பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

எந் நெறியானும் இறைவன் தன் மக்களைச் செந் நெறிமேல் நிற்பச் செயல் வேண்டும்; அந் நெறி- மான் சேர்ந்த நோக்கினாய்!-ஆங்க; அணங்கு ஆகும், தான் செய்த பாவை தனக்கு. |
331 |
மானை யொத்த பார்வையை உடையாய்! தந்தை தன் குழந்தைகளை எல்லாவற்றானும் செம்மையாகிய நல்ல வழியில் நிற்குமாறு அறிவு கொளுத்துதல் வேண்டும்; தன்னால் நிலைநிறுத்தப்பட்ட படிவம் தனக்கே தெய்வமாகும் செந்நெறியில் நிற்பச்செய்தல் தெய்வமாந் தகுதியைப் போலாம்ஆதலான்.
கருத்து:மக்களுக்கு அறிவு ஊட்டுதல் தந்தை கடனாம்.
ஒக்கும் வகையால் உடன் பொரும் சூதின்கண் பக்கத்து ஒருவன், ஒருவன்பால் பட்டிருக்கும்;- மிக்க சிறப்பினர் ஆயினும், தாயர்க்கு மக்களுள் பக்கமோ வேறு. |
332 |
ஒக்கும்படி சிலருடன் கூடி விளையாடும் சூதாட்டிடத்து பக்கத்திலே இருந்து ஒருவன் ஒருவனைச் சார்ந்து வேண்டியன கூறிக்கொடுப்பான்; (அதுபோல) மக்கள் எல்லோரும் மிகுந்த சிறப்புடையவராகக் கருதப்படுவாரேயாயினும் தாய்மார்களுக்கு மக்களுள்ளும் கல்வி யறிவான் மிக்காரிடத்து அன்பு தனிச் சிறப்புடையதாக இருக்கும்.
கருத்து: கல்வி யறிவான் மிக்க மக்களைத் தாயர் பெரிதும் விரும்புவர்.
தொடித் தோள் மடவார் மருமந்தன் ஆகம் மடுத்து, அவர் மார்பில் மகிழ்நன் மடுப்ப, நெறி அல்ல சொல்லல் நீ, பாண!-அறி துயில் ஆர்க்கும் எடுப்பல் அரிது. |
333 |
தொடியணிந்த தோள்களையுடைய பரத்தையர் மார்பினை தன் மார்பில் சேர்த்து அப்பரத்தையர் மார்பில் தலைவன் சேர பாணனே! நீ இங்ஙனம் ஒழுகுதல் நெறியன்றென்று தலைவனிடத்துச் சொல்லுதலை ஒழிவாயாக; பொய்த்துயிலினின்றும் ஒருவரை நீக்குதல் யாரானும் முடியாதாம்.
கருத்து: பாணனுக்குத் தலைமகள் வாயில்மறுத்துக் கூறியது.
விழும் இழை நல்லார் வெருள் பிணைபோல் நோக்கம் கெழுமிய நாணை மறைக்கும்; தொழுதையுள், மாலையும் மாலை மறுக்குறுத்தாள்;-அஃதால், சால்பினைச் சால்பு அறுக்குமாறு. |
334 |
எல்லோரானும் விரும்பப்படும் பொற்கல னணிந்த பெண்களுடைய வெருண்ட மான்போன்ற நோக்கங்கள் (ஆடவருடைய) செறிந்த நாணினைத் தோன்றாமல் மறைக்க வல்லதாம்! யமுனையின் கண்ணே திருமாலையும் பின்னை யென்பாள் தன்னழகினால் மயங்கச் செய்தாள்; அது மிகுதியினை மிக்க தொன்றனால் அறுக்கு மாற்றைஒக்கும்.
கருத்து: அறிவான் மிக்கார்மகளிரைச் சார்ந்தொழுகல் கூடாது.
தூய்மை மனத்தவர், தோழர் மனையகத்தும், தாமே தமியர் புகல் வேண்டா; தீமையான் ஊர் மிகின், இல்லை, கரியோ;-ஒலித்து உடன் நீர் மிகின், இல்லை, சிறை. |
335 |
தூய்மையான மனத்தை உடையவர்கள் நண்புடையார் இல்லின் கண்ணும் தாமாகத் தனித்துச் செல்லுதல் வேண்டா இவன் தீயசெயல் செய்தான் என்று ஊரிலுள்ளார் மிகுத்துக் கூறுவாராயின் செய்யவில்லை என்று சான்று கூறுவார் ஒருவரும் இலர் ஓசையுடனே நீர் மிகுமாயின் அதனைத் தடுத்து நிற்கும் அணைஇல்லையாதல்போல.
கருத்து: நல்லோர் தோழர் மனையிடத்தும் தனியாகப் புகுதல் கூடாது என்றது இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 65 | 66 | 67 | 68 | 69 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், நானூறு, மிக்க, மார்பில், கல்வி, பழமொழி, பதினெண், கீழ்க்கணக்கு, தோழர், கூடாது, வேண்டா, மிகின், நீர், இல்லை, நெறி, யறிவான், சங்க, அறிவு, உடன், ஒருவன், வேண்டும், தந்தை