பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

தழங்குரல் வானத்துத் தண் பெயல் பெற்றால், கிழங்குடைய எல்லாம் முளைக்கும், ஓர் ஆற்றால் விழைந்தவரை வேர்சுற்றக் கொண்டு ஒழுகல் வேண்டா;- பழம் பகை நட்பு ஆதல் இல். |
296 |
முழங்கும் முழக்கத்தையுடைய மேகத்தின்கண் உள்ள குளிர்ந்த நீரைப் பெற்றால் கிழங்குடைய புல் முதலியவெல்லாம் முளையாநிற்கும்; ஓராற்றால் விழைந்து சமயம் வாய்த்தபொழுது முரண்கொண்டு நிமிர்ந்து நிற்கும்வரை பகைவருக்குத் துணையாய் நிற்றலை ஒழியும் பொருட்டு விரும்பி அவர்களை அடியோடு நெருங்கிய நட்புடையவர்களாகக் கொண்டொழுதல் வேண்டா; பழைமையாகப் பகையாயினார் நட்பாக ஒன்றுதல் இல்லையாதலால்.
கருத்து: பழம் பகைவரை நட்பாகக் கோடல் வேண்டாவென்றது இது.
வெள்ளம் பகை யெனினும், வேறு இடத்தார் செய்வது என்? கள்ளம் உடைத்தாகிச் சார்ந்த கழி நட்பு- புள் ஒலிப் பொய்கைப் புனல் ஊர!-அஃது அன்றோ, அள் இல்லத்து உண்ட தனிசு. |
297 |
பறவைகளின் ஒலி நிறைந்து பொய்கைகள் சூழ்ந்த புனல் நாடனே! வெள்ளம் போன்று அளவற்ற பகைவர்கள் உளரெனினும் இடையிட்ட நாட்டின்கண் உள்ள அவர்கள் நலிந்து செய்யும் துன்பம் யாது? கரவு உடைத்தாகித் தம்மைச் சார்ந்தொழுகுகின்ற மிகுந்த நட்பொன்றே சிறிய இல்லத்தில் தம்மோடு வாழ்வார்மாட்டுக் கொண்ட கடனைஒன்குமன்றோ?
கருத்து: அரசர் மனக்கரவுடையாரை அஞ்சித் தற்காக்க என்றது இது.
இம்மைப் பழியும், மறுமைக்குப் பாவமும், தம்மைப் பிரியார் தமரா அடைந்தாரின், செம்மைப் பகை கொண்டு சேராதார் தீயரோ?- மைம்மைப்பின் நன்று, குருடு. |
298 |
இம்மைக்கு வரும் பழியையும் மறுமைக்கு வரும் பாவத்தையும் தம்மினின்றும் நீக்காராய் மனக்கறுவுகொண்டு தம்மவராய் ஒட்டிவாழும் நட்பினரைவிட நேர்முகமாகப் பகைக்கொண்டு தன்னை ஒட்டி ஒழுகாதவர்கள் தீயவர்கள் ஆவரோ? பார்வையாகிய ஒளி மழுங்கிய கண்ணினும் பார்வையின்றி நிற்கும்கண்ணே நல்லது ஆகலான்.
கருத்து: உட்பகையுடைய நட்பினரை விடப் புறப்பகையுடைய பகைவரேசிறந்தவர்களாவர்.
பொருந்தா தவரைப் பொருது அட்டக் கண்ணும், இருந்து அமையார் ஆகி, இறப்ப வெகுடல்,- விரிந்து அருவி வீழ்தரும் வெற்ப!-அதுவே, அரிந்து அரிகால் நீர்ப் படுக்குமாறு. |
299 |
பரந்து பட்டு அருவிகள் இழிதரும் மலை நாடனே! தம்மொடு பொருந்தாதவர்களைப் போரிட்டு வென்றவிடத்தும் சோம்பி இருத்தலைச் செய்யாராகி அவர் உயிர் இழக்கும்படி வெகுண்டு நிற்றல் அச்செயல் தலையரிந்துவைத்த நெல்லரிதாளை உடனே உழுது அழுகுமாறு நீர் பாய்ச்சுதலோடு ஒக்கும்.
கருத்து: அரசர் தம் பகைவரைவென்றதோடமையாது வேரறக் களைதல் நல்லது.
வன் பாட்டவர் பகை கொள்ளினும், மேலாயார், புன் பாட்டவர் பகை கோடல் பயன் இன்றே;- கண் பாட்ட பூங் காவிக் கானல் அம் தண் சேர்ப்ப!- வெண் பாட்டம் வெள்ளம் தரும். |
300 |
கண்களின் தகைமையாயுள்ள அழகிய நீலப்பூக்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய குளிர்ந்த கடல் நாடனே! பருவ மழையன்றி வேனிற்காலத்து வெண்மழையும் மிகுந்த நீரைத் தருமாதலால் மேலானவர்கள் வலிய தகைமை உடையாரோடு மாறுபாடு கொள்ளினும் எளிய தகைமை உடையாரோடு பகைகொள்ளுதலால் ஒருபயனும் இன்று.
கருத்து: அரசன் வலியுடையாரோடு பகை கொள்வானாயினும் அஃதில்லாரோடு கொள்ளற்க என்றது இது.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 58 | 59 | 60 | 61 | 62 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், நானூறு, நாடனே, வெள்ளம், பழமொழி, பதினெண், கீழ்க்கணக்கு, மிகுந்த, என்றது, அரசர், வரும், பாட்டவர், உடையாரோடு, தகைமை, அழகிய, கொள்ளினும், நல்லது, புனல், பழம், வேண்டா, கொண்டு, கிழங்குடைய, நட்பு, உள்ள, கோடல், சங்க, குளிர்ந்த, பெற்றால்