பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு

மன்னவன் ஆணைக்கீழ், மற்றையார் மீக்கூற்றம் என்ன வகையால் செயப் பெறுப?-புன்னைப் பரப்பில் நீர் தாஅம் படு கடல் தண் சேர்ப்ப!- மரத்தின் கீழ் ஆகா, மரம். |
251 |
புன்னைப் பரப்பின்கண்ணே நீர் பாய்கின்ற மிக்க நீர் பொருந்திய கடலை உடைய குளிர்ந்தநாடனே! ஒரு மரத்தின் கீழே வைக்கப்பட்டுள்ள மரம் ஓங்கி வளர்தல் இல்லை (அதுபோல) அரசனது ஆணை செல்கின்ற விடத்து ஏனையோர் தம்மை மிகுத்துக்கூறும் தமது ஆணையை எப்பெற்றியால் செலுத்துவார்கள் (செலுத்தக்கூடாதாம்.)
கருத்து: அரசன் ஆணையின்கீழ், பிறர், தமது,ஆணையைச் செலுத்துதல் இயலாதாம்.
வழிப்பட்டவரை வலியராச் செய்தார் அழிப்பினும் ஆக்கினும் ஆகும்;-விழுத்தக்க பையமர் மாலைப் பணைத் தோளாய்!-பாத்து அறிவு என், மெல்ல கவுள் கொண்ட நீர். |
252 |
சிறப்பினை உடைய மேன்மை பொருந்திய மாலையை அணிந்த பெருத்த தோளினை உடையாய்! கன்னத்திலடக்கிய நீரைக் குடிக்கவும் செயலாம் உமிழவுஞ் செய்யலாம்; (அதுபோல) தம்மை வழிபாடு செய்தொழுகிய குடிமக்களை வலியராகச் செய்யவல்ல அரசர்கள் அக்குடிமக்களை அழிக்கினும் அன்றி ஆக்கினும் அவை அவராலியலும்; இதற்கு மெல்லப் பகுத்துஅறிதல் என்னை?
கருத்து: குடிமக்களை ஆக்கலும்,அழித்தலும் அரசர்களால் செய்ய இயலாது.
தலைமை கருதும் தகையாரை வேந்தன் நிலைமையால் நேர் செய்திருத்தல்,-மலைமிசைக் காம்பு அனுக்கும் மென் தோளாய்!-அஃதுஅன்றோ, ஓர் அறையுள் பாம்பொடு உடன் உறையுமாறு. |
253 |
மலைமீதுள்ள மூங்கிலை வருத்தும் மென்மையான தோள்களைஉடையாய்! தலைமை நிலையைப் பெறவேண்டும் என்று கருதும் தன்மை உடையவர்களை அரசன் அவர் அஃதிலராகப் புறத்தே நடிக்கும் வஞ்சக நிலையால் அவரைத் தம்மையொப்பத் தலைமை செய்து தான் சோர்ந்திருத்தல் அங்ஙனமிருத்தல் ஓர் அறையினுள்ளேயே ஒருவன்பாம்போடுகூடத் தங்கியிருத்தலை ஒக்கும்.
கருத்து: வஞ்சனை உடையாரைத் தலைமைசெய்து அரசன் சோம்பிஇருத்தல் ஆகாது.
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து, குறிப்பு அறிந்து மாற்றம் உடையாரை ஆராயாது; ஆற்றவும்,- முல்லை புரையும் முறுவலாய்!-செய்வது என், வல்லை, அரசு ஆட்கொளின்? |
254 |
முல்லைமலரை ஒத்த புன்முறுவலை உடையாய்! இயமன் உயிரினைக் கொள்ளுங்காலத்தில் அவர்தங் குறிப்பினையும் தன்னால்உயிர்கொள்ளப்படுதலுடையார் கூறும் மாற்றத்தினையும் ஆராய்ந்து அறிவதில்லை; (அதுபோல) அரசன் குடிகளை மிகவும் விரைந்து துன்புறுத்தி அடிமை கொள்ளின் செய்வது என்ன இருக்கின்றது?
கருத்து: குடிகளை முறையின்றித் துன்புறுத்தி அடிமைகொள்ளும் அரசன் கூற்றுவனை ஒப்பான்.
உடைப் பெருஞ் செல்வத்து உயர்ந்த பெருமை, அடக்கம் இல் உள்ளத்தன் ஆகி, நடக்கையின் ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல்-குரங்கின் கைக் கொள்ளி கொடுத்துவிடல். |
255 |
உடைமையாகிய மிக்க செல்வத்தினை உடைய உயர்ந்த பெருமை தரத்தக்க முதன்மையை அடக்கமில்லாத உள்ள முடையனாகி ஒழுக்கத்தினும் தூய்மையுடையவன் அல்லாதவனிடத்து அரசன் கொடுத்தல் குரங்கினது கையில் கொள்ளியைக் கொடுத்துவிடுதலைஒக்கும்.
கருத்து: அரசன் அற்பர்களுக்கு முதன்மையை அளிப்பது தீமையை அளிக்கும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 49 | 50 | 51 | 52 | 53 | ... | 80 | 81 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு, அரசன், கருத்து, நீர், இலக்கியங்கள், தலைமை, பழமொழி, அதுபோல, நானூறு, பதினெண், உடைய, கீழ்க்கணக்கு, குடிமக்களை, துன்புறுத்தி, பெருமை, முதன்மையை, உயர்ந்த, உடையாய், செய்வது, குடிகளை, கருதும், தம்மை, மரத்தின், புன்னைப், என்ன, சங்க, மரம், மிக்க, ஆக்கினும், தமது, பொருந்திய, தோளாய்