முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.058.திருப்பழையாறைவடதளி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.058.திருப்பழையாறைவடதளி

5.058.திருப்பழையாறைவடதளி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - சோமேசுவரர்.
தேவியார் - சோமகலாநாயகியம்மை.
1652 | தலையெ லாம்பறிக் குஞ்சமண் கையருள் நிலையி னான்மறைத் தான்மறைக் கொண்ணுமே அலையி னார்பொழி லாறை வடதளி நிலையி னானடி யேநினைந் துய்ம்மினே. |
5.058.1 |
தலைமயிரெல்லாவற்றையும் பறிக்கின்ற சமண் ஒழுக்கம் உடையவர்கள் உள்ளத்து நிலையினால் மறைத்தால் மறைக்கவியலுமோ? அலைநீரின் மருங்கிலுள்ள பொழில்கள் சூழ்ந்த பழையாறைவடதளியின்கண் நிலைபெற்றவன் திருவடிகளையே நினைந்து உய்வீர்களாக.
1653 | மூக்கி னால்முரன் றோதியக் குண்டிகை தூக்கி னார்குலந் தூரறுத் தேதனக் காக்கி னானணி யாறை வடதளி நோக்கி னார்க்கில்லை யால்அரு நோய்களே. |
5.058.2 |
மூக்கினால் ஒலிக்குமாறு தம் மந்திரங்களை ஓதி, அக்குண்டிகை தூக்கினாராகிய சமணர்கள் குலத்தை அடியோடு வேரறுத்துத் தனக்கு அணியாறைவடதளியை ஆக்கிக் கொண்டானாகிய பெருமானை நோக்கினார்க்கு அருநோய்கள் இல்லை.
1654 | குண்ட ரைக்குண மில்லரைக் கூறையில் மிண்ட ரைத்துரந் தவிம லன்றனை அண்ட ரைப்பழை யாறை வடதளிக் கண்ட ரைத்தொழு துய்ந்தன கைகளே. |
5.058.3 |
குண்டர்களும், நற்குணமில்லாதவர்களும், உடையணியாத மிண்டர்களுமாகிய சமணர்களைத் துரத்திய விமலனும்,தேவதேவனும் ஆகிய பழையாறைவடதளியில் உள்ள திருநீல கண்டரைத் தொழுது அடியேனின் கரங்கள் உய்ந்தன.
1655 | முடைய ரைத்தலை முண்டிக்கும் மொட்டரைக் கடைய ரைக்கடிந் தார்கனல் வெண்மழுப் படைய ரைப்பழை யாறை வடதளி உடைய ரைக்குளிர்ந் துள்குமென் னுள்ளமே. |
5.058.4 |
முடைநாற்றம் உடையோரும், தலையை மழித்த மொட்டையர்களும், கீழானவர்களுமாகிய சமணர்களை நீக்கியவரும், கனலையும் வெண்மழுப் படையினையும் உடையவரும் ஆகிய பழையாறை வடதளிக்குடையவரை என் உள்ளம் குளிர்ந்து நினைகின்றது.
1656 | ஒள்ள ரிக்கணார் முன்னமண் நின்றுணும் கள்ள ரைக்கடிந் தகருப் பூறலை அள்ள லம்புன லாறை வடதளி வள்ள லைப்புக ழத்துயர் வாடுமே. |
5.058.5 |
ஒளியும் அரியும் உடைய கண்ணை உடைய பெண்டிர்க்கு முன்னும் உடையற்றவராய் நின்றுண்ணும் கள்ளர்களாகிய சமணரைக் கடிந்தவரும், கரும்பின் ஊறும் சாறு பாய்ந்தோடிச்சேறாகிய நீர்வளம் உடைய பழையாறை வடதளியில் உள்ள வள்ளலும் ஆகிய பெருமானைப் புகழத் துயரங்கள் வாடும்.
1657 | நீதி யைக்கெட நின்றம ணேயுணும் சாதி யைக்கெடு மாசெய்த சங்கரன் ஆதி யைப்பழை யாறை வடதளிச் சோதி யைத்தொழு வார்துயர் தீருமே. |
5.058.6 |
முறைமை கெடநின்று ஆடையற்றவராய் உண்ணும் சாதியாகிய சமணரைக் கெடுமாறு செய்தருளிய சங்கரனும், ஆதியும் ஆகிய புழையாறைவடதளியில் உள்ள சோதியைத் தொழுவாருடைய துயர் தீரும்.
1658 | திரட்டி ரைக்க வளந்திணிக் குஞ்சமண் பிரட்ட ரைப்பிரித் தபெரு மான்றனை அருட்டி றத்தணி யாறை வடதளித் தெருட்ட ரைத்தொழத் தீவினை தீருமே. |
5.058.7 |
திரட்டிய இரையாகிய சோற்றுக் கவளத்தையே மிகத்திணிக்கும் சமண் பொய்யர்களை அங்கிருந்தும் பிரித்த பெருமானை. அருள் திறத்தை உடைய அழகு பொருந்திய பழையாறை வடதளியில் தௌவிக்கும் பிரானைத் தொழத் தீவினைகள் யாவும் தீரும்.
1659 | ஓதி னத்தெழுத் தஞ்சுண ராச்சமண் வேதி னைப்படுத் தானைவெங் கூற்றுதை பாத னைப்பழை யாறை வடதளி நாத னைத்தொழ நம்வினை நாசமே. |
5.058.8 |
அடியார் இனத்தே ஓதப்படும் திருவஞ்செழுத்தை உணராத சமணர்களை வேதனைப்படுத்தியவனும், வெங்கூற்றுவனை உதைத்த பாதம் உடையவனும் ஆகிய பழையாறை வடதளியில் உறையும் நாதனைத் தொழ நம் வினைகள் நாசமாம்.
1660 | வாயி ருந்தமி ழேபடித் தாளுறா ஆயி ரஞ்சம ணும்மழி வாக்கினான் பாயி ரும்புன லாறை வடதளி மேய வன்னென வல்வினை வீடுமே. |
5.058.9 |
மெய்ம்மையும் பெருமையும் உடைய தெய்வத் தமிழையே பயின்று ஆளாக உறாத ஆயிரஞ் சமணரையும் அழிவின் கட்படுத்தவனும்இ பாய்கின்ற பெருந்தண்ணீர் வளம் உடைய பழையாறை வடதளியில் மேவியவனும் ஆகிய பெருமான் என்று சொல்லுமளவிலேயே வல்வினைகள் கெடும்.
1661 | செருத்த னைச்செயுஞ் சேணரக் கன்னுடல் எருத்தி றவிர லாலிறை யூன்றிய அருத்த னைப்பழை யாறை வடதளித் திருத்த னைத்தொழு வார்வினை தேயுமே. |
5.058.10 |
போரினைச் செய்யும் சேண் புகழ் உடைய இராவணனின் உடலும், பிடரியும் இறும்படித் திருவிரலால் சிறிதே ஊன்றிய சொற்பொருள் வடிவானவனாகிய பழையாறைவடதளியின் அழகிய பெருமானைத் தொழுவார் வினைகள் தேயும்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 56 | 57 | 58 | 59 | 60 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பழையாறைவடதளி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பழையாறை, வடதளியில், சமணரைக், தீருமே, தீரும், வினைகள், னைப்பழை, வடதளித், சமணர்களை, வெண்மழுப், குஞ்சமண், திருச்சிற்றம்பலம், திருமுறை, நிலையி, பெருமானை, ரைக்கடிந், ரைப்பழை, திருப்பழையாறைவடதளி