முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 4.011.நமச்சிவாயப்பதிகம்
நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 4.011.நமச்சிவாயப்பதிகம்
4.011.நமச்சிவாயப்பதிகம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
பண் - காந்தாரம்
திருச்சிற்றம்பலம்
இது சமணர்கள் கற்றூணிற்கட்டிக் கடலிலே வீழ்த்தினபோது ஓதியருளியது.
104 | சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சி வாயவே. |
4.011.1 |
வேதமான வாசகத்திற்கு நிகரான வாக்கியப் பொருளாக உள்ளவனாய்ப் பரஞ்சோதியாகிய அழியாத வீட்டுலகினனாய் உள்ள எம்பெருமானுடைய, பொலிவுடைய, தமக்குத்தாமே இணையான சேவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுதலால் கல்லைத் துணையாகச் சேர்த்து அதனோடு இணைத்துக் கடலில் தள்ளிவிட்டாலும் எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தே நமக்குப் பெரிய துணையாகும்.
105 | பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை ஆவினுக் கருங்கல மரனஞ் சாடுதல் கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது நாவினுக் கருங்கல நமச்சி வாயவே. |
4.011.2 |
பூக்களுக்குள் விலைமதிப்பரிய ஆபரணம்இதழ்கள் மிக்க தாமரையாகும். பசுக்களுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் சிவபெருமான் அபிடேகத்துக்குப் பஞ்சகவ்வியம் உதவுதல். அரசனுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் செங்கோல் வளையாமல் ஆட்சி செய்வதாம். நாவினுக்கு விலைமதிப்பற்ற ஆபரணம் திருவைந்தெழுத்தேயாகும்.
106 | விண்ணுற வடுக்கிய விறகின் வெவ்வழல் உண்ணிய புகிலவை யொன்று மில்லையாம் பண்ணிய வுலகினிற் பயின்ற பாவத்தை நண்ணிநின் றறுப்பது நமச்சி வாயவே. |
4.011.3 |
வானளாவ அடுக்கிய விறகிலே கொடிய நெருப்பு அவற்றை உண்பதற்கு உள்ளே புகுந்தால் விறகினுள் ஒன்றும் மீதியிராது எல்லாம் சாம்பலாகும். இறைவனால் படைக்கப்பட்ட உலகில் மக்கள் பலகாலும் பழகிச் செய்த பாவத்தை நெருங்கி நின்று போக்குவது திருவைந்தெழுத்தேயாகும்.
107 | இடுக்கண்பட் டிருக்கினு மிரந்தி யாரையும் விடுக்கிற் பிரானென்று வினவுவோ மல்லோம். அடுக்கற்கீழ்க் கிடக்கினு மருளி னாமுற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே. |
4.011.4 |
எவ்வளவு வறுமைத் துன்பத்தால் நலிவுறினும் எம்பெருமானை விடுத்து வேறுயாரையும் இரந்து 'என் துன்பத்தைப் போக்கினால் நீ எம்பிரானே' என்று கூறித் துயரத்தைப் போக்கு எனக் கேட்போம் அல்லோம். மலையின் அடியில் அகப்பட்டுக் கிடந்தாலும் அருளினால் நமக்கு ஏற்படும் நடுக்கத்தை நீக்குவது திருவைந் தெழுத்தேயாகும்.
108 | வெந்தநீ றருங்கலம் விரதி கட்கெலாம் அந்தணர்க் கருங்கல மருமறை யாறங்கம திங்களுக் கருங்கலந் திகழு நீண்முடி நங்களுக் கருங்கல நமச்சி வாயவே. |
4.011.5 |
விரதத்தை மேற்கொண்ட சான்றோர்களுக்குத் திருநீறு சிறந்த அணியாகும். நான்மறை ஆறங்கம் ஓதுதல் அந்தணர்களுக்குச் சிறந்த அணியாகும். பிறைக்குச் சிவபெருமானுடைய அழகிய சடை சிறந்த அணியாகும். எம்மைப் போன்ற அடியார்களுக்குச் சிறந்த அணி திருவைந்தெழுத்தேயாகும்.
109 | சலமிலன் சங்கரன் சார்ந்த வர்க்கலால் நலமில னாடொறு நல்கு வானலன் குலமில ராகிலுங் குலத்துக் கேற்பதோர் நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே. |
4.011.6 |
மனக்கோட்டம் இல்லாது எல்லார்க்கும் நன்மையைச் செய்யும் சிவபெருமான், தன்னையே பற்றுக்கோடாகச் சார்ந்த அடியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு உயர்நலன் செய்யான். அவர்களுக்கு நாடோறும் விரும்பியதனை நல்காது வினைப்பயன்படி நுகருமாறு விடுப்பான். உயர்ந்த குடும்பத்தில் அடியவர்கள் பிறந்தவர் அல்லராயினும் நற்குலத்துக்குரிய நன்மைகளை மிகவும் கொடுப்பது எம்பெருமானுடைய திருவைந்தெழுத்தேயாகும்.
110 | வீடினா ருலகினில் விழுமிய தொண்டர்கள் கூடினா ரந்நெறி கூடச் சென்றலும் ஓடினே னோடிச்சென் றுருவங் காண்டலும் நாடினே னாடிற்று நமச்சி வாயவே. |
4.011.7 |
மேம்பட்ட தொண்டர்கள் உலகப்பற்றுக்களை நீக்கிவிட்டனர். அவர்கள் மேம்பட்ட வீட்டு நெறியையே அடைந்தனர். அடியவர்கள் கூட அடியேனும் ஓடிச் சென்று எம்பெருமான் திருவுருவத்தை அகக்கண்ணால் கண்டேன். அங்ஙனம் கண்டவுடன் திருவைந்தெழுத்தை நாடினேன். நாடிய என்னை அத்திருவைந் தெழுத்தும் நாடியது.
111 | இல்லக விளக்கது விருள்கெ டுப்பது சொல்லக விளக்கது சோதி யுள்ளது பல்லக விளக்கது பலருங் காண்பது நல்லக விளக்கது நமச்சி வாயவே. |
4.011.8 |
வீட்டில் உள்ள விளக்கு ஆங்குள்ள இருளைப் போக்குவதாம். சொல்லின் அகத்து நின்று விளக்குவதாய், ஒளியுடையதாய், பல இடங்களையும் விளக்குவதாய்ப் பல சமயத்தாரும் தம்மை அறியாமலே காண நிற்பதாய் ஞானம் நிறைந்த உள்ளத்திற்கு விளக்குப்போல ஒளியை நல்குவது திருவைந்தெழுத்து மந்திரமே.
112 | முன்னெறி யாகிய முதல்வன் முக்கணன் தன்னெறி யேசர ணாத றிண்ணமே அந்நெறி யேசென்றங் கடைந்த வர்க்கெலாம் நன்னெறி யாவது நமச்சி வாயவே. |
4.011.9 |
முந்துறமுன்னம் வீடுபேற்றிற்கு வழிகாட்டிய முதல்வன் முக்கட்பிரானாவான். அவன் அருளிய வழியே உறுதியாகப் பற்றுக் கோடாவது. அந்த வழியிலே சென்று அப்பெருமானுடைய திருவடிகளை அடைபவருக்கு எல்லாம், சிறந்த வழியாக உதவுவது திருவைந்தெழுத்து மந்திரமே.
113 | மாப்பிணை தழுவிய மாதொர் பாகத்தன் பூப்பிணை திருந்தடி பொருந்தக் கைதொழ நாப்பிணை தழுவிய நமச்சி வாயப்பத் தேத்தவல் லார்தமக் கிடுக்க ணில்லையே. |
4.011.10 |
மான்குட்டியைக் கையிலேந்திய, பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டா.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 113 | 114 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நமச்சிவாயப்பதிகம் - நான்காம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - நமச்சி, சிறந்த, திருவைந்தெழுத்தேயாகும், விளக்கது, கருங்கல, பொருந்தக், ஆபரணம், தழுவிய, விலைமதிப்பற்ற, அணியாகும், எம்பெருமானுடைய, மேம்பட்ட, சென்று, திருவைந்தெழுத்து, மந்திரமே, அடியவர்கள், முதல்வன், திருவடிகளை, எல்லாம், திருந்தடி, திருச்சிற்றம்பலம், திருமுறை, உள்ளம், சிவபெருமான், சார்ந்த, நின்று, நமச்சிவாயப்பதிகம், கொடுப்பது