பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு
நல்லவும் தீயவும் நாடி, பிறர் உரைக்கும் நல்ல பிறவும் உணர்வாரை, கட்டுரையின் வல்லிதின் நாடி, வலிப்பதே-புல்லத்தைப் புல்லம் புறம் புல்லுமாறு. |
261 |
நல்லனவற்றையும் தீயனவற்றையும் நூல்களால் ஆராய்ந்து அறிந்து மாறு கொண்ட இருவர் கூறும் கட்டுரை யொன்றானே நீதி அநீதி என்பனவற்றை அறியும் அமைச்சர்களை ஆழ்ந்து ஆராய்ந்து தம்மோடு கொண்டு அரசன் வாழ்தலே ஆனேறு ஆனேற்றோடு இணைந்து அன்பு பூண்டு ஒழுகுமாறு போலும்.
கருத்து: 'அரசன், அறிவான்மிக்க அமைச்சர்களோடுகூடியொழுகின் அரச காரியங்கள் இனிது நடைபெறும் என்பதாம்.
மனத்தினும், வாயினும், மெய்யினும், செய்கை அனைத்தினும், ஆன்று அவிந்தார் ஆகி, நினைத்திருந்து, ஒன்றும் பரியலராய், ஓம்புவார் இல் எனில், சென்று படுமாம், உயிர். |
262 |
செய்கின்ற செய்கையின்கண் மனத்தினும் எல்லாம் மனத்தானும் வாயானும் மெய்யானும் மிகவும் அடங்கியவர்களாகி ஆராய்ந்து ஒன்றையும் விரும்பாதவராய் உலகத்தைக் காவல் செய்கின்ற அமைச்சர்கள் இலராயின் உயிர்கள் இறந்தொழிதல் திண்ணம்.
கருத்து: நல்ல அமைச்சர்களே உயிர்கள் வாழ்ந்திருத்தற்குக் காரணமாவர்.
செயல் வேண்டா நல்லன செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின், விலக்கும்; இகல் வேந்தன்- தன்னை நலிந்து தனக்கு உறுதி கூறலால்,- முன் இன்னா, மூத்தார் வாய்ச் சொல். |
263 |
செய்யமுடியாத நல்லனவற்றைச் செய்விக்கும்; தீய செயல் வேண்டி நிற்பின் - அரசன் தீயசெயல்களைச் செய்ய முனைந்து நிற்பின் இடைநின்று தடுத்தலைச் செய்யும் மாறுபாடுடைய அரசனை வலியுறுத்தி அவன்றனக்கு உறுதியாயினவற்றைக் கூறுதலால். முன்னே துன்பந்தருவதாக இருக்கும் (பின்னே மிக்க இன்பத்தை அளிக்கும்.)
கருத்து: அமைச்சர் கூறும் சொற்கள் நல்லன செய்விக்கும் தீயன விலக்கும் என்பதாம்.
செறிவுடைத் தார் வேந்தன் செவ்வியல பெற்றால் அறிவு உடையார் அவ்வியமும் செய்வர்;-வறிது உரைத்து, பிள்ளைகளை மருட்டும் தாயர்போல் அம்புலிமேல், ஒள்ளிய காட்டாளர்க்கு அரிது. |
264 |
நெருங்கிய மாலையை உடைய அரசன் தான் உறுதி கூறவும் கேளாது நல்லதல்லாவற்றைச் செய்யப்பெறுவனாயின் அறிவுடைய அமைச்சர்கள் சந்திரனிடத்து வறிது உரைத்து சிலவற்றையிட்டுக்கூறி குழந்தைகளை மிரட்டி உண்பிக்கின்ற தாய்மார்போல சூழ்ச்சிமுதலியன செய்தலோடு பொய் உரைத்து வஞ்சித்தாயினும் அவனை அச்செயலினின்றும் மீட்பர் உண்மையாய ஒள்ளிய எடுத்துக்காட்டுக்களை வற்புறுத்திக் கூறித் திருத்துதல் அவனால் ஆளப்படுவார்க்கு அரிதாகலான்.
கருத்து: அமைச்சர்கள் பொய் உரைத்தாயினும் அரசனை நல்வழிப்படுத்துவர்.
தீயன அல்ல செயினும், திறல் வேந்தன் காய்வன செய்து ஒழுகார், கற்று அறிந்தார்;-காயும் புலி முன்னம் புல்வாய்க்குப் போக்கு இல்; அதுவே, வலி முன்னர் வைப் பாரம் இல். |
265 |
பாய்ந்து வருகின்ற புலியின் முன்னுள்ள மானுக்குத் தப்பிச் சென்று புகும் புகலிடம் வேறு இல்லை அதுபோலவே சூறாவளிக் காற்றின் முன்னர் வைக்கோற் பாரம் நிலைத்து நிற்குமாறில்லை (ஆகையால்) வெற்றியையுடைய அரசன் தீமை தருவனவாகிய நல்லது அல்லாத செயல்களைச் செய்வானாயினும் நீதி நூல்களைக் கற்று உலக இயலையும் அறிந்த அமைச்சர்கள் அரசன் சினத்தற்குரியனவற்றை மனத்தினும் நினைத்தலிலர்.
கருத்து: அரசன் தீய செயல்களைச் செயினும் அமைச்சர்கள் சினத்தலிலர்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 51 | 52 | 53 | 54 | 55 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அரசன், அமைச்சர்கள், கருத்து, இலக்கியங்கள், பழமொழி, நானூறு, செயல், உரைத்து, செய்விக்கும், வேந்தன், நிற்பின், கீழ்க்கணக்கு, மனத்தினும், பதினெண், ஆராய்ந்து, தீயன, பாரம், அரசனை, செயல்களைச், முன்னர், வறிது, உறுதி, செயினும், கற்று, பொய், ஒள்ளிய, உயிர்கள், கூறும், நல்ல, நாடி, சங்க, நீதி, என்பதாம், வேண்டி, நல்லன, செய்கின்ற, சென்று, விலக்கும்