ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு
தளையாளர், தாப்பாளர், தாழ்ந்தவர், பெண்டிர், உளையாளர், ஊண் ஒன்றும் இல்லார், கிளைஞராய் - மா அலந்த நோக்கினாய்! - ஊண் ஈய்ந்தார், மாக் கடல் சூழ் நாவலம்தீவு ஆள்வாரே, நன்கு. |
56 |
தளையீடுண்டார், தாப்பாளர், புலையர், பெண்டுகள், பிணியாலுழன்றார், வறியர் என்றிப் பெற்றிப்பட்டார்க்குக் கிளைஞரா யூணீய்ந்தார், மானைப் பிணித்த நோக்கையுடையாய்! பெரிய கடல் சூழ்ந்த மண்ணையாள்வார்.
கருத்து: தளையாளர் முதலியவர்களுக்கு உணவு கொடுத்தல் அறமாம்.
கருஞ் சிரங்கு, வெண் தொழு நோய், கல், வளி, காயும் பெருஞ், சிரங்கு, பேர் வயிற்றுத் தீயார்க்கு, அருஞ் சிரமம் ஆற்றி, ஊண் ஈத்து, அவை தீர்த்தார் - அரசராய்ப் போற்றி ஊண் உண்பார், புரந்து. |
57 |
கருஞ்சிரங்கும், வெள்ளிய தொழுநோயும், கல்லெரிப்பும், வாதமும், காய்ந்திடர் செய்யும் கழலையும், பெருவயிற்றுப் பெருந்தீயு மென இவ் ஆறு திறத்தாராகிய பிணியுடையார்க்கு மரிய வருத்தத்தைத் தவிர்த் தூணீய்ந் தந்நோய்களைத் தீர்த்தாரே; பின்பு அரசராய்ப் பிறந் துலகினைக் காத்து விரும்பிய நுகர்ச்சியை நுகர்வார்.
கருத்து: நோயாளர்க்கு நோய் நீக்கலும் உணவு கொடுத்தலும் வேண்டும்.
காமாடார், காமியார், கல்லார்இனம் சேரார், ஆம் ஆடார், ஆயந்தார் நெறி நின்று, தாம் ஆடாது, ஏற்றாரை இன்புற ஈய்ந்தார், முன், இம்மையான் மாற்றாரை மாற்றி வாழ்வார். |
58 |
காமநுகராது, பொருளின்மேற் காதலியாது, கல்லாரினஞ் சேராது, நீரில் விளையாடாது, கற்றார் நிற்கு நெறியின்க ணின்று, தாம் வழுவா திரந்தேற்றாரை யின்புறும் வகை முற்பிறப்பின்க ணீய்ந்தார் இப்பிறப்பின்கண் பகைவரை வென்றரசராய் வாழ்வார்.
கருத்து: முற்பிறப்பில் நல்லொழுக்கத்தினின்று பிறர்க்குதவி செய்பவர்களே, இப்பிறப்பில் அரசர்களாய் வாழ்கின்றவராவார்கள்.
வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு, நுணங்கிய நூல் நோக்கி, நுழையா, இணங்கிய பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய், நூல் நோக்கி வாழ்வான், நுனித்து. |
59 |
பிறர்க்குப் பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மையை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான்.
கருத்து: இம்மையில் வணக்கமும், ஒழுக்கமும், சான்றோர் மதிப்பும், ஆராய்ச்சியும் உடையவன், மறுமையில் இக்கல்வியுடன் பொருளும் ஒருங்கெய்தி வாழ்வான்.
பெருமை, புகழ், அறம், பேணாமை சீற்றம், அருமை நூல், சால்பு, இல்லார்ச் சாரின், இருமைக்கும், பாவம், பழி, பகை, சாக்காடே, கேடு, அச்சம், சாபம்போல் சாரும், சலித்து. |
60 |
பெருமையும், புகழும், அறம் பேணாதசினமும், அருமை நூலும், சால்புக் குணமுமில்லார் சாரின், இம்மை மறுமை யென்னு மிரண்டிற்கும் பாவமும், பழியும் பகையும், சாக்காடும், கேடும், அச்சமு மென்னு மிவ் ஆறு திறமு முனிவராற் சாபமிட்டாற் போலச் சென்று சாரும் வெகுண்டு.
கருத்து: கீழோரைச் சார்ந்தால் பழி பாவம் முதலியன வந்தெய்தும்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 10 | 11 | 12 | 13 | 14 | ... | 15 | 16 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு, கருத்து, வாழ்வான், நோக்கி, இலக்கியங்கள், பதினெண், நூல், ஏலாதி, கீழ்க்கணக்கு, நுண்ணிய, நூல்களை, அருமை, சாரும், பாவம், சாரின், அறம், நோய், ஈய்ந்தார், தாப்பாளர், தளையாளர், சங்க, கடல், உணவு, தாம், அரசராய்ப், சிரங்கு, வாழ்வார்