பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

எதிர்த்த பகையை இளைது ஆய போழ்தே கதித்துக் களையின் முதிராது எதிர்த்து, நனி நயப்பச் செய்தவர் நண்பு எலாம் தீரத் தனி மரம் காடு ஆவது இல். |
286 |
தம்பொருட்டு நின்ற பகைவர்களை பகைமை தோன்றிய காலத்தேயே அவர்களுடைய நண்பர்கள் எல்லோரையும் (அவர்களிடம் கொண்ட நட்பினை) முற்ற அறுத்துத் தன்னை மிகவும் விரும்புமாறு செய்துகொண்டு விரைந்து வலியறச்செய்யின் அப்பகைமை முதிர்வதில்லை; தனிமரம் காடு ஆதல் இல் - தனியே ஒருமரம்நின்று காடாதல் இல்லையாதலின்.
கருத்து: அரசன் பகைமை தோன்றியபொழுதே விரைந்து அதனைக் கொல்லக்கடவன் என்றது இது.
'முன் நலிந்து, ஆற்ற முரண் கொண்டு எழுந்தோரைப் பின் நலிதும்' என்று இருத்தல் பேதைமையே; பின் சென்று,- காம்பு அன்ன தோளி!-கடிதிற் கடித்து ஓடும் பாம்பின் பல் கொள்வாரோ இல். |
287 |
மூங்கிலையொத்த தோள்களையுடையாய் மிகவும் மாறுபாடு கொண்டு முற்பட்டுத் தம்மை நலிய எழுந்தவர்களை பின்னர் ஒருகாலத்து அவரை வருத்த மாட்டுவேம் என்று சோம்பி இருத்தல் அறியாமையேயாம் விரைந்து கடித்து ஓடுகின்ற பாம்பினது நச்சுப்பல்லை அதன் பின் சென்று கொள்வார்ஒருவருமிலராதலின்.
கருத்து: பகைவரை அவர் மாறுபட்டு எழுவதற்கு முன்னரே அறிந்து களைக என்றது இது.
நிரம்ப நிரையத்தைக் கண்டதும் நிரையும் வரம்பு இல் பெரியானும் புக்கான்; இரங்கார்,- கொடி ஆர மார்ப!-குடி கெட வந்தால், அடி கெட மன்றி விடல். |
288 |
தனிவடமாகிய முத்து மாலையை உடையவனே! பொய் கூறினால் உளவாகுந் துன்பத்தை நூல்களால் மிகுதியாக அறிந்தும் அந்நரகஉலகத்தின்கண். எல்லையற்ற குணங்களாற் பெரிய தருமனும் அரசாட்சி பெற்றுத் தங் குடியை நிலைநாட்டும் பொருட்டுப் பொய் கூறிப் புகுந்தான் (ஆதலால்) தங்குடி கெடுமாறு தோன்றுவதொன் றுண்டானால் அவர் தீமையுறுதலுக்கு அஞ்சாராகி தங்குடிநோக்கிவேரறத் தண்டஞ் செய்துவிடுக.
கருத்து: தங்குடி கெடுமாறு பகைவர் சூழ்ந்து நிற்பாராயின் அரசர் அவர்தங் குடியை வேரறுக்க என்றது இது.
தமர் அல்லவரைத் தலையளித்தக் கண்ணும் அமராக் குறிப்பு அவர்க்கு ஆகாதே தோன்றும் சுவர் நிலம் செய்து அமைத்துக் கூட்டியக் கண்ணும் உவர் நிலம் உட்கொதிக்குமாறு. |
289 |
சுவராகுமாறு மண்ணினைப் பிசைந்து பொருந்துமாறு சேர்த்த விடத்தும் உவர்மண் உள்ளே கொதிப்புண்டு உதிர்ந்து விடும் (அதுபோல) தமக்கு உறவல்லாத பகைவரை தலையளி செய்தவிடத்தும் அவர்க்கு அது நன்மையாகத் தோன்றாது விரும்பாதகுறிப்பாகவே தோன்றும்.
கருத்து: பகைவரை நட்பாகக் கோடலரிது என்றது இது.
முகம் புறத்துக் கண்டால் பொறுக்கலா தாரை, 'அகம் புகுதும்!' என்று இரக்கும் ஆசை-இருங் கடத்துத் தக்க நெறியிடைப் பின்னும் செலப் பெறார் ஒக்கலை வேண்டி அழல். |
290 |
தம் முகத்தைப் புறத்தே கண்டாலும் மனம் பொறாதவர்களை அவர் மனத்தின்கண்புகுவோம் என்று தாழ்மையாக நினைக்கும் விருப்பம் நல்ல வழியின்கண்ணேயே தொடர்ந்து செல்லப்பெறாத குழந்தைகள் பெரிய சுரத்தின்கண் பெற்றோர் தம் புறம் பற்றிச்செல்ல விரும்பி அழுதலைஒக்கும்.
கருத்து: பகைவரது மனத்தை வேறுபாடின்றி யொழியுமாறு திருத்தல் இயலாத தொன்றாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், என்றது, பழமொழி, அவர், பகைவரை, விரைந்து, பின், நானூறு, கீழ்க்கணக்கு, பதினெண், கெடுமாறு, தங்குடி, குடியை, கண்ணும், அவர்க்கு, நிலம், தோன்றும், பெரிய, பொய், இருத்தல், காடு, கொண்டு, சென்று, கடித்து, பகைமை, மிகவும், சங்க