முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.045.திருத்தோணிபுரம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.045.திருத்தோணிபுரம்
5.045.திருத்தோணிபுரம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - தோணியப்பர்.
தேவியார் - திருநிலைநாயகியம்மை.
1517 | மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால் நீதி தான்சொல நீயெனக் காரெனும் சோதி யார்தரு தோணி புரவர்க்குத் தாதி யாவன்நா னென்னுமென் தையலே. |
5.045.1 |
சிவபெருமான்மேற் காதல் மிகுந்து, 'மனைக் கண் இரு' என்று நான் கூறியபோது, "எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை?" என்று சொல்வதோடு, "ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன்" என்றும் கூறுகின்றனள் என் மகள்.
1518 | நக்கம் வந்து பலியிடென் றார்க்கிட்ட மிக்க தையலை வெள்வளை கொள்வது தொக்க நீர்வயல் தோணி புரவர்க்குத் தக்க தன்று தமது பெருமைக்கே. |
5.045.2 |
நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து 'பலி இடுக' என்றார்க்கு இட்டம் மிகுந்த என் பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று.
1519 | கெண்டை போல்நய னத்திம வான்மகள் வுண்டு வார்குழ லாளுட னாகவே துண்ட வான்பிறைத் தோணி புரவரைக் கண்டு காமுறுகின்றனள் கன்னியே. |
5.045.3 |
கெண்டைமீன் போன்ற கண்ணை உடைய இமவான் மகளாகிய வண்டுகள் செறிந்த நீண்ட குழலாள் உடனாக உறையும் வெள்ளிய பிறைமதி அணிந்த தோணிபுரத்து இறைவரைக் கண்டு இப்பெண் காமுறுகின்றனள்.
1520 | பாலை யாழ்மொழி யாளவள் தாழ்சடை மேல ளாவது கண்டனள் விண்ணுறச் சோலை யார்தரு தோணி புரவர்க்குச் சால நல்லளா கின்றனள் தையலே. |
5.045.4 |
பாலையாழின் இனிய இசையை ஒத்த மொழியாளாகிய கங்கை தாழ்சடையின்மேல் உள்ளவளாதலைக் கண்டும்,விண்ணைமிக்குப் பொருந்திய சோலைகள் செறிந்த தோணி புரத்திறைவர்க்கு மிகவும் நல்லவளாகின்றனள் இப்பெண்.
1521 | பண்ணின் நேர்மொழி யாள்பலி யிட்டவிப் பெண்ணை மால்கொடு பெய்வளை கொள்வது சுண்ண மாடிய தோணிபு ரத்துறை அண்ண லாருக்குச் சால அழகிதே. |
5.045.5 |
சுண்ணமாடிய தோணிபுரத்து உறைகின்ற அண்ணலாராகிய சிவபெருமானுக்குப் பலியிட்டவளும் பண்ணை ஒத்த இனிய மொழியாளுமாகிய இப்பெண்ணுக்கு மயக்கம் கொடுத்துப் பெய்யப் பெற்ற வளைகளையும் கொள்வது சால அழகுடைய செயலோ?
1522 | முல்லை வெண்நகை மொய்குழ லாயுனக் கல்ல னாவ தறிந்திலை நீகனித் தொல்லை யார்பொழில் தோணி புரவர்க்கே நல்லை யாயிடு கின்றனை நங்கையே. |
5.045.6 |
முல்லையரும்புகளைப் போன்ற ஒளிச் சிரிப்பையும் வண்டுகள் மொய்க்கும் கூந்தலையும் உடைய நங்கையே! கனிகள் உடையதாகிய பொழில் சூழ்ந்த பழைய தோணிபுரத்து இறைவர்க்கு நீ நல்லவளாகின்றனை; ஆயினும் உனக்கு அவன் அல்லனாவதனை நீ அறிந்திலை.
1523 | ஒன்று தானறி யாருல கத்தவர் நின்று சொல்லி நிகழ்ந்த நினைப்பிலர் துன்று வார்பொழில் தோணி புரவர்தம் கொன்றை சூடுங் குறிப்பது வாகுமே. |
5.045.7 |
தலைவிக்குற்ற நோயின் காரணம் நேறொன்றாதலை இவ்வுலகத்தவர் அறியார்; நின்று சொல்லி அவளுக்கு நிகழ்ந்த நினைப்பு இல்லாதவர்கள்; நெருங்கிய நீண்டுயர்ந்த பொழில்களை உடைய தோணிபுரத்து இறைவருடைய கொன்றை மலரைச் சூட விழையும் குறிப்பே அந்நோய்க்குக் காரணமாகும்.
1524 | உறவு பேய்க்கண முண்பது வெண்தலை உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி துறைக ளார்கடல் தோணி புரத்துறை இறைவ னார்க்கிவ ளென்கண்டன் பாவதே. |
5.045.8 |
உறவு பேய்க்கூட்டங்கள்; உண்பதோ வெண்தலையில்; வாழ்வதோ சுடுகாட்டில்; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி; துறைகள் பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள் இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள்?
1525 | மாக யானை மருப்பேர் முலையினர் போக யானு மவண்புக்க தேபுகத் தோகை சேர்தரு தோணி புரவர்க்கே ஆக யானு மவர்க்கினி யாளதே. |
5.045.9 |
மேகம் போன்ற கரிய யானையின் தந்தங்களைப் போன்ற தனங்களை உடையவர் காதலித்துச் செல்ல அவர்பின் யானும் சென்று காதலிக்க அவர் அழகில் ஈடுபட்டு அடிமையேன் ஆயினேன்.
1526 | இட்ட மாயின செய்வாளென் பெண்கொடி கட்டம் பேசிய காரரக் கன்றனைத் துட்ட டக்கியதோணி புரத்துறை அட்ட மூர்த்திக்கு அன்பது வாகியே. |
5.045.10 |
என் பெண்கொடியாகிய மகள், தன் தொல்லைகளால் உழந்து இசைபாடிய இராவணனாகிய கரிய அரக்கனது தீய செயலை அடக்கிய தோணிபுரத்து இறைவராகிய அட்டமூர்த்திக்கு அன்புகொண்டவளாகித் தன் விருப்பத்திற்கு உரியனவற்றைச் செய்பவளாயினள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 43 | 44 | 45 | 46 | 47 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருத்தோணிபுரம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - தோணிபுரத்து, கொள்வது, பெண்கொடி, நின்று, புரவர்க்கே, சொல்லி, நங்கையே, உறைகின்ற, கொன்றை, நிகழ்ந்த, புரத்துறை, இப்பெண், யார்தரு, திருச்சிற்றம்பலம், திருமுறை, புரவர்க்குத், காமுறுகின்றனள், திருத்தோணிபுரம், செறிந்த, வண்டுகள், பொருந்திய