பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

உரைத்தாரை மீதூரா மீக் கூற்றம்,-பல்லி நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னைப் பொரிப்பூ இதழ் உறைக்கும் பொங்கு நீர்ச் சேர்ப்ப!- நரிக் கூக் கடற்கு எய்தாவாறு. |
316 |
பல்லியது நெரிக்கப்பட்ட முட்டையைப்போல மலர்ந்திருக்கின்ற நீண்ட பெரிய புன்னை பொரியைப் போன்ற பூக்களினது இதழ்களைப் பரப்பும் நீர் மிகுந்த கடல் நாடனே! தம்மை நலிய உரைத்தவர்களை செயலால் மிக் கொழுகாது சொற்களால் தாமும் மிக்கொழுகல் நரியின் கூவிளியால் கடல் ஒலியைத் தாழ்விக்கமாட்டாதவாறு போலும்.
கருத்து: வீரர்கள் தம்மைநலிய உரைத்தார்களைச் செயலால் அடுதல் வேண்டும்.
அமர் நின்ற போழ்தின்கண் ஆற்றுவாரேனும், நிகர் அன்றிமேல் விடுதல் ஏதம்;-நிகர் இன்றி வில்லொடு நேர் ஒத்த புருவத்தாய்!-அஃது அன்றோ, கல்லொடு கை எறியுமாறு. |
317 |
வில்லினொடு நேராக ஒத்த புருவங்களை யுடையாய்! போர் நடவாநின்ற போழ்தத்து ஒப்புமையின்றிப் போராற்ற வல்லரேனும் ஒப்புமை கருதலின்றி (வலியார்) மேற்படை விடுதல் துன்பந் தருவதாம்; கல்லொடு கை யெறியுமாறு அஃது அன்றோ - கல்லொடு மாறுகொண்டு கையால் எதிர்த்துத் தாக்குதலை அஃது ஒக்குமன்றோ?
கருத்து: வீரர்கள் தம்மின் வலியார்மேற் சேறல் துன்பம் பயப்ப தொன்றாம்.
'வரை புரை வேழத்த, வன் பகை' என்று அஞ்சா உரையுடை மன்னருள் புக்கு, ஆங்கு அவையுள், நிரை உரைத்துப் போகாது, ஒன்று ஆற்றத் துணிக!- திரை அவித்து, ஆடார் கடல். |
318 |
அலைகளை நீக்கிப் பின்னர்க் கடலில் ஆடுதலிலர் (அதுபோல) புகழுடைய அரசர்கள் அவை நடுவே புகுந்து அவ்விடத்திருந்த அவை நடுவே கூறும் முறையால் தனது வீரத்தை மிகுத்துரைத்து மலைபோலும் யானைப் படையை உடையதாயிருந்தது வலிய பகை என்று அஞ்சி இது சமயம் வெல்ல முடியாததென் றொழியாது கூறிய தொன்றனைச் செய்யத் துணிந்து நிற்க.
கருத்து: வீரர் பகைவருடைய வலி குறைந்த ஞான்று அவரைவெல்வோமென்று நினையாதொழிபவராக.
காத்து, ஆற்றுகிற்பாரைக் கண்டால், எதிர் உரையார், பார்த்து ஆற்றாதாரைப் பரியாது மீதூர்தல் யாத்த தேசு இல்லார் படை ஆண்மை-நாவிதன் வாள் சேப்பிலைக்குக் கூர்த்து விடல். |
319 |
தம்மைக் காத்துப் பகைவரோடு எதிராக நின்று உடற்றவல்லாரைக் கண்ட அளவில் மாறு கூறுதலும் இலராகி பார்த்த அளவில் ஆற்றாராகிப் புறங்கொடுத் தோடுவாரை இரங்குதலின்றி மேற்செல்லலான் தனக்குளதாம் புகழினைப் பெறாதவர்கள் செய்யும் படையாண்மை அம்பட்டன் கத்தி சேப்பிலையை அறுக்கக் கூர்மை உடையதாயினவாறு போலும்.
கருத்து: புறங்கொடுத்து ஓடுவார்மீது படை விடலாகாது என்றது இது.
இஞ்சி அடைத்துவைத்து, ஏமாந்து இருப்பினும், அஞ்சி அகப்படுவார், ஆற்றாதார்;-அஞ்சி இருள் புக்கு இருப்பினும், மெய்யே வெரூஉம், புள் இருளின் இருந்தும் வெளி. |
320 |
மதில்வாயிலை அடைத்துவைத்துப் பாதுகாவல்பெற்றுள்ளே யிருப்பினும் போருக்காற்றாது அஞ்சி உட்புகுந்தார் அச்சத்தான் பகைவர் கையுட்படுவர் பயந்து இருளின்கண் புகுந்திருந்ததாயினும் பறவையானது உண்மையாகவே இருளினை உடைய இரவாக இருந்தும்வெளிச்சமுடைய பகலாக நினைத்து அஞ்சும்.
கருத்து: அஞ்சுவார்க்கு அரணாற் பயனுண்டாத லில்லை.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 62 | 63 | 64 | 65 | 66 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், அஞ்சி, அஃது, கல்லொடு, பழமொழி, கடல், பதினெண், நானூறு, போலும், கீழ்க்கணக்கு, அளவில், புக்கு, நடுவே, இருப்பினும், வீரர்கள், செயலால், சங்க, நிகர், விடுதல், ஒத்த, அன்றோ