்றது? ஒரு காலத்தும் செய்யமாட்டார் என்று கருதும்படி இருந்தாரேயாயினும் உறவினரே ஒரு நன்மையைச் செய்வார்கள் குறித்த ஒருபருவகாலத்தில் பெய்யாதொழியினும் பின்னையும் பெய்வதுமழையேயாதலான்.
கருத்து: உறவினரே தமக்குற்ற துன்பத்தை நீக்கும் உரிமையுடையவராதலால், அவரோடு சேர்ந்தொழுக என்றது இது.
முன் இன்னார் ஆயினும், மூடும் இடர் வந்தால், பின் இன்னார் ஆகிப் பிரியார், ஒரு குடியார்; பொன்னாச் செயினும், புகாஅர்-புனல் ஊர!- துன்னினார் அல்லர், பிறர். |
352 |
நீர்நாடனே! ஒரு குடியிற் பிறந்தவர்கள் முன்னர் இனிமையுடையவ ரல்லராயிருப்பினும் மிக்க துன்பம் வந்துற்றவிடத்து பின்னரும் இனிமையுடையரல்லராகிப் பிரிந்திரார் ஒரு குடிப்பிறந்தவ ரல்லவராகிய பிறரை பொன்போலப் போற்றிச் செயினும் தமக்கு இடர் வந்த ஞான்று அதனைநீக்கப் புகுதலிலர்.
கருத்து: ஒரு குடியிற் பிறந்தவர்கள் தம்முள் ஒருவர்க்குத்துன்பம் வந்துற்றபொழுது மாறுபாடு நீங்கி உதவி செய்வர்என்பதாயிற்று.
உளைய உரைத்து விடினும், உறுதி கிளைகள் வாய்க் கேட்பது நன்றே;-விளை வயலுள் பூ மிதித்துப் புள் கலாம் பொய்கைப் புனல் ஊர!- தாய் மிதித்த ஆகா முடம். |
353 |
நெல் விளைகின்ற கழனியுள் பூக்களை மிதித்து பறவைகள் தம்மிற் கூடி மகிழும் குளங்களையுடைய நீர் நாடனே தாயால் மிதிக்கப்பட்ட கால் முடம்படுதல் இல்லை. (ஆதலால்) மனம் நோவுமாறு உரைப்பராயினும் உறுதியாயினவற்றை சுற்றத்தாரிடத்துக் கேட்டறிதலே நல்லது.
கருத்து: சொற்கொடுமை நோக்காதுஉறுதியாயினவற்றை உறவினரிடத்துக் கேட்டறிக.
தன்னை மதித்து, தமர் என்று கொண்டக்கால், என்ன படினும், அவர் செய்வ செய்வதே;- இன் ஒலி வெற்ப!-இடர் என்னை? துன்னூசி போம் வழிப் போகும், இழை. |
354 |
இனிய ஓசையை உடைய மலைநாடனே! ஒருவன் தன்னை மதித்துச் சுற்றத்தாராகக் கருதி ஒழுகியவிடத்து எல்லாத் துன்பமும் வந்து பொருந்தியதாயினும் சுற்றத்தார் செய்யும் உறுதியாயினவற்றைத் தாமும் செய்வதே தைக்கின்ற ஊசி போகின்றவழியே செல்லும் நூலிழையை ஒக்கும்; வரும் குற்றம் யாதுளது?
கருத்து: உறவாக மதித்தார்க்குஉறவாய் நின்று உறுதி செய்க.
கருவினுள் கொண்டு கலந்தாரும், தம்முள் ஒருவழி நீடும் உறைதலோ, துன்பம்;- பொரு கடல் தண் சேர்ப்ப!-பூந் தாமரைமேல் திருவொடும் இன்னாது, துச்சு. |
355 |
கரையொடு மாறு கொள்ளும் கடலையுடைய குளிர்ந்த நெய்தல் நாட! அழகிய தாமரையிடத்து வாழும் இலக்குமியேயாயினும் நெடுநாள் உடனுறைதல் துன்பந் தருவதாம்; (அதுபோல) கருவினுள் தங்கியபொழுதே தொடங்கிக் கலந்தவர்களும் தமக்குள்ளே ஓர் இடத்தில் நீண்டநாளும் ஒருங்கே தங்கியிருந்து வாழுதல் துன்பம் தருவதாம்.
கருத்து: உடன்பிறந்தாராயினும் ஒரே இடத்தில் நீண்ட நாள்தங்கியிருத்தல் ஆகாது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 69 | 70 | 71 | 72 | 73 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், இடர், துன்பம், கீழ்க்கணக்கு, நானூறு, பதினெண், பழமொழி, பிறந்தவர்கள், தம்முள், செய்வதே, தருவதாம், இடத்தில், கருவினுள், குடியிற், தன்னை, உறுதி, இன்னார், எனினும், பிறர், சங்க, தமர், நீண்ட, செயினும், உறவினரே, என்ன, புனல்