பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
நாடி, 'நமர்' என்று நன்கு புரந்தாரைக் கேடு பிறரோடு சூழ்தல்,-கிளர் மணி நீடு அகல் வெற்ப!-நினைப்பு இன்றி, தாம் இருந்த கோடு குறைத்து விடல். |
346 |
விளங்குகின்ற மணிகள் பொருந்திய நீண்ட கற்பாறைகளையுடைய மலை நாடனே! ஆராய்ந்து நம்மவர் என்று கருதி வேண்டியன உதவி நன்றாகக் காப்பாற்றியவர்களை காப்பாற்றப்பட்டவர்கள் அவர்க்குச் செய்யத்தக்க தீமையை அவர் பகைவரோடு சேர்ந்து எண்ணுதல் ஒருவன் உணர்வின்றித் தான் தங்கியிருந்த கோட்டின் அடியை வெட்டி வீழ்த்தி உயிர்விடுதலை யொக்கும்.
கருத்து: செய்த உதவியை மறந்து தீமை செய்பவன் பற்றுக்கோடின்றி அழிவது விதி.
'பண்டு இன்னார்' என்று தமரையும், தம்மையும், கொண்ட வகையால் குறை தீர நோக்கியக்கால், விண்டவரோடு ஒன்றிப் புறன் உரைப்பின்,-அஃது அன்றோ, உண்ட இல் தீ இடுமாறு. |
347 |
முன்பு இத்தன்மையுடையார் என்று தஞ் சுற்றத்தாரையும் தன்னையும் ஏற்றுக்கொண்ட சிறப்பு வகையாலேயே குறை தீருமாறு நோக்கியவிடத்து நோக்கப்பட்டார் வேர் பகைவரோடு சேர்ந்து புறங்கூறுதலுறின் இனிய உணவு ஏற்ற அவ்வீட்டிலேயே நெருப்புஇடுமாற்றை ஒப்பது அதுவேயாம்.
கருத்து: செய்ந்நன்றி கோறல்பழிக்குக் காரணமாம்.
31. உறவினர்
தமக்கு உற்றதே ஆகத் தம் அடைந்தார்க்கு உற்றது எமக்கு உற்றது என்று உணரா விட்டக்கால், என் ஆம்?- இமைத்து அருவி பொன் வரன்றும் ஈர்ங் குன்ற நாட!- உமிக் குற்றுக் கை வருந்துமாறு. |
348 |
அருவிகள் விட்டு விளங்கிப் பொன்னைக் கொழித்து இழியும் குளிர்ச்சி பொருந்திய மலைநாடனே! தம்மை ஒரு பொருளாகக்கொண்டு அடைந்தவர்களுக்குற்ற தீமை தம்மை அடைந்ததாகவே நினைத்து அதனான் வரும் துன்பமும் எம்மை யடைந்ததேயாம் என்று அறிதலின்றி அதனைக் களையாது விட்டவிடத்து அவர் என்ன ஆவர்? உமியைக் குற்றுதலான் கை வருந்துமாற்றை யொக்கும்.
கருத்து: தம்மை யடைந்தாரைத் தாம்காத்தல் வேண்டும்.
சேர்ந்தார் ஒருவரைச் சேர்ந்து ஒழுகப் பட்டவர் தீர்ந்தாராக் கொண்டு தெளியினும், தேர்ந்தவர்க்குச் செல்லாமை காணாக்கால், செல்லும்வாய் என் உண்டாம்?- எல்லாம் பொய்; அட்டு ஊணே வாய். |
349 |
தம்மை அடைந்தாராகிய ஒருவரை அவரா லடைந்து ஒழுகப்பட்டவர் தொடர்புஇல்லாதவராகக் கொண்டு தெளிய அறியினும் ஆராய்ந்து விட்டு நீங்குதலில்லா வறுமையை நீக்க அறியானாயின் அவனுக்குச் செல்லும் நெறி வேறு யாதுளது? எல்லாம் பொய் - (உணவு அளித்தலை நோக்க ஏனைய எல்லா அறங்களும் பொய்) சமைத்துச் செய்த உணவை இடுமறமேமெய்யாமாதலின்.
கருத்து: எல்லா அறங்களுள்ளும்உணவளித்தலே சிறந்த அறமாகக் கருதப்படும்.
அல்லல் ஒருவர்க்கு அடைந்தக்கால், மற்று அவர்க்கு நல்ல கிளைகள் எனப்படுவார், நல்ல வினை மரபின், மற்று அதனை நீக்குமதுவே மனை மரம் ஆய மருந்து. |
350 |
ஒருவர்க்குத் துன்பம் வந்தமையுமானால் அவருக்கு நெருங்கிய உறவினர் என்று சொல்லப்படுபவர்கள் நல்ல செயல் முறையான் அத் துன்பத்தை நீக்க முற்படுக அச்செயல் இல்லின்கண் உள்ள மரமாகிய மருந்தினையொக்கும்அல்லலுற்றார்க்கு.
கருத்து: அல்லலுற்ற காலத்துஅவ்வல்லலை நீக்குபவரே சுற்றத்தார் எனப்படுவார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 68 | 69 | 70 | 71 | 72 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், தம்மை, பழமொழி, பொய், சேர்ந்து, நல்ல, பதினெண், நானூறு, கீழ்க்கணக்கு, விட்டு, கொண்டு, எல்லாம், எல்லா, எனப்படுவார், மற்று, உற்றது, நீக்க, தீமை, அவர், ஆராய்ந்து, பொருந்திய, சங்க, பகைவரோடு, யொக்கும், உணவு, குறை, செய்த, உறவினர்