முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.041.திருப்பைஞ்ஞீலி
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.041.திருப்பைஞ்ஞீலி
5.041.திருப்பைஞ்ஞீலி
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - நீலகண்டேசுவரர்.
தேவியார் - விசாலாட்சியம்மை.
1476 | உடையர் கோவண மொன்றுங் குறைவிலர் படைகொள் பாரிடஞ் சூழ்ந்தபைஞ் ஞீலியார் சடையிற் கங்கை தரித்த சதுரரை அடைய வல்லவர்க் கில்லை அவலமே. |
5.041.1 |
கோவண உடையினரும், ஒன்றும் குறைவில்லாதவரும், படைக்கலங்களைக்கொண்ட பூதகணங்கள் சூழ்ந்த திருப்பைஞ்ஞீலித் திருத்தலத்தில் எழுந்தருளியவரும் ஆகிய சடையிற் கங்கையை வைத்த சதுரப்பாடு உடைய பெருமானை அடையும் வல்லமை உடைய அன்பர்களுக்குத் துன்பங்கள் இல்லை.
1477 | மத்த மாமலர் சூடிய மைந்தனார் சித்த ராய்த்திரி வார்வினை தீர்ப்பரால் பத்தர் தாந்தொழு தேத்துபைஞ் ஞீலியெம் அத்த னைத்தொழ வல்லவர் நல்லரே. |
5.041.2 |
ஊமத்தம் மலர்களைச் சூடிய பெருவீரரும், சித்தராகத் திரிபவரும், அன்பர் பலர் தொழுதேத்தும் பைஞ்ஞீலியில் உறையும் அத்தரும், தொழுவார் வினை தீர்ப்பவரும் ஆகிய அப்பெருமானைத் தொழும் வல்லமை உடையவர் நல்லவர் ஆவர்.
1478 | விழுது சூலத்தன் வெண்மழு வாட்படைக் கழுது துஞ்சிருள் காட்டகத் தாடலான் பழுதொன் றின்றிப் பைஞ்ஞீலிப் பரமனைத் தொழுது செல்பவர் தமவினை தூளியே. |
5.041.3 |
நிணம் பொருந்திய சூலத்தையும், வெண் மழுவாளையும் படைக்கலமாக உடையவனும், பேய்களும் தூங்குகின்ற நள்ளிருளில் சுடுகாட்டில் ஆடலை உடையவனும், பைஞ்ஞீலியில் உறையும் பரமனும் ஆகிய பெருமானைப் பழுது ஒன்றும் இன்றித் தொழுது செல்பவர் வினைகள் பொடியாகும்.
1479 | ஒன்றி மாலும் பிரமனுந் தம்மிலே நின்ற சூழ லறிவரி யானிடம் சென்று பாரிட மேத்துபைஞ் ஞீலியுள் என்றும் மேவி யிருந்த அடிகளே. |
5.041.4 |
திருமாலும் பிரமனும் தம்மிலே ஒன்றித் தேட முற்பட்டும் திருவடியும் திருமுடியும் நின்ற சூழல் அறிய அரியவனாய் விளங்கிய பெருமான் வீற்றிருக்கும் இடம், பூதங்கள் சென்று ஏத்துகின்ற பைஞ்ஞீலியாகும். இத்தலத்திலேயே அடிகள் என்றும் மேவியிருப்பது.
1480 | வேழத் தின்னுரி போர்த்த விகிர்தனார் தாழச் செஞ்சடை மேற்பிறை வைத்தவர் தாழைத் தண்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியார் யாழின் பாட்டை யுகந்த அடிகளே. |
5.041.5 |
வேழத்தின் தோலை உரித்துப் போர்த்த விகிர்தரும், செஞ்சடைமேல் தாழுமாறு பிறை வைத்தவரும், தாழைகள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்த பைஞ்ஞீலித் தலத்து உறைபவரும் ஆகிய பெருமான் யாழ்க்குப் பொருந்திய பாடலை உகந்த அடிகள் ஆவர்.
1481 | குண்டு பட்டுக் குறியறி யாச்சமண் மிண்ட ரோடு படுத்துய்யப் போந்துநான் கண்டங் கார்வயல் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் அண்ட வாண னடியடைந் துய்ந்தனே. |
5.041.6 |
உடல் பெருக்கிக் குறிக்கோளையறியாச் சமண்மிண்டரோடு பொருந்தி உய்யப்போந்து நான், கரும்புகள் நிறைந்த வயல் சூழ்ந்த பைஞ்ஞீலித்தலத்து எழுந்தருளியுள்ள தேவதேவன் திருவடிகளை அடைந்து உய்ந்தேன்.
1482 | வரிப்பை யாடர வாட்டி மதகரி உரிப்பை மூடிய வுத்தம னாருறை திர்ப்பைஞ் ஞீலி திசைதொழு வார்கள் போய் இருப்பர் வானவ ரோடினி தாகவே. |
5.041.7 |
வரிகளை உடைய படத்தினைப் பொருந்தி ஆடும் அரவத்தை ஆட்டி மதச் செருக்குடைய யானையின் உரியை மெய்ப்பையாக மூடிய உத்தமனார் உறைகின்ற திருப்பைஞ்ஞீலித் தலத்தைத் திக்குநோக்கித் தொழுபவர்கள் வானவர்களோடு இனிதாக இருப்பர்.
1483 | கோடல் கோங்கம் புறவணி முல்லைமேல் பாடல் வண்டிசை கேட்கும்பைஞ் ஞீலியார் பேடு மாணும் பிறரறி யாததோர் ஆடு நாக மசைத்த அடிகளே. |
5.041.8 |
செங்கோடலும், வெண்கோடலும், கோங்கமும் ஆகிய பூக்கள் புறவுநிலமாகிய முல்லைநிலத்தை அணிசெய்தலால், வண்டிசைக்கும் பாடல் கேட்கின்ற பைஞ்ஞீலித் தலத்து இறைவர் பேடும் ஆணும் ஆகிய பிறர் அறியாத இயல்பினர், ஆடும் பாம்பைக் கட்டிய ஒப்பற்ற அடிகள் ஆவர்.
1484 | காரு லாமலர்க் கொன்றையந் தாரினான் வாரு லாமுலை மங்கையொர் பங்கினன் தேரு லாம்பொழில் சூழ்ந்தபைஞ் ஞீலியெம் ஆர்கி லாவமு தையடைந் துய்ம்மினே. |
5.041.9 |
கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும், கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும், பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக.
1485 | தருக்கிச் சென்று தடவரை பற்றலும் நெருக்கி யூன்ற நினைந்து சிவனையே அரக்கன் பாட அருளுமெம் மானிடம் இருக்கை ஞீலியென் பார்க்கிட ரில்லையே. |
5.041.10 |
அரக்கனாகிய இராவணன் செருக்கினை உற்றுத்தடவரையாகிய திருக்கயிலாயத்தைப் பற்றுதலும், நெருக்கித் திருவிரலால் ஊன்ற, சிவனையே நினைந்து அவன்பாட அவனுக்கு அருள்புரியும் எம்மான் இடம் பைஞ்ஞீலி என்றுரைப்பார்க்கு இடர்கள் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 39 | 40 | 41 | 42 | 43 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருப்பைஞ்ஞீலி - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சூழ்ந்த, சூழ்ந்தபைஞ், பொருந்திய, அடிகளே, உடையவனும், அடிகள், சென்று, ஞீலியெம், பைஞ்ஞீலியில், ஞீலியார், நினைந்து, சிவனையே, போர்த்த, பெருமான், நிறைந்த, அடைந்து, இருப்பர், தலத்து, பைஞ்ஞீலித், பொருந்தி, தம்மிலே, திருப்பைஞ்ஞீலித், திருமுறை, ஒன்றும், சடையிற், வல்லமை, உறையும், திருச்சிற்றம்பலம், திருப்பைஞ்ஞீலி, செல்பவர், தொழுது, என்றும்