பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
இரு கயல் உண் கண் இளையவளை, வேந்தன், 'தருக!' என்றால் தன்னையரும் நேரார்; செரு அறைந்து, பாழித் தோள் வட்டித்தார்; காண்பாம்; இனிது அல்லால், வாழைக்காய் உப்பு உறைத்தல் இல். |
326 |
இரண்டு கயல்கள் போன்ற மையுண்ட கண்களையுடைய இளமைப் பருவமுடையாளை அரசன் கொடுப்பாயாக என்று தூது விட்டால் இவள் தமையன்மாரும் கொடுத்தற்கு உடம்படாராகி போர்ப்பறை அறைவித்து வலிமையுடைய தோள்களைப் பிசைந்து நின்றார்கள் உறுதியாக வெற்றியைக் காணுதலுறுவோம் இனிமையாக இருப்பதல்லாமல் எக்காலத்தும் வாழைக்காய்இயல்பாய் உவர்ப்போடு கூடி நிற்றல் இல்லையாதலான்.
கருத்து: அரசன் மகள் வேண்டினானாக, அவள் தமையன்மார் சினந்து போருக்குஎழுந்தனர்.
30. இல்வாழ்க்கை
நாண் இன்றி ஆகாது, பெண்மை; நயவிய ஊண் இன்றி ஆகாது, உயிர் வாழ்க்கை; பேணுங்கால், கைத்து இன்றி ஆகா, கருமங்கள்;-காரிகையாய்!- வித்து இன்றிச் சம்பிரதம் இல். |
327 |
அழகுடையாய்! பெண்மைக்குணம் நாணின்றி உண்டாகாது; பேணுங்கால் - காப்பாற்றுமிடத்து நலம் மிகுந்த உணவு இல்லாது உயிர் வாழ்ந்திருத்தல் முடியாது; கருமங்கள் கைத்து இன்றி ஆகா - செயல்கள் கைப்பொருள் இல்லாது முடிதல் இல்லை; வித்து இன்றி சம்பிரதம் இல் - விதையின்றி விளைவும்இல்லை.
கருத்து: பெண்களுக்கு நாண் வேண்டும் என்றது இது.
உரிமைதனில் தம்மோடு உழந்தமை கண்டு, பிரிவு இன்றிப் போற்றப் படுவார்; திரிவு இன்றித் தாம் பெற்றதனால், உவவார்; பெரிது அகழின், பாம்பு காண்பாரும் உடைத்து. |
328 |
வேறுபாடின்றிக் காப்பாற்றப்படுபவர்கள் நட்புரிமையால் தம்மோடு வருந்தினமையைப் பார்த்து மன வேறுபாடின்றி தாம் பெற்ற பொருளால் மனமகிழ்தலிலராய்ப் பின்னும் விரும்பாநிற்பர் புற்றினை மிகவும் கீழே தோண்டிச் சென்றால் (அதனால்) பாம்பைக் காண்கின்றவர்களையும் மிகுதியாக உடைத்தாயிரா நின்றதுஇவ்வுலகம்
கருத்து: செய்தது கொண்டுஉவத்தலே நட்பிற் கழகாம்.
அகத்தால் அழிவு பெரிது ஆயக்கண்ணும், புறத்தால் பொலிவுறல் வேண்டும்;-எனைத்தும் படுக்கை இலராயக்கண்ணும், உடுத்தாரை உண்டி வினவுவார் இல். |
329 |
படுத்தற்கு ஒரு சிறிய இடம் இலராயவிடத்தும் சிறப்புற ஆடை உடுத்தாரை வறியராகக் கருதி உண்டிவேண்டுமோ என்று கேட்பார் ஒருவருமிலர். (ஆதலால்) மனையின்கண் வறுமை மிக்க இடத்தும் எப்படியாயினும் புறத்தோற்றத்தால் பொலிவுற்றுவிளங்குதல் வேண்டும்.
கருத்து: புறத்தோற்றப் பொலிவும்வேண்டப்படுவதொன்றாகும்.
சொல்லாமை நோக்கிக் குறிப்பு அறியும் பண்பின் தம் இல்லாளே வந்த விருந்து ஓம்பி, செல்வத்து இடர் இன்றி ஏமாந்திருந்தாரே, நாளும் கடலுள் துலாம் பண்ணினார். |
330 |
தான் கூறுவதற்கு முன்னரே முகம் நோக்கி மனக் குறிப்பினை அறியும் பண்பினை உடைய தன் மனைவியே வந்த விருந்தினர்களுக்கு வேண்டுவன செய்து ஓம்ப அதனால் செல்வத்தின்கண் துன்பமின்றி இன்பமுற்று வாழ்ந்தவர்களே நாடோறும் கடலிலுள்ள நீரைத் துலா இட்டு இறைப்பவரோ டொப்பர்.
கருத்து: குறிப்பறிதலும், விருந்தோம்பலுமுடையஇல்லாளோடு செல்வத்துடன வாழ்பவர்களே நீங்காதஇன்பமுடையார்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 64 | 65 | 66 | 67 | 68 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, இன்றி, கருத்து, இலக்கியங்கள், பழமொழி, நானூறு, வேண்டும், கீழ்க்கணக்கு, பதினெண், தம்மோடு, பெரிது, தாம், உடுத்தாரை, வந்த, அறியும், இல்லாது, அதனால், பேணுங்கால், நாண், அரசன், சங்க, ஆகாது, உயிர், வித்து, கருமங்கள், கைத்து, சம்பிரதம்