பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

இடு குடைத் தேர் மன்னர், 'எமக்கு அமையும்' என்று, கடிது அவர் காதலிப்ப தாம் காதல் கொண்டு, முடிதல் எனைத்தும் உணரா முயறல்,- கடிய கனைத்துவிடல். |
276 |
நிழலிடுகின்ற குடையினை உடைய தேர்மன்னர் எமக்கு இது பொருந்தும் என்று மிகவும் அவர்கள் விரும்புவனவற்றை அவர்களைச் சார்ந்தொழுகுவார் விரும்பி முடியும்படி ஒன்றனையும் ஆராயாது முயற்சி செய்தல் கொடிய புலி முதலாயினவற்றைத் தன்மாட்டு அழைத்ததனோ டொக்கும்.
கருத்து: அரசனைச் சார்ந்தொழுகுவார் அரசன் விரும்புவனவற்றைவிரும்பாதொழிதல் வேண்டும்.
சீர்த் தகு மன்னர் சிறந்த அனைத்தும் கெட்டாலும், நேர்த்து உரைத்து எள்ளார், நிலை நோக்கி;-சீர்த்த கிளை இன்றிப் போஒய்த் தனித்து ஆயக்கண்ணும், இளைத்து அன்று பாம்பு இகழ்வார் இல். |
277 |
பாம்பானது மிக்க சுற்றத்தினின்றும் நீங்கிப் போய்த் தனிப்பட்ட இடத்தும் இளையது என்று கருதிச் சோம்பியிருப்பார் இலர்; (அதுபோல) சீர்மை தக்க அரசர்களுடைய சிறப்பெல்லாம் கெட்டவிடத்தும் அவர் நிலைமையை நோக்கி மாறுபட்டுக் கூறி இகழாராகுக.
கருத்து: அரசன் சீர்கெட்டவிடத்தும் அவனை இகழ்வார் தீமையையேஅடைவர்.
செருக்குடை மன்னர் இடைப் புக்கு, அவருள் ஒருத்தற்கு உதவாத சொல்லின், தனக்குத் திருத்தலும் ஆகாது, தீதரம்;-அதுவே எருத்திடை வைக்கோல் தினல். |
278 |
தருக்குடைய அரசர்களது இடையே புகுந்து அவர்களுள் ஒருவருக்கும் பயன்படாதவற்றை ஒருவன் சொல்லின் தன் சொல்லால் வேறுபட்ட அவர்களைத் திருத்தவும் முடியாது தீதாக விளையும் அங்ஙனங் கூறல் இரண்டு எருதுகளின் இடையேயுள்ள வைக்கோலை ஓர் எருது இடைப்புக்குத் தின்னலுறுதலை யொக்கும்.
கருத்து: அரசர்களிடை ஒன்றனைக் கூறவிரும்புவார் ஒருவரைச் சார்ந்து நின்று கூறுக.
பல் நாள் தொழில் செய்து, உடைய கவர்ந்து உண்டார், இன்னாத செய்யாமை வேண்டி, இறைவர்க்குப் பொன் யாத்துக் கொண்டு புகுதல்,-குவளையைத் தன் நாரால் யாத்துவிடல். |
279 |
பல நாட்கள் ஊழியஞ்செய்து அரசனுடைய பொருள்களைப் பற்றி உண்டு மகிழ்ந்தவர்கள் பின்னர் ஒருகாலத்தும் துன்பம் செய்யாதிருத்தலை விரும்பி அரசனுக்குத் தம்மிடத்துள்ள பொன்னைக் கொடுத்து அன்பால் ஒழுகுதல் குவளைமலரை அவற்றின் தண்டினாலேயே கட்டுதலோ டொக்கும்.
கருத்து: அறிவுடையோர் அரசனிடத்துத் கொண்ட பொருளையே அவனிடத்துக் கொடுத்துத்தம்வயப்படுத்துவர்.
மெய்ம்மையே நின்று மிக நோக்கப்பட்டவர், கைம் மேலே நின்று கறுப்பன செய்து ஒழுகி, பொய்ம் மேலே கொண்டு அவ் இறைவற் கொன்றார்-குறைப்பர், தம் மேலே வீழப் பனை. |
280 |
மெய்யான நெறியின் கண்ணே நின்று அரசனால் நன்கு மதிக்கப்பட்டவர்கள் தமக்கு ஒரு காரியம் முடியும்பொருட்டு அவராணை கடந்துநின்று அவர் வெகுடற் கேற்பனவற்றை இயற்றி வஞ்சனையை ஏறிட்டுக்கொண்டு அந்த அரசனைக் கொன்றவர்கள் பனை தம்மேலே வீழும்படி வெட்டுகின்றவர் களோடொப்பர்.
கருத்து: அரசனைக் கொன்றவர்கள்இறுதி எய்துவர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 54 | 55 | 56 | 57 | 58 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, இலக்கியங்கள், நின்று, அவர், கொண்டு, பழமொழி, மேலே, நானூறு, பதினெண், கீழ்க்கணக்கு, மன்னர், இகழ்வார், சொல்லின், அரசனைக், நோக்கி, செய்து, சார்ந்தொழுகுவார், எமக்கு, சங்க, உடைய, விரும்பி, டொக்கும், அரசன்