முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.046.திருப்புகலூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.046.திருப்புகலூர்
5.046.திருப்புகலூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வர்த்தமானீசுவரர்.
தேவியார் - கருந்தார்க்குழலியம்மை.
1527 | துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ மின்னக் கன்னவெண் திங்களைப் பாம்புடன் என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே. |
5.046.1 |
கோவண ஆடையையும், வெண்ணீற்றுப் பொடியணிந்த மேனியையும், பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர்?
1528 | இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும் நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப் புரைப்பி லாத பொழிற்புக லூரரை உரைக்கு மாசொல்லி யொள்வளை சோருமே. |
5.046.2 |
இப்பெண்,நெட்டுயிர்க்கும் பாம்பையும், அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும், நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள்.
1529 | ஊச லாம்அர வல்குவென் சோர்குழல் ஏச லாம்பழி தந்தெழில் கொண்டனர் ஓசொ லாய்மக ளேமுறை யோவென்று பூசல் நாமிடு தும்பு லூரர்க்கே. |
5.046.3 |
அசைந்தாடும் அரவத்தின் படத்தைப் போன்ற அல்குலை உடைய என் சோர்குழலாளாகிய பெண்ணைச் சுற்றத்தார் முதலாயினோர் ஏசலாகும் பழி சுமத்தி அவள் எழிலைக் கொண்டனர். ஆதலால், 'ஓ, மகளே ! சொல்வாயாக ! முறையோ ' என்று புகலூர் இறைவர்க்கு நாம் பூசல் இடுவோமாக.
1530 | மின்னின் நேரிடை யாளுமை பங்கனைத் தன்னை நேரொப் பிலாத தலைவனைப் புன்னைக் கானற் பொழிற்புக லூரனை என்னு ளாகவைத் தின்புற் றிருப்பனே. |
5.046.4 |
மின்னலையொத்த இடையாளாகிய உமையினை ஒருபங்கில் உடையவனும், தன்னை நிகர்க்கு மொன்றில்லாத தலைவனும் ஆகிய புன்னைக்கானல் பொழில் சூழ்ந்த புகலூரனை என் உள்ளத்து வைத்து அடியேன் இன்பமுற்றிருப்பேன்.
1531 | விண்ணி னார்மதி சூடிய வேந்தனை எண்ணி நாமங்க ளோதி யெழுத்தஞ்சுங் கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில் புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே. |
5.046.5 |
விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை, நாமங்கள் கூறியும், திருவைந்ழுத்தால் தியானித்தும், கண்ணினாற் காழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிரும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம்.
1532 | அண்ட வாண ரமுதுண நஞ்சுண்டு பண்டு நான்மறை யோதிய பாடலன் தொண்ட ராகித் தொழுது மதிப்பவர் புண்ட ரீகத்து ளார்புக லூரரே. |
5.046.6 |
புகலூர்த் தலத்து இறைவர், தேவர்கள் அமுதுண்ணவும் தாம் நஞ்சுண்டவர்; பழமையில் நான்மறைப் பாடல்களால் ஓதப்பட்டவர்; தொண்டராகித் தொழுது மதிக்கின்றவர்களின் இதயத் தாமரையில் உள்ளவர் ஆவர்.
1533 | தத்து வந்தலை கண்டறி வாரிலைத் தத்து வந்தலை கண்டவர் கண்டிலர் தத்து வந்தலை நின்றவர்க் கல்லது தத்து வனலன் தண்புக லூரனே. |
5.046.7 |
தத்துவங்களின் கூறுபாடுகளை முடிவு போகக் கண்டு அறிவார் இலர்; அவ்வாறு தத்துவங்களை முடிவு போகக் கண்டவர் காணாதவரேயாவர்; தத்துவம் தலைநின்றவர்க்கே அல்லது தத்துவவடிவானவன் அல்லன் புகலூர்ப் பெருமான்.
1534 | பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர் கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர் வருங்கை யானை மதகளி றஞ்சினைப் பொருங்கை யானைகண் டீர்புக லூரரே. |
5.046.8 |
புகலூர்த்தலத்து இறைவர், பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர்; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர்.
1535 | பொன்னொத் தனிறத் தானும் பொருகடல் தன்னொத் தநிறத் தானு மறிகிலாப் புன்னைத் தாது பொழிற்புக லூரரை என்னத் தாவென என்னிடர் தீருமே. |
5.046.9 |
பொன்னை ஒத்த நிறம் உடைய பிரமதேவனும், அளைவீசும் கடைலையொத்த நீல நிறத்தவனான திருமாலும் அறியப்படாத இயல்பினரும் புன்னையின் மகரந்தங்களை உடைய பொழில் சூழ்ந்த திருப்புகலூரின்கண் எழுந்தருளியிருப்பவருமான பெருமானை "என் தந்தையே" என்று கூற என் இடர்கள் அனைத்தும் தீரும்.
1536 | மத்த னாய்மதி யாது மலைதனை எத்தி னான்திரள் தோண்முடி பத்திற ஒத்தி னான்விர லாலொருங் கேத்தலும் பொத்தி னான்பு லூரைத் தொழுமினே. |
5.046.10 |
மதச் செருக்குடையவனாய்ச்சிறிதும் மதியாமல் திருக்கயிலாயத்தை எடுக்கலுற்ற இராவணனின் திரண்ட தோள்களும், முடிபத்தும் இறும்படியாகத் திருவிரலால் ஒற்றியவனும், தன் நரம்புகளே யாழாகக்கொண்டு அவன் எத்துதலும் மீண்டும் அருள்செய்தவனும் ஆகிய பெருமான் உறையும் திருப்புகலூரைத் தொழுவீர்களாக.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 44 | 45 | 46 | 47 | 48 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்புகலூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - பொழிற்புக, சூழ்ந்த, வந்தலை, இறைவர், தொழுது, கண்டவர், பிளிறி, பெருமான், முடிவு, பொழில், பெருமானை, திருச்சிற்றம்பலம், திருமுறை, பாம்புடன், நுண்ணிய, திருப்புகலூர், உறையும், கொண்டனர்