ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு

தம் உடல் ஒளி விரும்புபவர் செய்யத் தக்கவை
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
மின் ஒளியும், வீழ்மீனும், வேசையர்கள் கோலமும், தம் ஒளி வேண்டுவார் நோக்கார்; பகற் கிழவோன் முன் ஒளியும் பின் ஒளியும் அற்று. |
51 |
மின்னொளியையும், வீழ்மீனையும், வேசையர்கள் கோலத்தையும் தமது விளக்கத்தை வேண்டுவார் நோக்கார், பகற்கிழவோனுடைய காலை யொளியையும் மாலை யொளியையும் அப்பெற்றியே நோக்கார்.
கருத்துரை: தம் கண்ணின் ஒளியும், புகழும் கெடாதிருக்க வேண்டுவோர் மின்னல் எரிமீன் வேசையரின்கோலம் காலை மாலை வெயில் இவைகளை யுற்றுப் பார்த்தல் கூடாது.
தளராத உள்ளத்தவர் செயல்
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
படிறும், பயனிலவும், பட்டி உரையும், வசையும், புறனும், உரையாரே - என்றும் அசையாத உள்ளத்தவர். |
52 |
வஞ்சனையுரையும், பயன்படாத உரையும், வாய் காவாது உரைக்கும் உரையும், பிறரைப் பழித்துரைக்கும் உரையும், இவை யாவும் சொல்லார், என்றுந் தளராத உள்ளத்தவர்.
கருத்துரை: வஞ்சனைமொழி பயனில் சொல் முதலியவற்றை ஒழித்தல் வேண்டும்.
ஒழுக்கமுடையவர் செய்யாதவை
(இன்னிசை வெண்பா)
தெறியொடு, கல்லேறு, வீளை, விளியே, விகிர்தம், கதம், கரத்தல், கை புடை, தோன்ற உறுப்புச் செகுத்தலோடு, இன்னவை எல்லாம் பயிற்றார் - நெறிப்பட்டவர். |
53 |
தெறித்தலும் கல்லெறிதலும், வீளைசெய்தலும், தூரப்போகின்றா னொருவனை அழைத்தலும், ஒருவன் செய்கையும் சொல்லும் முதலாயினவற்றைத் தாமும் அவ்வகை இகழ்ந்து செய்து காட்டலும், வேகமுடையனாதலும், ஒளித்தலும், கையொடு கை புடைத்தலும், பிறர்க்கு வெளிப்படக் கண்ணிடுதல் முதலாயின செய்து தன்னுறுப்பைச் செகுத்தலும். இப்பெற்றிப் பட்டவையெல்லாம் பயின்று செய்யார் வழிப்பட்டார்
கருத்துரை: ஒரு பொருளை விசிறி யெறிதல் கல்லெறிதல் முதலிய தீய பழக்கங்களைச் செய்யலாகாது.
விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
(இன்னிசைச் சிந்தியல் வெண்பா)
முறுவல் இனிதுரை, கால், நீர், மணை, பாய், கிடக்கையோடு, இவ் ஐந்தும் என்ப - தலைச் சென்றார்க்கு ஊணொடு செய்யும் சிறப்பு. |
54 |
முறுவலோடு கூடிய இனிதுரையும், கால் கழுவ நீரும், இருக்க மணையும், கிடக்கப் பாயும், கிடக்கும் இடமும் என இவ்வைந்தும் என்று சொல்லுப, தம்மிடத்துச் சென்றார்க்கு உணவுடனே செய்யும் சிறப்புக்கள்.
கருத்துரை: தம் வீட்டுக்கு வரும் விருந்ததினர்க்கு உணவளித்தலுடன் இன்முகம் இன்சொல்லுடன், கானீர் முதலியன உதவியும் சிறப்பிக்க வேண்டும்.
அறிஞர் விரும்பாத இடங்கள்
(பஃறொடை வெண்பா)
கறுத்த பகை முனையும், கள்ளாட்டுக்கண்ணும் நிறுத்த மனம் இல்லார் சேரியகத்தும், குணம் நோக்கிக் கொண்டவர் கோள் விட்டுழியும், - நிகர் இல் அறிவினார் வேண்டார் - பலர் தொகு நீர்க்கரையும், நீடு நிலை. |
55 |
வெகுண்ட பகை முனையின் கண்ணும், கள்ளால் களித்தாடுமிடத்தும், பொதுமகளிர் சேரிக்கண்ணும், குணங்களை யாராய்ந்து தம்மை விரும்பிக்கொண்டார் கோட்பாடு விட்டவிடத்தும், பலர் தொகும் நீர்க்கரையிடத்தும் நெடிதாக நிற்கையை ஒப்பில்லாத அறிவினையுடையார் விரும்பார்.
கருத்துரை: போர்க்களம், கட்குடித்தாடுமிடம், பரத்தையர் சேரி முதலிய இடங்களில் தங்கியிருப்பது சரியன்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 19 | 20 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆச்சாரக் கோவை - பதினெண் கீழ்க்கணக்கு, வெண்பா, கருத்துரை, உரையும், இலக்கியங்கள், ஒளியும், செய்யும், பதினெண், உள்ளத்தவர், கோவை, ஆச்சாரக், நோக்கார், சிந்தியல், இன்னிசைச், கீழ்க்கணக்கு, முதலிய, செய்து, பலர், சென்றார்க்கு, சிறப்பு, கால், காலை, வேசையர்கள், சங்க, வேண்டுவார், யொளியையும், தளராத, மாலை, வேண்டும்