முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.009.திருமழபாடி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.009.திருமழபாடி
2.009.திருமழபாடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - வச்சிரத்தம்பேசுவரர்.
தேவியார் - அழகாம்பிகையம்மை.
1558 | களையும்
வல்வினை யஞ்சனெஞ் சேகரு தார்புரம் உளையும் பூசல்செய் தானுயர் மால்வரை நல்விலா வளைய வெஞ்சரம் வாங்கியெய் தான்மதுத் தும்பிவண் டளையுங் கொன்றையந் தார்மழ பாடியு ளண்ணலே. |
2.009. 1 |
உயர்ந்ததும் பெரியதுமான மேருமலையை நல்ல உயர்ந்த வில்லாக வளைத்து அசுரர்களின் திரிபுரங்களை அவ்வசுரர் வருந்துமாறு போர்செய்தவனாய், வண்டினங்கள் தேனை உண்ணத் துழாவுகின்ற கொன்றை மலர்மாலை அணிந்த மழபாடியுள் விளங்கும் அண்ணல், நம் வல்வினைகளைக் களைவான். நெஞ்சே! அஞ்ச வேண்டா.
1559 | காச்சி
லாதபொன் னோக்குங் கனவயி ரத்திரள் ஆச்சி லாதப ளிங்கின னஞ்சுமு னாடினான் பேச்சி னாலுமக் காவதென் பேதைகாள் பேணுமின் வாச்ச மாளிகை சூழ்மழ பாடியை வாழ்த்துமே. |
2.009.2 |
அறிவற்றவர்களே! அவப்பேச்சால் உமக்கு விளையும் பயன் யாது? காய்ச்சப் பெறாமலே இயற்கையாக ஒளி விடும் பொன் போன்றவளாகிய, உமையம்மையால் நோக்கப்பெறும் வயிரம் போன்ற திரண்ட பெரிய தோள்களை உடையவனும், தன் பாற்பட்டதை நுணுக்காது அப்படியே காட்டும் பளிங்கு போன்ற ஒளியினனும், முற்காலத்தே நஞ்சை உண்டவனும் ஆகிய பெருமானைப் பேணுங்கள். இலக்கணம் அமைந்த மாளிகைகளால் சூழப்பட்ட மழபாடியை வாழ்த்துங்கள்.
1560 | உரங்கெ
டுப்பவ னும்பர்க ளாயவர் தங்களைப் பரங்கெ டுப்பவ னஞ்சையுண் டுபக லோன்றனை முரண்கெ டுப்பவன் முப்புரந் தீயெழச் செற்றுமுன் வரங்கொ டுப்பவன் மாமழ பாடியுள் வள்ளலே. |
2.009.3 |
சிறந்த மழபாடியுள் எழுந்தருளிய வள்ளலாகிய பெருமான் தக்கன் வேள்வியில் அவியுண்ணச் சென்ற தேவர்களின் வலிமையை அழித்ததோடு அவர்களது தெய்வத்தன்மையையும் போக்கியவன். கடலிடை எழுந்த நஞ்சினை உண்டவன். மாறுபட்ட கதிரவனின் பற்களைத் தகர்த்து, பின் அருள் புரிந்தவன். முப்புரங்களையும் தீயெழச்செய்து அழித்தவன்.
1561 | பள்ள
மார்சடை யிற்புடை யேயடை யப்புனல் வெள்ள மாதரித் தான்விடை யேறிய வேதியன் வள்ளன் மாமழ பாடியுண் மேய மருந்தினை உள்ள மாதரி மின்வினை யாயின வோயவே. |
2.009.4 |
நடுவே பள்ளம் அமைந்த சடைமுடியில் வந்துதங்குமாறு கங்கை வெள்ளத்தைத் தரித்தவனும், விடை ஏறிவரும் வேதியனும் வள்ளலும் ஆகிய சிறந்த மழபாடியில் விளங்கும் அரிய மருந்து போல்வானை, வினைகள் நீங்குமாறு உள்ளத்தால் நினைந்து அன்பு செய்யுங்கள்.
1562 | தேனு
லாமலர் கொண்டுமெய்த் தேவர்கள் சித்தர்கள் பானெ யஞ்சுட னாட்டமுன் னாடிய பால்வணன் வான நாடர்கள் கைதொழு மாமழ பாடியெங் கோனை நாடொறுங் கும்பிட வேகுறி கூடுமே. |
2.009.5 |
மெய்த்தேவர்களும் சித்தர்களும் தேன் பொருந்திய மலர்களைக் கொண்டு அர்ச்சித்துப் பால், நெய், முதலிய ஆனைந்து ஆட்ட, அவற்றுள் மூழ்கித்திளைக்கும் பால் வண்ணனும், வானவர்கள் கைகளால் தொழுது வணங்கும் மழபாடியில் விளங்கும் எம்தலைவனும் ஆகிய சிவபிரானை நாள்தோறும் வணங்கிவரின், அவன் நம் மோடு கூடுவான்.
1563 | தெரிந்த
வன்புர மூன்றுடன் மாட்டிய சேவகன் பரிந்து கைதொழு வாரவர் தம்மனம் பாவினான் வரிந்த வெஞ்சிலை யொன்றுடை யான்மழ பாடியைப் புரிந்து கைதொழு மின்வினை யாயின போகுமே. |
2.009.6 |
எல்லாம் அறிந்தவனும், வலிய முப்புரங்களையும் அழித்த வீரனும், அன்போடு தன்னை வழிபடுபவரின் மனத்தில்பரவி விளங்குபவனும், வரிந்து கட்டப்பட்ட வலியவில்லை ஏந்தியவனும் ஆகிய மழபாடி இறைவனை விரும்பிக் கைதொழுபவர்களின் வினைகள் போகும்.
1564 | சந்த
வார்குழ லாளுமை தன்னொரு கூறுடை எந்தை யானிமை யாதமுக் கண்ணின னெம்பிரான் மைந்தன் வார்பொழில் சூழ்மழ பாடிம ருந்தினைச் சிந்தி யாவெழு வார்வினை யாயின தேயுமே. |
2.009.7 |
அழகிய நீண்ட கூந்தலை உடைய உமையம்மையைத் தன் திருமேனியில் ஒருகூறாக உடைய எந்தையும், இமையாத மூன்று கண்களை உடையவனும், எம் தலைவனும், பெருவீரனும் ஆகிய, நீண்ட பொழில் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் அரிய மருந்து போல்வானைச் சித்திப்பவர்களின் வினைகள் தேய்ந்துகெடும்.
1565 | இரக்க
மொன்று மிலானிறை யான்றிரு மாமலை உரக்கை யாலெடுத் தான்றன தொண்முடி பத்திற விரற்ற லைந்நிறு வியுமை யாளொடு மேயவன் வரத்தை யேகொடுக் கும்மழ பாடியுள் வள்ளலே. |
2.009.8 |
நெஞ்சில் இரக்கம் ஒருசிறிதும் இல்லாத இராவணன், திருக்கயிலை மலையை, தனது வலிய கைகளால் பெயர்க்க முற்பட்டபோது அவன் ஒளிபொருந்திய தலைகள் பத்தும் நெரியுமாறு கால்விரலின் நுனியை ஊன்றி, உமையவளோடு மகிழ்ந்து வீற்றிருக்கும் சிவபிரான், மழபாடியில் வரத்தைக் கொடுக்கும் வள்ளலாக வீற்றிருந்தருளுகின்றான்.
1566 |
ஆல முண்டமு தம்மம ரர்க்கரு ளண்ணலார் கால னாருயிர் வீட்டிய மாமணி கண்டனார் சால நல்லடி யார்தவத் தார்களுஞ் சார்விட மால யன்வணங் கும்மழ பாடியெம் மைந்தனே. |
2.009.9 |
நஞ்சினைத் தாம் உண்டு அமுதத்தை, தேவர்க்கு அளித்த தலைமையாளரும், காலன் உயிரை அழித்த நீலமணி போன்ற கண்டத்தினரும், திருமாலும் பிரமனும் வணங்கும் மழபாடியில் எழுந்தருளிய வீரரும் ஆகிய சிவபிரான் மிகுதியான அடியவர்களும் தவத்தவர்களும் தம்மைச் சாரும் புகலிடமாய் விளங்குபவர்.
1567 | கலியின்
வல்லம ணுங்கருஞ் சாக்கியப் பேய்களும் நலியு நாள்கெடுத் தாண்டவென் னாதனார் வாழ்பதி பலியும் பாட்டொடு பண்முழ வும்பல வோசையும் மலியு மாமழ பாடியை வாழ்த்தி வணங்குமே. |
2.009.10 |
துன்பம் தரும் வலிய சமணர்களும், கரிய சாக்கியப் பேய்களும் உலகை நலிவு செய்யும் நாளில் அதனைத் தடுத்துச் சைவத்தை மீண்டும் நிலைபெறச் செய்யுமாறு என்னை ஆண்டருளிய என் நாதனார் வாழும் பதி, உணவிடுதலும், பாட்டும், தாளத்தொடு, கூடிய முழவொலியும் பிற மங்கல ஓசைகளும். நிறைந்து சிறந்த மழபாடி அதனை வாழ்த்திவணங்குவோம்.
1568 | மலியு மாளிகை
சூழ்மழ பாடியுள் வள்ளலைக் கலிசெய் மாமதில் சூழ்கடற் காழிக் கவுணியன் * * * * * * * |
2.009. 11 |
(இப்பாடலின் பின் இரண்டு அடிகள் கிடைத்தில) மாளிகைகள் பலவும் சூழ்ந்த மழபாடியுள் விளங்கும் வள்ளலை, வலியவாகச் செய்யப் பெற்ற மதில்கள் சூழ்ந்த, கடற்கரையை அடுத்துள்ள காழிப்பதியுள் கவுணியர் கோத்திரத்தில் தோன்றிய ஞானசம்பந்தன்.........
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமழபாடி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - விளங்கும், மழபாடியில், மழபாடியுள், பாடியுள், சிறந்த, வினைகள், கைதொழு, சூழ்ந்த, சூழ்மழ, சாக்கியப், பேய்களும், மருந்து, சிவபிரான், கைகளால், அழித்த, வணங்கும், கும்மழ, மழபாடி, எழுந்தருளிய, பாடியை, உடையவனும், மாளிகை, திருச்சிற்றம்பலம், திருமுறை, அமைந்த, டுப்பவ, முப்புரங்களையும், திருமழபாடி, வள்ளலே, டுப்பவன், மின்வினை