பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

வெஞ் சின மன்னவன் வேண்டாத செய்யினும், நெஞ்சத்துக் கொள்வ சிறிதும் செயல் வேண்டா;- என் செய்து அகப்பட்டக் கண்ணும், எடுப்புபவோ, துஞ்சு புலியைத் துயில்? |
281 |
எல்லாத் துன்பங்களையும் தமக்குச் செய்து தம்மிடத்து அகப்பட்டவிடத்தும் உறங்குகின்ற புலியை அவ்வுறக்கத்தினின்றும் எழுப்புவார்களோ? (இல்லை). (அதுபோல) கொடிய சினத்தையுடைய அரசன் தங்கீழ் வாழ்வார்க்குத் தீமையே செய்யினும் அவன் மனத்தில் கறுவுகொள்ளத்தக்கனவற்றை அவன்கீழ் வாழ்வார் ஒருசிறிதும்இயற்றுதல் வேண்டா.
கருத்து: அரசன் தமக்குத் தீமை செய்யினும் அவற்குத் தீமைசெய்யாதொழிக.
தாமேயும் தம்மைப் புறந்தர ஆற்றாதார், வாமான் தேர் மன்னரைக் காய்வது எவன்கொலோ?- ஆமா உகளும் அணி வரை வெற்ப!-கேள்; ஏமாரார் கோங்கு ஏறினார். |
282 |
காட்டுப்பசுக்கள் துள்ளி மகிழ்ந்துலாவுகின்ற அழகிய மலைநாடனே! உற்றுக் கேட்பாயாக கோங்கமரத்தின் மீது ஏறினவர்கள் ஏமம் ஆரார் - பாதுகாவலை யடையார் (அதுபோல) தம்மைத் தாமே பாதுகாத்துக்கொள்ள முடியாதார் தாவிச்செல்லுகின்ற குதிரை பூட்டப்பெற்ற தேரினையுடைய அரசரைச் சினத்தல் என் கருதி?
கருத்து: அரசனைச் சார்ந்தொழுகுவார் தாமுந்தூயராயிருந்து அரசனைத் திருத்துதல் நல்லது.
உறாஅ வகையது செய்தாரை, வேந்தன், பொறாஅன் போல, பொறுத்தால், பொறாஅமை மேன்மேலும் செய்து விடுதல்,-அது அன்றோ, கூன்மேல் எழுந்த குரு. |
283 |
செய்யத்தகாதனவற்றைச் செய்தவர்களை அரசன் புறத்தே பொறுக்காதவன் போன்றிருந்து உழையார் என்பது கருதி அகத்தே பொறுமை உடை யனாயின் அவன் (மீண்டும்) மனம் பொறா தமைவனவற்றை இடையீடின்றிச் செய்தல் கூனின்மேல் பெருத்து எழுந்த கட்டியை அதுஒக்குமன்றோ.
கருத்து: அரசன் பொறுமை உடையன் என்பது கருதித் தீமைசெய்யற்க.
பொருள் அல்லார் கூறிய பொய்க் குறளை வேந்தன் தெருளும் திறம் தெரிதல் அல்லால், வெருள எழுந்து, ஆடுபவரோடே ஆடார், உணர்வு உடையார்- ஆடு பணைப் பொய்க் காலே போன்று. |
284 |
இயற்கை நுண்ணறிவு உடையார் ஒரு பொருளாகவும் மதிக்கப்படாதார் கூறிய பொய்யாகிய குறளையை அரசன் தெளியும் வகையினை ஆராய்ந்து கூறுவதல்லாமல் குறளை கூறினார் வெருளுமாறு எழுந்து அசைகின்ற மூங்கிலால் செய்யப்பட்ட பொய்யாகிய கால்கள் போன்று குறளைகூறுவாரோடு ஆடுதலிலர்.
கருத்து: அரசனைச் சார்ந்தொழுகுவார், அவன் உண்மையினைத் தெளியஅறியுமாறு கூறுதல் வேண்டும்.
28. பகைத்திறம் தெரிதல்
வன் சார்பு உடையர் எனினும், வலி பெய்து, தம் சார்பு இலாதாரைத் தேசு ஊன்றல் ஆகுமோ?- மஞ்சு சூழ் சோலை மலை நாட!-யார்க்கானும் அஞ்சுவார்க்கு இல்லை, அரண். |
285 |
மேகங்கள் சூழ்ந்து நிற்கும் சோலைகளை உடைய மலை நாடனே! வலிமை உடையராயினாரைச் சார்பாகப் பெற்றிருப்பினும் தம்முடைய வலிமையாகிய சார்பைப் பெற்றிராதவரை. வலிபெய்து- வலிமை உண்டாக்குவித்து புகழிற்குக் காரணமாகிய செயல்களில் அவரை நிலைநாட்ட இயலுமோ யாவர்க்காயினும் மனம் அஞ்சுவார்க்கு அரண்களாற் பயனில்லை யாதலால்.
கருத்து: அரசன் எத்துணைச்சார்பு பெற்றிருப்பினும் அவன் சார்பு அவனுக்கு இன்றியமையாத தொன்றாம்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 55 | 56 | 57 | 58 | 59 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அரசன், கருத்து, இலக்கியங்கள், அவன், செய்து, பழமொழி, சார்பு, கீழ்க்கணக்கு, பதினெண், செய்யினும், நானூறு, உடையார், எழுந்து, தெரிதல், பொய்க், குறளை, பொய்யாகிய, அஞ்சுவார்க்கு, கூறிய, பெற்றிருப்பினும், வலிமை, போன்று, சார்ந்தொழுகுவார், அதுபோல, இல்லை, வேண்டா, சங்க, கருதி, அரசனைச், பொறுமை, என்பது, எழுந்த, வேந்தன், மனம்