முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.043.திருநல்லம்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.043.திருநல்லம்

5.043.திருநல்லம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - உமாமகேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1496 | கொல்லத் தான்நம னார்தமர் வந்தக்கால் இல்லத் தார்செய்ய லாவதெ னேழைகாள் நல்லத் தான்நமை யாளுடை யான்கழல் சொல்லத் தான்வல்லி ரேல்துயர் தீருமே. |
5.043.1 |
அறிவற்றவர்களே! நமன் தமராகிய எமதூதர் கொல்லவந்தபோது இல்லத்தில் உள்ளவர்கள் செய்யலாவது யாது? திருநல்லத்தில் எழுந்தருளியிருப்பவனும், நம்மை ஆளுடையவனும் ஆகிய பெருமான் கழல் சொல்ல வல்லமை உடையீரேல், உம்துயர்கள் தீரும்.
1497 | பொக்கம் பேசிப் பொழுது கழியாதே. துக்கந் தீர்வகை சொல்லுவன் கேண்மினோ தக்கன் வேள்வி தகர்த்த தழல்வண்ணன் நக்கன் சேர்நல்லம் நண்ணுதல் நன்மையே. |
5.043.2 |
பொய்ம்மொழிகளைப் பேசிப் பொழுது கழியாமல் துயரங்கள் தீர்தற்கு ஓர் உபாயம் சொல்லுவேன்; கேட்பீராக; தக்கன் வேள்வியைத் தகர்த்த தீவண்ணனாகிய திகம்பரன் உறைகின்ற திருநல்லம் நண்ணி வழிபடுதலே உமக்கு நன்மை.
1498 | பிணிகொள் வார்குழற் பேதையர் காதலால் பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள் அணுக வேண்டி லரன்நெறி யாவது நணுக நாதன் நகர்திரு நல்லமே. |
5.043.3 |
பாவம் செய்தவர்களே! மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக்கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடத்து வைத்த காதலால், அவர்கட்கு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால், நெருங்கிப் பணி செய்ய வேண்டில் அரன் நெறியே அணுகி திருநல்லம் சென்று வழிபடிவீர்களாக.
1499 | தமக்கு நல்லது தம்முயிர் போயினால் இமைக்கும் போது மிராதிக் குரம்பைதான் உமைக்கு நல்லவன் தானுறை யும்பதி நமக்கு நல்லது நல்ல மடைவதே. |
5.043.4 |
தம்முயிர் தம்மைவிட்டு நீங்கினால் தமக்கு நல்லது; அங்ஙனமே இவ்வுடலாகிய குடிசை இமைப்பொழுது கூட நில்லா இயல்புடையது; உமாதேவிக்கு நல்லவனாகிய இறைவன் உறைகின்ற பதியாகிய திருநல்லம் என்னுந் தலத்தை அடைந்து வழிபடுவதே நமக்கு நல்லது ஆகும்.
1500 | உரை தளர்ந்துட லார்நடுங் காமுனம் நரைவி டையுடை யானிடம் நல்லமே பரவு மின்பணி மின்பணி வாரொடே விரவு மின்விர வாரை விடுமினே. |
5.043.5 |
வார்த்தைகள் தளர்ந்து உடல் நடுங்குவதற்கு முன்பே, நரை உடைய இடபவாகனத்தை உடைய இறைவன் வீற்றிருக்கும் இடமாகிய திருநல்லத்திற்சென்று பரவிப் பணிவீர்களாக; பணிகின்ற அன்பர்களோடு கலந்து வழிபடுவீராக; அங்ஙனம் கலவாதவர்களை நீங்குவீர்களாக.
1501 | அல்ல லாகஐம் பூதங்க ளாட்டினும் வல்ல வாறு சிவாய நமவென்று நல்லம் மேவிய நாத னடிதொழ வெல்ல வந்த வினைப்பகை வீடுமே. |
5.043.6 |
ஐம்பெரும் பூதங்கள் துன்பங்கள் உண்டாக ஆட்டினாலும், திருநல்லத்தில் எழுந்தருளியுள்ள நாதன் திருவடிகளை வல்லவாறு ழுசிவாயநம" என்று தொழுதால். வெல்லுதற்கு வந்த வினைகளாகிய பகை கெடும்.
1502 | மாத ராரொடு மக்களுஞ் சுற்றமும் பேத மாகிப் பிரிவதன் முன்னமே நாதன் மேவிய நல்லம் நகர்தொழப் போது மின்னெழு மின்புக லாகுமே. |
5.043.7 |
மனைவியரும், மக்களும், சுற்றத்தாரும் வேற்றுமைப்பட்டுப் பிரிகின்ற இறுதிக்காலம் வருவதற்குமுன்பே; தலைவன் மேவியுள்ள திருநல்லமாகிய நகரைத் தொழப் போதுவீர்களாக; எழுவீர்களாக; அப்பெருமானே புகலாவான்.
1503 | வெம்மை யான வினைக்கடல் நீங்கிநீர் செம்மை யாய சிவகதி சேரலாம் சும்மை யார்மலர் தூவித் தொழுமினோ நம்மை யாளுடை யானிடம் நல்லமே. |
5.043.8 |
வண்டுகளின் ஒலி பொருந்திய மலர்களைத் தூவி நம்மை ஆளுடையானாகிய பெருமான் உறையும் திருநல்லத்தினைத் தொழுவீர்களாக; தொழுதால் வெப்பம் பொருந்திய வினைக்கடலினின்றும் நீங்கி நீர் செம்மையாகிய சிவகதியினைச் சேரலாம்.
1504 | கால மான கழிவதன் முன்னமே ஏலு மாறு வணங்கிநின் றேத்துமின் மாலும் மாமல ரானொடு மாமறை நாலும் வல்லவர் கோனிடம் நல்லமே. |
5.043.9 |
திருமாலும், பிரமனும், பெருமைமிக்க வேதங்கள் நான்கும் வல்லவர்களாகிய முனிவர்களும் ஆகிய அனைவர்க்கும் கோனாகிய சிவபெருமான் வீற்றிருக்கும் இடம் திருநல்லம். ஆதலால், பொருந்திய காலம் கழிவதற்கு முன்பே, இயலும் நெறியில் வணங்கி நின்று வழிபடுவீராக.
1505 | மல்லை மல்கிய தோளரக் கன்வலி ஒல்லை யில்லொழித் தானுறை யும்பதி நல்ல நல்ல மெனும்பெயர் நாவினால் சொல்ல வல்லவர் தூநெறி சேர்வரே. |
5.043.10 |
வளம் நிறைந்த தோள்களை உடைய இராவணன் ஆற்றலை விரைந்து ஒழித்த பெருமான் உறைகின்ற பதியாகிய நல்ல நல்லம் என்னும் பெயரை நாவினால். சொல்லும் வல்லமை உடையவர்கள் தூயநெறியிற் சேர்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 41 | 42 | 43 | 44 | 45 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருநல்லம் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருநல்லம், நல்லமே, நல்லது, நல்லம், உறைகின்ற, பெருமான், பொருந்திய, முன்பே, பதியாகிய, யானிடம், மின்பணி, வழிபடுவீராக, வல்லவர், நாவினால், சேரலாம், முன்னமே, இறைவன், தொழுதால், வீற்றிருக்கும், தம்முயிர், வல்லமை, பேசிப், திருநல்லத்தில், யாளுடை, திருமுறை, திருச்சிற்றம்பலம், பொழுது, தக்கன், தானுறை, யும்பதி, தமக்கு, காதலால், தகர்த்த, நமக்கு