முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.095.இலிங்கபுராணம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.095.இலிங்கபுராணம்
5.095.இலிங்கபுராணம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
2005 | புக்க ணைந்து புரிந்தல ரிட்டிலர் நக்க ணைந்து நறுமலர் கொய்திலர் சொக்க ணைந்த சுடரொளி வண்ணனை மிக்குக் காணலுற் றாரங் கிருவரே. |
5.095.1 |
திருமாலும் பிரமனுமாகிய இருவரும் அழகுபொருந்திய ஒளிச்சுடர் நிறம் உடைய பெருமானைப் புகுந்து அணைந்து விரும்பி மலரிட்டு வணங்கிலராய், மகிழ்ந்து பொருந்தி மணமலர்களைக் கொய்து அருச்சித்திலராய் ஆணவமிகிந்து காண முயன்று காண்கிலராயினார்.
2006 | அலரு நீருங்கொண் டாட்டித் தௌந்திலர் திலக மண்டலந் தீட்டித் திரிந்திலர் உலக மூர்த்தி யொளிநிற வண்ணனைச் செலவு காணலுற் றாரங் கிருவரே. |
5.095.2 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலக மூர்த்தியாகிய ஒளிநிற வண்ணம் உடைய இறைவனைப் பூவும் நீரும்கொண்டு அபிடேகித்துத் தௌவடைந்திலராய்த் திருச்சாந்து தீட்டித் திரிந்திலராய்ச் சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார்.
2007 | ஆப்பி நீரோ டலகுகைக் கொண்டிலர் பூப்பெய் கூடை புனைந்து சுமந்திலர் காப்புக் கொள்ளி கபாலிதன் வேடத்தை ஓப்பிக் காணலுற் றாரங் கிருவரே. |
5.095.3 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் உலகங்களைக் காவல்கொள்ளும் கபாலியாகிய பெருமானின் திருவேடத்தைக் காணலுற்றார்கள், சாணநீரோடு, திருவலகும் கைகளிற் கொண்டு வணங்காதவராய்ப் பூக்கள் பெய்த கூடையைப் புனைந்து சுமந்திலர். முனைப்புடன் காணமுயன்று காண்கிலர் ஆயினார்.
2008 | நெய்யும் பாலுங்கொண் டாட்டி நினைந்திலர் பொய்யும் பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலர் ஐயன் வெய்ய அழல்நிற வண்ணனை மெய்யைக் காணலுற் றாரங் கிருவரே. |
5.095.4 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் நெய்யும் பாலும் கொண்டு அபிடேகித்து நினைந்திலராய்ப் பொய்யும்பொக்கமும் போக்கிப் புகழ்ந்திலராய் ஐயனாகிய வெப்பமுடைய அழலின் நிறம் கொண்ட இயல்புடைய பெருமானது மெய்ம்மையைக் காணலுற்றுக் காண்கிலராயினார்.
2009 | எருக்கங் கண்ணிகொண் டிண்டை புனைந்திலர் பெருக்கக் கோவணம் பீறி யுடுத்திலர் தருக்கி னாற்சென்று தாழ்சடை யண்ணலை நெருக்கிக் காணலுற் றாரங் கிருவரே. |
5.095.5 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் எருக்க மாலை கொண்டு இண்டை புனைந்து வழிபடாதவராய் அழகு பெருக்குதற்பொருட்டுக் கோவணம் கிழித்து உடுத்தாதவராய் ஆணவத்தினாற்சென்று சடைதாழ்கின்ற அண்ணலாராகிய பெருமானைத் தத்தமில் நெருக்கிச்சென்று காண முயன்று காண்கிலர் ஆயினார்.
2010 | மரங்க ளேறி மலர்பறித் திட்டிலர் நிரம்ப நீர்சுமந் தாட்டி நினைந்திலர் உரம்பொ ருந்தி யொளிநிற வண்ணனை நிரம்பக் காணலுற் றாரங் கிருவரே. |
5.095.6 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் அறிவுடன்கூடி ஒளிநிற வண்ணனாகிய பெருமானை, மரங்களில் ஏறிமலர்பறித்திட்டிலராய், நிரம்ப நீர் சுமந்து அபிடேகித்து நினைந்திலராய் ஆணவம் நிரம்பக் காண முயன்று காண்கிலர் ஆயினர்.
2011 | கட்டு வாங்கங் கபாலங்கைக் கொண்டிலர் அட்ட மாங்கங் கிடந்தடி வீழ்ந்திலர் சிட்டன் சேவடி சென்றெய்திக் காணிய பட்ட கட்டமுற் றாரங் கிருவரே. |
5.095.7 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கட்டுவாங்கமும் கபாலமும் கைக்கொள்ளாதவராய், எட்டுறுப்புக்களும் நிலத்துப்படக்கிடந்து அடிதாழாதவராய் இறைவன் சேவடியும் திருமுடியும்காணுதற்குச் சென்றெய்திப் பொருந்திய துயரங்கள் உற்றார் அடிமுடி காண்கிலர்.
2012 | வெந்த நீறு விளங்க அணிந்திலர் கந்த மாமல ரிண்டை புனைந்திலர் எந்தை யேறுகந் தேறெரி வண்ணனை அந்தங் காணலுற் றாரங் கிருவரே. |
5.095.8 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் வெந்த திருநீறு விளங்க அணியாதவராய், மணமிக்க மலர்களால் இண்டைமாலை புனையாதவராய் எந்தையாகிய ஏறுகந்து ஏறும் எரிவண்ணனாகிய பெருமானின் ஆதியும் அந்தமும் காண இயலாதவர் ஆயினார்.
2013 | இளவெ ழுந்த இருங்குவ ளைம்மலர் பிளவு செய்து பிணைத்தடி யிட்டிலர் களவு செய்தொழிற் காமனைக் காய்ந்தவன் அளவு காணலுற் றாரங் கிருவரே. |
5.095.9 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் இளமையோடுகூடி எழுந்து கரிய குவளை மலர்களைப் பிளந்து இதழ்களால் பிணைத்துத் திருவடியில் இட்டு வணங்காதவராய் களவு செய்யும் தொழிலை உடைய காமனைக் காய்ந்த பெருமானது அளவினைக் காண முயன்று காண்கிலர் ஆயினார்.
2014 | கண்டி பூண்டு கபாலங்கைக் கொண்டிலர் விண்ட வான்சங்கம் விம்மவாய் வைத்திலர் அண்ட மூர்த்தி யழல்நிற வண்ணனைக் கெண்டிக் காணலுற் றாரங் கிருவரே. |
5.095.10 |
திருமாலும் பிரமனும் ஆகிய இருவரும் கணடி அணிந்து கபாலம் கையிற்கொள்ளாதவராய் வெண்மை விரிந்த சங்கம் விம்முமாறு வாயில் வைத்தூதாதவராய் அண்டமூர்த்தியாகிய தீ நிறவண்ணனை மண்ணில் கிண்டியும் விண்ணில் பறந்தும் காண முயன்று காண்கிலர் ஆயினார்.
2015 | செங்க ணானும் பிரமனுந் தம்முளே எங்குந் தேடித் திரிந்தவர் காண்கிலர் இங்குற் றேனென்றி லிங்கத்தே தோன்றினான் பொங்கு செஞ்சடைப் புண்ணிய மூர்த்தியே. |
5.095.11 |
செங்கண் உடையவனாந் திருமாலும், பிரமனும் தம்முள்ளே எங்கும் தேடித்திரிந்தும் காண்கின்ற வல்லமை இல்லாதவர்களுக்கு ஆறி பொங்கும் செஞ்சடையை உடைய புண்ணியக் கடவுளாம் இறைவன் "இங்கு உற்றேன்" என்று இலிங்க வடிவில் தோன்றினான்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 93 | 94 | 95 | 96 | 97 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
இலிங்கபுராணம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருமாலும், கிருவரே, இருவரும், பிரமனும், காணலுற், காண்கிலர், ஆயினார், முயன்று, வண்ணனை, புனைந்து, கொண்டு, கொண்டிலர், கோவணம், நிரம்ப, புனைந்திலர், பெருமானது, அபிடேகித்து, நிரம்பக், கபாலங்கைக், தோன்றினான், காமனைக், விளங்க, இறைவன், போக்கிப், நினைந்திலர், காண்கிலராயினார், ணைந்து, ஒளிநிற, தீட்டித், யொளிநிற, இலிங்கபுராணம், திருச்சிற்றம்பலம், நெய்யும், திருமுறை, பெருமானின், சுமந்திலர், மூர்த்தி