பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

29. படைவீரர்
தூக்கி அவர் வெலினும், தாம் வெலினும்,
வெஞ் சமத்துத் தாக்கி எதிர்ப்படுவர், தக்கவர்; அஃது அன்றி, காப்பின் அகத்து இருந்து காய்வார் மிக உரைத்தல் யாப்பினுள் அட்டிய நீர். |
311 |
வீரத்திற்குத் தகுதியுடையவர்கள் எனப்படுவார் கொடிய போர்க்களத்துள் அவர் வென்றாலும் தாம் வென்றாலும் அடர்த்துத்தள்ளி வெற்றியைக் காண்பவரேயாவர்; அஃது அன்றி - அது செய்தலின்றி அரணகத்தேயிருந்துவெகுள்வாராய் மிகவும் வீரங் கூறுதல் செய்யினுள் விட்ட நீரைஒக்கும்.
கருத்து:வீரர் எனப்படுவார் மனத்திண்மையையும் பிறவற்றையும்பெற்று வெற்றியை எதிர்நோக்குபவரே யாவர்.
உற்றால், இறைவற்கு உடம்பு கொடுக்கிற்பான், மற்றவற்கு ஒன்னாரோடு ஒன்றுமோ?-தெற்ற முரண் கொண்டு மாறு ஆய உண்ணுமோ? உண்ணா, இரண்டு ஏறு ஒரு துறையில் நீர். |
312 |
தெளிவாக நிறைந்த வலிமையைப் பெற்று மாறுபாடுகொண்டுளவாகிய இரண்டு காளைகள். ஒரு துறையுள் நீர் உண்ணுமோ? - ஒரு நீர்த்துறையில் தண்ணீர் உண்ணுமோ? தம்முள் பொருந்தி நீர் பருகுதல் இல. (அதுபோல) ஓர் இடையூறு தம்மரசனுக்கு வந்துற்றால் உடம்பினை அவன்பொருட்டு அளிக்கவல்லவன் அவனுக்குப் பகையாயினாரோடு கீழறுக்கப்பட்டுச் சேர்தலுண்டோ? (இல்லை.)
கருத்து:பகைவராற் கீழறுக்கப் படாததா யிருப்பதே படையினியல்பாம்.
ஆற்ற வினை செய்தார் நிற்ப, பல உரைத்து, ஆற்றாதார் வேந்தனை நோவது-சேற்றுள் வழாஅமைக் காத்து ஓம்பி வாங்கும் எருத்தும் எழாஅமைச் சாக்காடு எழல். |
313 |
மிகவும் போர்த்தொழிலைச் செய்து வெற்றியை உண்டாக்கினார் வாளாயிருப்ப போரிற் சென்று ஒருவினையும் செய்யாதார் தமக்குச் சிறப்புச் செய்திலனென்று பலவாறுரைத்து அரசனை நொந்துகொள்வது சேற்றுள் வழுவி அகப்பட்டு வருந்தாது காத்து இழுக்கவல்ல எருது அங்கே எழுந்து செல்லாதிருக்கவும் அவ்வாற்றலில்லாத சகடம் எழுந்து செல்லுதலை யொக்கும்.
கருத்து: வினைமாட்சி யில்லார்சிறப்புப் பெறுதல் இலர்.
தார் ஏற்ற நீள் மார்பின் தம் இறைவன் நோக்கியக்கால், 'போர் ஏற்றும்' என்பார், பொது ஆக்கல் வேண்டுமோ? யார் மேற்றாக் கொள்ளினும் கொண்டீக! காணுங்கால், ஊர் மேற்று, அமணர்க்கும் ஓடு. |
314 |
சமணர்களுக்கு (அவர்கள் இரந்துண்ணும்) ஓட்டில் இடும் அறச்செயல் ஊரின் கண்ண தாம் (அதுபோல) போரினை விரும்பி ஏற்றுக்கொள்வேமென்னும் வீரர்கள் மாலை பொருந்திய நீண்ட மார்பினையுடைய தம்முடைய அரசன் போருக்குச் செல்க என்ற குறிப்புடன் நோக்கியவிடத்து அந்நோக்கினைப் பொதுவாக நோக்கினான் என்று கொள்ளல் வேண்டுமோ அரசன் யார்மாட்டு அந் நோக்கினைக் கொண்டானாயினும் தன்னை நோக்கினானாகக் கொள்க.
கருத்து: அரசன் குறிப்பினை அறிந்து ஆராய்தலின்றி போரிற்புகுதல் வீரர்களுடைய கடமையாம்.
செம்மாந்து செல்லும் செறுநரை அட்டவர், தம்மேல் புகழ் பிறர் பாராட்ட, தம்மேல் தாம் வீரம் சொல்லாமையே வீழ்க!-களிப்பினும் சோரப் பொதியாத வாறு. |
315 |
தருக்குற்று ஒழுகும் பகைவரை வென்றவர்கள் தம்மீது புகழ்ந்து பிறர் சிறப்பிக்கும்பொருட்டு களிப்புற்ற இடத்தும் தம்மிடத்து உளவாம் வீரஞ் சொல்லாதிருத்தலையே விரும்புக (அது) தன்னிடத்துள்ள குற்றங்களைத் தானே ஒன்று சேர்த்து மிகுத்துக் கூறாதவாறு ஆகும்.
கருத்து: வீரர்கள் பிறர் பாராட்டும் பொருட்டுத் தம்மைத் தாம் புகழ்தல், தம்முடைய குற்றங்களைத் தாமே கூறுதல் போலாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 61 | 62 | 63 | 64 | 65 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, தாம், கருத்து, இலக்கியங்கள், நீர், பழமொழி, உண்ணுமோ, அரசன், கீழ்க்கணக்கு, பதினெண், நானூறு, பிறர், சேற்றுள், காத்து, எழுந்து, வேண்டுமோ, அதுபோல, தம்முடைய, குற்றங்களைத், வீரர்கள், தம்மேல், கூறுதல், அஃது, வெலினும், அவர், சங்க, அன்றி, எனப்படுவார், வெற்றியை, மிகவும், வென்றாலும், இரண்டு