முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 5.011.திருமீயச்சூர்
ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 5.011.திருமீயச்சூர்
5.011.திருமீயச்சூர்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
திருக்குறுந்தொகை
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - முயற்சிநாதேசுவரர்.
தேவியார் - சுந்தரநாயகியம்மை.
1174 | தோற்றுங் கோயிலுந் தோன்றிய கோயிலும் வேற்றுக் கோயில் பலவுள மீயச்சூர்க் கூற்றம் பாய்ந்த குளிர்புன் சடையரற் கேற்றங் கோயில்கண் டீரிளங் கோயிலே. |
5.011.1 |
இந்நாள்வரை தோன்றிய கோயில்களும், இனித்தோன்றும் கோயில்களும், வேற்றுக்கோயில்களும் பலவுளவேனும், கூற்றுவனைத்தடிந்த குளிர்ந்த புன்சடை உடைய அரனுக்கு மீயச்சூர் இளங்கோயிலே ஏற்றம் உடைய கோயிலாகும்; காண்பீராக.
1175 | வந்த னையடைக் கும்மடித் தொண்டர்கள் பந்த னைசெய்து பாவிக்க நின்றவன் சிந்த னைதிருத் துந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. |
5.011.2 |
திருவடிக்கு வழிபாடு செய்தலையே உள்ளத்தடைக்கும் தொண்டர்கள் தம்நெஞ்சைக் கட்டுப்படுத்திப் பாவிக்கநின்றவனும், எம்மை அடிமையாக உடையானும் விளங்கியருளும் திருமீயச்சூர் இளங்கோயில் வழிபடுவார் சிந்தனையைத் திருத்தவல்லது ஆகும்.
1176 | பஞ்ச மந்திரம் ஓதும் பரமனார் அஞ்ச ஆனை யுரித்தன லாடுவார் நெஞ்சம் வாழி நினைந்திரு மீயச்சூர் எந்த மையுடை யாரிளங் கோயிலே. |
5.011.3 |
நெஞ்சமே! ஈசானம் முதலிய ஐந்து மந்திரங்களை ஓதும் பரமனும்,ஆனை அஞ்சுமாறு உரித்தவனும், அனல் ஆடுவானும், திருமீயச்சூர் இளங்கோயிலில் எம்மை உடையானுமாகிய பெருமானையே நினைந்திரு; அந்நினைப்பால் வாழ்வாய்.
1177 | நாறு மல்லிகை கூவிளஞ் செண்பகம் வேறு வேறு விரித்த சடையிடை ஆறு கொண்டுகந் தான்திரு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. |
5.011.4 |
மணம் வீசும் மல்லிகை, கூவிளம், செண்பகம் முதலிய மலர்களை வேறுவேறாக விரித்த சடையிடை ஆற்றோடுகொண்டுகந்தான் திருமீயச்சூரின் இளங்கோயிலில் விடைமேற்கொண்டு உகந்த பெருமானே! (அடியார் சாத்தும் மல்லிகை முதலியவற்றை முடியில் ஏற்று மகிழ்ந்து அருள்புரிவன் என்பது கருத்து)
1178 | வெவ்வ வண்ணத்து நாகம் வெருவவே கவ்வ வண்ணக் கனல்விரித் தாடுவர் செவ்வ வண்ணந் திகழ்திரு மீயச்சூர் எவ்வ வண்ணம் பிரானிளங் கோயிலே. |
5.011.5 |
வெம்மையான வண்ணத்தையுடைய நாகம் அஞ்சும்படியாக எப்பொருளையும் கவ்விக்கொள்ளும் வண்ணத்தையுடைய கனல் விரித்தாடுவார், திருமீயச்சூர் இளங்கோயில் செவ்வண்ணந்திகழ் மேனியுள்ள பிரானது வண்ணங்கள் எப்படிப்பட்டவை!
1179 | பொன்னங் கொன்றையும் பூவணி மாலையும் பின்னுஞ் செஞ்சடை மேற்பிறை சூடிற்று மின்னு மேகலை யாளொடு மீயச்சூர் இன்ன நாள் அக லாரிளங் கோயிலே. |
5.011.6 |
திருமீயச்சூர் இளங்கோயிலில் ஒளிவிடும் மேகலை அணிந்த உமையம்மையோடு இது போன்ற நாளினும் அகலாது உள்ள பெருமான் பின்னிகொண்டுள்ள சடைமேல் பிறையுடன் சூடியது, பொன்போன்ற கொன்றைக்கண்ணியும் சூடியார் (கொடுக்கும்) மலர்களால் அணிபெறத் தொகுக்கப்பெற்ற மாலையும் ஆம்.
1180 | படைகொள் பூதத்தன் பைங்கொன்றைத் தாரினன் சடைகொள் வெள்ளத்தன் சாந்தவெண் நீற்றினன் விடைகொ ளூர்தியி னான்திரு மீயச்சூர் இடைகொண் டேத்தநின் றாரிளங் கோயிலே. |
5.011.7 |
பூதங்களைப் படையாகக் கொண்டவனும், கொன்றைமாலையனும், சடையில் வெள்ளம் உடையவனும், சாந்த வெண்ணீற்றனும், விடையூர்தியானும், திருமீயச்சூர் இளங்கோயிலின் கண் செல்வி தெரிந்து ஏத்துமாறு நின்ற இறைவனேயாவன்.
1181 | ஆறு கொண்ட சடையினர் தாமுமோர் வேறு கொண்டதொர் வேடத்த ராகிலும் கூறு கொண்டுகந் தாளொடு மீயச்சூர் ஏறு கொண்டுகந் தாரிளங் கோயிலே. |
5.011.8 |
சடையினில் ஓர் ஆறு கொண்ட இயல்பினரும், வேறுவேறுகொண்ட வேடத்தராமியல்பினரும். கூறு கொண்டுகந்த அம்மையொடும் திருமீயச்சூர் இளங்கோயிலின்கண் ஏறுகொண்டு உகந்தாரேயாவர்.
1182 | வேதத் தானென்பர் வேள்வியு ளானென்பர் பூதத்தா னென்பர் புண்ணியன் தன்னையே கீதத் தான்கிள ருந்திரு மீயச்சூர் ஏதந் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. |
5.011.9 |
புண்ணியனாகிய இறைவனை வேதத்தான் என்றும், வேள்வியுளான் என்றும், பூதத்தான் என்றும் கூறுவர்; கீதம் கிளரும் திருமீயச்சூரில், இளங்கோயிலின்கண் அடியவர் ஏதந்தீர்க்க நின்ற இறைவரேயாவர்.
1183 | கடுக்கண் டன்கயி லாய மலைதனை எடுக்க லுற்ற இராவணன் ஈடற விடுக்க ணின்றி வெகுண்டவன் மீயச்சூர் இடுக்கண் தீர்க்கநின் றாரிளங் கோயிலே. |
5.011.10 |
விடமுண்டகண்டனும், கயிலாயமலையினை எடுக்கலுற்ற இராவணன் ஈடற விடுதற்கேற்ற இடமில்லையாம்படி வெகுண்டவன் மீயச்சூரில் இளங்கோயிலின்கண் இடுக்கண் தீர்க்க நின்ற இறைவனேயாவன்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 99 | 100 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமீயச்சூர் - ஐந்தாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கோயிலே, மீயச்சூர், திருமீயச்சூர், கொண்டுகந், றாரிளங், என்றும், இளங்கோயிலின்கண், இளங்கோயிலில், மல்லிகை, திருச்சிற்றம்பலம், இறைவனேயாவன், தோன்றிய, மாலையும், தீர்க்கநின், திருமுறை, இடுக்கண், வெகுண்டவன், இராவணன், வண்ணத்தையுடைய, தாரிளங், மையுடை, முதலிய, நினைந்திரு, இளங்கோயில், தொண்டர்கள், செண்பகம், கோயில்களும், சடையிடை, விரித்த, யாரிளங்