முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.002.திருக்கெடிலவடவீரட்டானம்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.002.திருக்கெடிலவடவீரட்டானம்
4.002.திருக்கெடிலவடவீரட்டானம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் நடுநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வீரட்டானேசுவரர்.
தேவியார் - திருவதிகைநாயகி.
இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.
11 | சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ்சுடர்த்திங்கட் சூளா மணியும் வண்ண உரிவை யுடையும் வளரும்பவள நிறமும் அண்ண லரண்முர ணேறும் அகலம்வளாய அரவும் திண்ணன் கெடிலப் புனலு முடையாரொருவர் தமர்நாம் |
4.002.1 |
பொடியாக அமைந்த திருநீறாகிய வெள்ளிய சந்தனச் சேறும் முடிமணியாகிய ஒளி வீசும் பிறையும், அழகிய புலித்தோல் ஆடையும், வளர்கின்ற பவளக்கொடி போன்ற நிறமும், தலைமை பொருந்திய பாதுகாவலாக அமைந்த, பகைவரோடு மாறுபடும் காளையும், மார்பில் பரவியிருக்கின்ற பாம்புகளும், திண்ணிய கரையைக் கொண்ட பெரிய நீர்ப்பரப்பினதாகிய கெடிலயாற்று அபிடேகத்திற்குரிய தீர்த்தமும் உடைய ஒப்பற்ற அதிகை வீரட்டருடைய அடியேன் யாம். ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப்போவதும் இல்லை.
12 | பூண்டதொர் கேழ லெயிறும்பொன்றிக ழாமை புரள நீண்டதிண் டோள்வலஞ் சூழ்ந்துநிலாக்கதிர் போல வெண்ணூலும் காண்டகு புள்ளின் சிறகுங்கலந்த கட்டங்கக் கொடியும் ஈண்டு கெடிலப் புனலு முடையாரொருவர் தமர்நாம் |
4.002.2 |
அணிகலனாக அணிந்த மகாவராகத்தின் கொம்பும், நீண்ட திண்ணிய இடத்தோள் மீது வலப்புறமாகச் சுற்றி, பொன்போல் விளங்கும், ஆமை ஓட்டின் மீது புரண்டவாறு, நிலாப் போல் ஒளிவீசும் வெள்ளிய பூணூலும், காண்டற்கினிய கொக்கின் இறகும், தம்மோடு பொருந்திய மழுவின் வடிவம் எழுதப் பெற்ற கொடியும், பெருகிவரும் கெடிலயாற்றுத் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்சவருவதும் இல்லை
13 | ஒத்த வடத்திள நாக முருத்திர பட்ட மிரண்டும் முத்து வடக்கண் டிகையு முளைத்தெழு மூவிலை வேலும் சித்த வடமு மதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்து தத்துங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. |
4.002.3 |
தோளில் மாலையாக அணிந்த இளைய பாம்பும், இரண்டாகிய தோள் பட்டிகையும், பலவடங்களாக அமைந்த முத்து மாலையினை இணைந்த உருத்திராக்கக் கண்டிகையும், மூன்று இலைவடிவாக அமைந்த முத்தலைச் சூலமும், சித்தவடம் என்ற பெயரிய சைவமடம் ஒன்றுடைய திருத்தலமும், மதில்கள் உயரமாக உடைய அதிகை நகரை ஒருபுறம் சூழ்ந்து இயங்கும் விரைந்து செல்லும் கெடில நதித் தீர்த்தமும் உடைய பெருமானுடைய அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றுமில்லை. அஞ்ச வருவதுமில்லை.
14 | மடமான் மறிபொற் கலையு மழுப்பாம் பொருகையில் வீணை குடமால் வரையதிண் டோளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும் இடமால் தழுவிய பாக மிருநில னேற்ற சுவடும் தடமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் |
4.002.4 |
ஒருகையில் மான்குட்டி, ஒருகையில் மான் தோல் ஆடை, ஒருகையில் மழுப்படை, மற்றொரு கையில் பாம்பு, மற்றொருகையில் வீணை இவற்றை உடையவராய், மேற்றிசைப் பெருமலையை ஒத்த திண்ணிய தோள்களும், வில்போல் வளைந்து ஆடுகின்ற கூத்தின் பயிற்சியும், பெரிய உலகங்களைத் தானமாக ஏற்ற சுவடுடைய திருமால் தழுவிப் பொருந்தியிருக்கும், இடப்பாகமும், நீர்த்துறைகள் அமைந்த கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.
15 | பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளே கலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும் வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும் நலமார் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் |
4.002.5 |
பலப்பலவிருப்பங்களை உடையவராய் அவற்றைச் செயற்படுத்தத்துடித்து விரையும் மக்களின் உள்ளத்தில் கலந்து பிறழச் செய்யும் கணபதியாகிய ஆண்யானையையும். இருளைப்போக்கும் வலிமை மிக்க சூரியன் சந்திரன் ஆகிய இரண்டு ஒளிகளையும், மேம்பட்ட கயிலை மலையையும், நன்மைகள் நிறைந்த கெடில நதித் தீர்த்தத்தையும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.
16 | கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும் பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும் அரங்கிடை நூலறி வாள ரறியப் படாததொர் கூத்தும் நிரந்த கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் |
4.002.6 |
உயிர்கள் அறியாதவாறு மறைந்து நின்று அடியார்களுக்கு ஒளி வீசும் திருவருளாகிய விளக்கின் ஒளியும், சுழலுகின்ற துடி என்ற இசைக் கருவியின் ஓசையும், எங்கும்பரவிய தேவ கணத்தர் பதினெண்மரும் வேற்றிடங்களில் பழகி அறியாதன வாகிய பாட்டின் ஒலியும், கூத்துவல்லார் கூத்தாடும் அரங்கங்களில் கண்டு அறியப்படாததாகிய கூத்து நிகழ்ச்சியும், முறையாக ஓடிவரும் கெடில நதித் தீர்த்தத்தின் புனிதமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள் ஆதலின் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.
17 | கொலைவரி வேங்கை யதளுங் குவவோ டிலங்குபொற் றோடும் விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும் மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும் உலவு கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. |
4.002.7 |
தம்மால் கொல்லப்பட்ட கோடுகளை உடைய புலித்தோலும், திரட்சியோடு விளங்கும் பொலிவுடைய தோடும், பெருவிலையுடைய சங்கினாலாகிய காதணியும், விலையே இல்லாத மண்டையோடாகிய உண்கலனும், பார்வதி தங்குமிடமாகக்கொண்ட மார்பும், நீலமணியின் நிறங்கொண்டு விளங்கும் கழுத்தும், ஒழுகுகின்ற கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேன் யாங்கள். ஆதலால் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை
18 | ஆடல் புரிந்த நிலையும் அரையி லசைத்த அரவும் பாடல் பயின்றபல் பூதம் பல்லா யிரங்கொள் கருவி நாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்து. ஓடுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. |
4.002.8 |
கூத்தாடுதலை விரும்பிச் செய்த நிலையும், இடுப்பில் இறுக்கிக் கட்டிய பாம்பும், இசைக் கருவிகளைக் கைகளில் கொண்டு, பல ஆயிரக்கணக்கில் சூழ்ந்த பாடல்களில் பழகிய பூதங்கள் பலவும், ஆராய்ந்து, அறியமுடியாத கூத்தும், மிக உயர்ந்த வீரட்டக் கோயிலை ஒரு பக்கத்தில் சுற்றி ஓடும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். ஆதலில் அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.
19 | சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளூம் யாழின் மொழியவ ளஞ்ச அஞ்சா தருவரை போன்ற வேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்து தாழுங் கெடிலப் புனலு முடையா ரொருவர் தமர்நாம் அஞ்சுவதி யாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை. |
4.002.9 |
பாம்பினால் சுற்றப்பட்ட ஆடையும், துணியிலிருந்து கிழித்தெடுக்கப்பட்ட அரைஞாணோடு கூடிய கோவணமும், யாழ் ஒலி போன்ற இனிய குரலை உடைய பார்வதி அஞ்சுமாறு அச்சமின்றிப் பெரிய மலை போன்று வந்த வேழத்தின் தோலை உரித்த காட்சியும், சோலைகள் மிகுந்த வீரட்டத்தை ஒருபுறம் சுற்றிப் பள்ளத்தில் பாயும் கெடில நதித் தீர்த்தமும் உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். ஆதலின் எங்களுக்கு அஞ்சுதற்குரிய பொருள் யாதும் இப்பொழுது இல்லை. இனித் தோன்றப் போவதும் இல்லை.
20 | நரம்பெழு கைகள் பிடித்து நங்கைநடுங்க மலையை உரங்களெல் லாங்கொண்டெடுத்தானொன்பது மொன்று மலற வரங்கள் கொடுத்தருள் செய்வான்வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்து நிரம்பு கெடிலப் புனலு முடையாரொருவர் தமர்நாம் |
4.002.10 |
பார்வதி நடுங்கும்படியாக நரம்புகளால் செயற்படும் கைகளைக் கோத்து தன் வலிமையை எல்லாம் ஒன்று சேர்த்துக் கயிலை மலையைப் பெயர்த்த இராவணனுடைய பத்துத் தலைகளும் கதறும்படியாக முதலில் அழுத்திப் பின் அவன் பாடிய சாமகானம் கேட்டு அவனுக்கு வரங்கள் கொடுத்து அருள் செய்த பெருமானாய், வளருகின்ற சோலைகளை உடைய வீரட்டக் கோயிலை ஒரு புறம் சுற்றி நீர் நிரம்பியுள்ள கெடில நதித் தீர்த்தத்தை உடைய அதிகை வீரட்டரின் அடியேம் யாங்கள். அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்ச வருவதும் இல்லை.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருக்கெடிலவடவீரட்டானம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - மில்லை, கெடிலப், வருவது, யாங்கள், வீரட்டரின், அடியேம், யாதொன்று, தமர்நாம்அஞ்சுவதி, ரொருவர், அஞ்சுவது, முடையா, தீர்த்தமும், வருவதும், ஆதலின், யாதொன்றும், அமைந்த, வீரட்டஞ், முடையாரொருவர், விளங்கும், நிலையும், ஒருகையில், பார்வதி, திண்ணிய, சுற்றி, பாம்பும், ஆதலால், கூத்தும், வீரட்டக், கோயிலை, மார்பும், உடையவராய், சூழ்ந்து, கூத்தின், ஒருபுறம், அணிந்த, வெள்ளிய, வீசும், தமர்நாம்அஞ்சுவதியாதொன்று, சந்தனச், திருமுறை, திருச்சிற்றம்பலம், ஆடையும், பொருந்திய, இப்பொழுது, திருக்கெடிலவடவீரட்டானம், யாதும், பொருள், அடியேன், எங்களுக்கு, யாதொன்றுமில்லை