பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
நன்றே, ஒருவர்த் துணையுடைமை; பாப்பு இடுக்கண் நண்டேயும் பார்ப்பான்கண் தீர்த்தலான்,-விண் தோயும் குன்றகல் நல் நாட!-கூறுங்கால், இல்லையே, ஒன்றுக்கு உதவாத ஒன்று. |
341 |
ஆகாயத்திற் பொருந்தும் குன்றுகள் அகன்ற நல்ல நாடனே! ஒருவர் ஒருவரைத் துணையாகக் கொள்ளுதல் நல்ல தொன்றே; பாம்பான் வரக்கடவதொரு துன்பத்தை பார்ப்பானிடத்துத் துணையாக வந்திருந்தது சிறிய நண்டேயாயினும் (அதனை) நீக்குதலால் சொல்லுமிடத்து ஒன்றிற்கும் உதவாத ஒரு சிறு பொருளும்இல்லை.
கருத்து: துணைபெற்று வழிச்செல்லுதல்நல்லது.
விடல் அரிய துப்புடைய வேட்கையை நீக்கி, படர்வு அரிய நல் நெறிக்கண் நின்றார், இடர் உடைத்தாய்ப் பெற்ற விடக்கு நுகர்தல்,-கடல் நீந்தி, கற்று அடியுள் ஆழ்ந்துவிடல். |
342 |
விடுதற்கரிய வலிமை உடைய பற்றினை முற்ற அறுத்து ஒழுகுதற்கரிய நல்ல துறவற நெறியின்கண் நின்றவர்கள் பசி நோய் வந்துற்றதாக அதன் பொருட்டுத் தானே வந்துற்ற புலாலை உண்ணுதல் கடலினை நீந்திக் கன்றினது குளம்படி நீரினுள் அமிழ்ந்துவிடுவதை யொக்கும்.
கருத்து: துறவற நெறியில் நின்றார் எக்காலத்தும் புலால்உண்ணல் ஆகாதாம்.
செறலின் கொலை புரிந்து, சேண் உவப்பர் ஆகி, அறிவின் அருள் புரிந்து செல்லார், பிறிதின் உயிர் செகுத்து, ஊன் துய்த்து, ஒழுகுதல்-ஓம்பார், தயிர் சிதைத்து, மற்றொன்று அடல். |
343 |
பிற உயிர்களுக்கு அறிவினால் அருள்செய்து மறுமை இன்பத்தையடையாராகி அறிவின் மயக்கத்தால் உயிர்களைக் கொலைசெய்து மறுமை இன்பத்தை அடையப்போவதாக மன முவப்புடையராகி (ஊன் கொண்டு வேட்டால் மறுமை யடைதல் உறுதியென்று) அதன் பொருட்டுப் பிறிதொன்றனது இனிய உயிரை நீக்கி புலாலை மனம் பொருந்தி உண்டு ஒழுகுதல் உடலைப் பாதுகாவாதார் சுவை கருதித் தயிரினை அழித்து மற்றோருணவாக மாற்றிச் சமைத்தலோ டொக்கும்.
கருத்து: வேள்விக்கண்ணும்கொலைபுரிதல் தீதாம்.
நன்கு ஒன்று அறிபவர், நாழி கொடுப்பவர்க்கு என்றும் உறுதியே சூழ்க!-எறி திரை சென்று உலாம் சேர்ப்ப!-அது போல, நீர் போயும், ஒன்று இரண்டாம் வாணிகம் இல். |
344 |
வீசுகின்ற அலைகள் மிக்குச்சென்று கரைமேல் உலாவுகின்ற கடல் நாடனே! நன்றாக ஒரு பொருளின் கூறுபாட்டை அறிகின்றவர்கள் நாழி அரிசியேயாயினும் அதனைக் கொடுக்கின்றவர்களுக்கு எக்காலத்தும் அவர்க் குறுதி தரத்தக்கனவற்றையே நினைக்கக்கடவாராக கடல் கடந்து சென்று ஒன்று கொண்டு இரண்டாகப் பெருக்கும்வாணிகமும் அதைப்போல ஆவதில்லை.
கருத்து: நீ, நன்மை செய்தார்க்கு எக்காலத்தும் நன்மை செய்யும் விருப்புடையவனாக இரு. அதனால் மிகுந்தநன்மை உண்டாம்.
'தமன்' என்று இரு நாழி ஈத்தவன் அல்லால், 'நமன்' என்று, காயினும், தான் காயான், மன்னே, 'அவன் இவன்' என்று உரைத்து எள்ளி;-மற்று யாரே, நம நெய்யை நக்குபவர்? |
345 |
தம்முடைய சுற்றத்தானென்று கருதி இருநாழி அரிசியைக் கொடுத்தவன் வெகுளினும் வெகுள்வதன்றி சுற்றத்தான் என்பது கருதி அவன் என்றும் இவன் என்றும் இகழ்ந்து கூறி நகையாடி நன்றியறிதலுடையான் மனவெறுப்புக்கொள்ளான் மந்திரங் கூறிக் குண்டத்திலிட வைத்த ஆனெய்யை நக்கிச் சுவை பார்ப்பார் யாவர்? (ஒருவருமிலர்.)
கருத்து: ஒருவன் தனக்கு உதவி செய்தவன் காய்வானாயினும் தான் காய்தலை யொழிக என்றது இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 67 | 68 | 69 | 70 | 71 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, ஒன்று, இலக்கியங்கள், பழமொழி, கடல், என்றும், நாழி, எக்காலத்தும், நானூறு, மறுமை, நல்ல, கீழ்க்கணக்கு, பதினெண், சுவை, கொண்டு, கருதி, இவன், தான், நன்மை, சென்று, அவன், துறவற, அரிய, நாடனே, உதவாத, சங்க, நீக்கி, நின்றார், அறிவின், புரிந்து, புலாலை, ஒழுகுதல்