பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

உருத்து எழு ஞாட்பினுள், ஒன்னார் தொலைய, செருக்கினால் செய்கல்லார் செய்வாரே போல, தருக்கினால் தம் இறைவன் கூழ் உண்பவரே- கருக்கினால் கூறை கொள்வார். |
321 |
சினந்து எழுந்த போரிடத்து பகைவர் அழியுமாறு வீரத்தாற் போர் செய்ய ஆற்றாராகி செய்யும் ஆற்றலுடையாரைப் போல தருக்கித் தம்மை மிகுத்துக் கூறுதலினால் தம் மரசனிடத்து உணவுபெற்று வாழ்கின்றவர்கள் மேனியழகால் ஆடையைப் பெறுகின்ற (ஆடல் வன்மை பெறாத)நாடகக் கணிகையரை ஒப்பர்.
கருத்து: ஆற்றலொரு சிறிதுமின்றி மிகுத்துக் கூறுதலானே உணவுபெறும்வீரர்கள் மேனியழகா லாடையைப் பெறும் கணிகையரைஒப்பர்.
'அமர் விலங்கி, ஆற்ற அறியவும்பட்டார் எமர், மேலை இன்னரால்; யார்க்கு உரைத்தும்' என்று, தமர் மறையால் கூழ் உண்டு சேறல் அதுவே- மகன் மறையாத் தாய் வாழுமாறு. |
322 |
போரிடை நின்று பகைவரைப் போர் செய்து நீக்கி மிகவும் எல்லோரானும் அறிந்துகொள்ளவும் பட்டார்கள் முற்காலத்தில் எம் முன்னோர் இத்தன்மையரா யிருந்தனர் இவற்றை யாரிடத் துரைப்பேம் என்று கூறாமற்கூறி தம் முன்னோருடைய புகழ் மறைவினால் மறைந்து நின்று உணவு உண்டு செல்லுதலாகிய அது தான் பெற்ற மகனால் தனது அமையா ஒழுக்கத்தை மறைத்துக் கற்பமையா தாள் கணவனோடு வாழுமாற்றைஒக்கும்.
கருத்து:ஆற்றலில்லாத வீரர்கள் பழைமை பேசி உணவு பெறுதல்இகழத்தக்கதாம்.
உறுகண் பலவும் உணராமை கந்தா, தறுகண்மை ஆகாதாம் பேதை, 'தறுகண் பொறிப் பட்ட ஆறு அல்லால், பூணாது' என்று எண்ணி, அறிவு அச்சம் ஆற்றப் பெரிது. |
323 |
அறிவு இல்லாதவன் வெற்றி புண்ணியம் உண்டாய வழியல்லாது உண்டாகாது என்று நினைத்து அறிவான் வரும் அச்சம் மிகுதியும் உடையவனாதலால் தனக்கு வந்துறும் துன்பங்களை உணரத்தக்க அறிவின்மையை பற்றுக்கோடாகக் கொண்டுவரும் அஞ்சாமை செய்தொழுகலின் தறுகண்மை உடையவனாக ஆக மாட்டான்.
கருத்து: வீரர்க்கு அறிவாற்றலும் இன்றியமையாத தொன்றென்பது இது.
தன்னின் வலியானைத் தான் உடையன் அல்லாதான், என்ன குறையன், இளையரால்?-மன்னும் புலியின் பெருந் திறல ஆயினும், பூசை, எலி இல்வழிப் பெறா, பால். |
324 |
பூனை கொலைத்தொழில் நிலைபெற்றிருக்கும் புலிபோல மிக்க வலிய வாயினும் எலி இல்லாத இடத்தில் கொன்றுண்ணும் உணவு பெறுதல் இல்லை. (ஆதலின்) தன்னைவிட மிக்க வலிமை உடையவனைத் தான் பகைவனாகப் பெறாதவன் போர்வீரர்களால் என்ன குறைமுடித்தலை உடையவனாவான்?
கருத்து: படைவீரர்கள் பகைவர்களை உடைய அரசனைஅடைதல் வேண்டும்.
கொடையும், ஒழுக்கமும், கோள் உள் உணர்வும், உடையர் எனப்பட்டு ஒழுகி, பகைவர் உடைய, மேற்செல்கிற்கும் ஊற்றம் இலாதார் படையின், படைத் தகைமை நன்று. |
325 |
கொடைத் தொழிலும், செங்கோன்மையும், படைகுடி முதலியவற்றின் கருத்தை அறியும் நுண்ணறிவும், உடையவ ரிவரென்று படை, குடி முதலியவற்றால் சொல்லப்பட்டு அந்நெறியின்கண்ணேயே ஒழுகி, மாற்றலர் புறமுதுகிட்டு ஓட, மேற்சென்று அவரை அழிக்கத்தக்க வலிமை இல்லாதவர்கள், படைகளை உண்டாக்குவார்களாயின் அப்படைகளின் பண்புகள் சிறப்புற இருக்கும்.
கருத்து: படை உடையானுக்குக் கொடை, செங்கோன்மை,கோளுணர்வு முதலியன வேண்டும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 63 | 64 | 65 | 66 | 67 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், உணவு, தான், கீழ்க்கணக்கு, நானூறு, பதினெண், பழமொழி, அச்சம், என்ன, உடைய, ஒழுகி, வேண்டும், அறிவு, வலிமை, மிக்க, உண்டு, கூழ், சங்க, பகைவர், போர், நின்று, மிகுத்துக், தறுகண்மை