முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.004.திருவான்மியூர்
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.004.திருவான்மியூர்
2.004.திருவான்மியூர்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் தொண்டைநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - மருந்தீசுவரர்.
தேவியார் - சுந்தரமாது (அ) சொக்கநாயகி.
1502 | கரையு
லாங்கட லிற்பொலி சங்கம்வெள் ளிப்பிவன் றிரையு லாங்கழி மீனுக ளுந்திரு வான்மியூர் உரையு லாம்பொரு ளாயுல காளுடை யீர்சொலீர் வரையு லாமட மாதுட னாகிய மாண்பதே. |
2.004.1 |
கடலின்கண் விளங்கும் சங்குகளும் வெண்ணிறமான இப்பிகளும் கரையில் வந்துலாவுமாறு அலைகள் வீசுவதும், அவ்வலைகளை உடைய கழிகளில் மீன்கள் பிறழ்வதுமான திருவான்மியூரில், எல்லோராலும் புகழப்படும் பொருளாய் உலகனைத்தையும் ஆட்சி புரிபவராய் விளங்கும் இறைவரே! மலைமாது எனப்படும் உமையம்மையை ஓருடம்பில் உடனாகக்கொண்டுள்ள மாண்பிற்குக் காரணம் யாதோ? சொல்வீராக.
1503 | சந்து
யர்ந்தெழு காரகில் தண்புனல்கொண்டுதம் சிந்தை செய்தடி யார்பர வுந்திரு வான்மியூர்ச் சுந்த ரக்கழன் மேற்சிலம் பார்க்கவல் லீர்சொலீர் அந்தி யின்னொளி யின்னிற மாக்கிய வண்ணமே. |
2.004.2 |
அடியவர்கள் சந்தனம், உயர்ந்து வளர்ந்த கரிய அகில், குளிர்ந்த நீர் ஆகியவற்றைக் கொண்டு வந்து ஆட்டித் தமது சிந்தையால் நினைந்து பரவும் திருவான்மியூரில் வலக்காலில் விளங்கும் அழகிய கழல், இடக்காலில் விளங்கும் சிலம்பு ஆகியன ஆரவாரிக்கும் திருவடிகளை உடையவரே! மாலையந்தியின் ஒளி போன்ற செவ்வண்ணத்தை உம் நிறமாகக் கொண்ட காரணம் யாதோ? சொல்வீராக.
1504 | கான
யங்கிய தண்கழி சூழ்கட லின்புறம் தேன யங்கிய பைம்பொழில் சூழ்திரு வான்மியூர்த் தோன யங்கம ராடையி னீரடி கேள்சொலீர் ஆனையங் கவ்வுரி போர்த்தன லாட வுகந்ததே. |
2.004. 3 |
காடு, பள்ளமான கழி ஆகியன சூழ்ந்த கடலின் புறத்தே தேன் சொரியும் பசுமையான பொழில்கள் சூழ்ந்து விளங்கும் திருவான்மியூரில், புலித்தோலை ஆடையாகக் கொண்டு எழுந்தருளிய அடிகளே, நீர், யானையின் தோலை உரித்துப் போர்த்தி அனலாடலை விரும்பியது ஏனோ? சொல்வீராக.
1505 | மஞ்சு
லாவிய மாடம திற்பொலி மாளிகைச் செஞ்சொ லாளர்கள் தாம்பயி லுந்திரு வான்மியூர்த் துஞ்சு வஞ்சிரு ளாட லுகக்கவல் லீர்சொலீர் வஞ்ச நஞ்சுண்டு வானவர்க் கின்னருள் வைத்ததே. |
2.004. 4 |
மேகங்கள் உலாவும் மாடங்களையும் மதில்களையும் அழகிய மாளிகைகளையும் உடையதால், இனிய சொற்களைப் பேசுவோர் வாழ்வதாய் விளங்கும் திருவான்மியூரில், எல்லோரும் உறங்கும் கரிய இருட்போதில் ஆடலை விரும்பி மேற்கொள்ளும் வன்மையை உடையவராய் இலங்கும் இறைவரே!, கரிய விடத்தை நீர் உண்டு தேவர்களுக்கு இனிய அருள் வழங்கியது ஏனோ? சொல்வீர்.
1506 | மண்ணி
னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில் திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த் துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர் விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே. |
2.004. 5 |
உலகோரால் புகழப்பெறும் குணநலங்களை உடைய மகளிரையும், உறுதியான வேலைப்பாடுகள் பொருந்திய மதில்களையும் உடைய திருவான்மியூரில் எல்லோரும் வியப்படையும் வண்ணம் பலியேற்கும் தொழிலை மேற்கொண்டு உறைபவரே, நீர் வானத்தில் விளங்கும் வெண்பிறையை உம் செஞ்சடை மேல் வைத்துள்ள வியப்புடைச் செயலை ஏன் செய்தீர்? சொல்வீராக.
1507 | போது லாவிய
தண்பொழில் சூழ்புரி சைப்புறம் தீதி லந்தண ரோத்தொழி யாத்திரு வான்மியூர்ச் சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர் மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே. |
2.004. 6 |
மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததும், மதில்களைப் புறத்தே உடையதும், குற்றமற்ற அந்தணர்கள் வேதம் ஓதுதலை இடையறாது உடையதுமாகிய திருவான்மியூரில் சூதாடு கருவி போன்ற வடிவுடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு எழுந்தருளியிருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து அழித்த உமது வீரச் செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீர்.
1508 | வண்டி
ரைத்த தடம்பொழி லின்னிழற் கானல்வாய்த தெண்டி ரைக்கட லோதமல் குந்திரு வான்மியூர்த் தொண்டி ரைத்தெழுந் தேத்திய தொல்கழ லீர்சொலீர் பண்டி ருக்கொரு நால்வர்க்கு நீருரை செய்ததே. |
2.004. 7 |
வண்டுகள் ஒலிக்கும் பெரிய சோலைகளின் நிழலிலும் கானலிலும் தௌந்த அலைகளை உடைய திருவான்மியூரில் அடியவர்கள் சிவநாமங்களைச் சொல்லித் துதிக்கும், பழமையான கழல்களை அணிந்துள்ள இறைவரே! முற்காலத்தே நீர் சிவஞானத்தைச் சனகாதியர் நால்வர்க்கு மட்டும் உபதேசித்தது ஏனோ? கூறுவீர்.
1509 | தக்கில்
வந்த தசக்கிரி வன்றலை பத்திறத் திக்கில் வந்தல றவ்வடர்த் தீர்திரு வான்மியூர்த் தொக்க மாதொடும் வீற்றிருந் தீரரு ளென்சொலீர் பக்க மேபல பாரிடம் பேய்கள் பயின்றதே. |
2.004.8 |
தகுதியற்ற நெறியில் வந்த இராவணன் கயிலை மலையைப் பெயர்க்க முற்பட்டுத் தன் தலைகள் பத்தும் பல திசைகளிலும் வெளிப்பட்டு அவன் அலறுமாறு அவனை அடர்த்தவரே! திருவான்மியூரில் தன் திருமேனியோடு இணைந்த உமையம்மையாரோடும் வீற்றிருந்தருளியவரே!! பல பூதகணங்களும், பேய்க்கணங்களும் உம்மைச் சூழ்ந்து பயிலக் காரணம் யாதோ? சொல்வீராக.
1510 | பொருது
வார்கட லெண்டிசை யுந்தரு வாரியால் திரித ரும்புகழ் செல்வமல் குந்திரு வான்மியூர்ச் சுருதி யாரிரு வர்க்கு மறிவரி யீர்சொலீர் எருது மேல்கொ டுழன்றுகந் தில்பலி யேற்றதே. |
2.004. 9 |
பெரிய கடல் அலைகள் எட்டுத் திசைகளிலிருந்தும் கொண்டு வந்து தரும் முத்து பவளம் முதலிய வளங்களால் பரவிய புகழ், செல்வம் ஆகியன நிறைந்த திருவான்மியூரில் வேதங்களை ஓதி மகிழும் திருமால், பிரமன் ஆகிய இருவர்க்கும் அறிதற் கரியவராய் விளங்கும் இறைவரே! எருதின்மேல் ஏறி உழன்று பல இடங்கட்கும் மகிழ்வோடு சென்று பலியேற்றற்குரிய காரணத்தைக் கூறுவீராக.
1511 | மைத ழைத்தெழு
சோலையின் மாலைசேர் வண்டினம் செய்த வத்தொழி லாரிசை சேர்திரு வான்மியூர் மெய்த வப்பொடி பூசிய மேனியி னீர்சொலீர் கைத வச்சமண் சாக்கியர் கட்டுரைக் கின்றதே. |
2.004.10 |
கருநிறம் மிக்குத்தோன்றும் சோலையின்கண் மாலைக்காலத்தில் வண்டுகள் குழுமித் தவஞ்செய்யும் தொழிலையுடைய அந்தணர் ஓதும் வேதாகமம் போல் இசைபாடிச் சேர்கின்ற திருவான்மியூரில், மேனிமீது மிகுதியாக வெண்பொடியணிந்த திருமேனியை உடையவரே! வஞ்சனையை உடைய சமணர் சாக்கியர் உம்மீது பொய்யுரை கூறிப் பழித்துரைக்கக் காரணம் யாதோ? கூறீர்.
1512 | மாதொர்
கூறுடை நற்றவ னைத்திரு வான்மியூர் ஆதி யெம்பெரு மானருள் செய்ய வினாவுரை ஓதி யன்றெழு காழியுண் ஞானசம் பந்தன்சொல் நீதி யானினை வார்நெடு வானுல காள்வரே. |
2.004.11 |
உமையம்மையை ஒரு கூறாக உடைய நல்ல தவத்தின் வடிவாய் திருவான்மியூரில் உறையும் ஆதியாகிய எம்பெருமான் அருள் செய்தற்பொருட்டு வினாவிய இதனை ஓதி, ஊழி முடிவாகிய அக்காலத்தே மிதந்து எழுந்த காழிப்பதியுள் தோன்றிய ஞானசம்பந்தன்தன் சொல்லால் எழுந்த இப்பதிகத்தை முறையோடு நினைபவர் நீண்ட வானுலகை ஆள்வர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருவான்மியூர் - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - திருவான்மியூரில், விளங்கும், காரணம், சொல்வீராக, வான்மியூர்த், இறைவரே, லீர்சொலீர், கொண்டு, வான்மியூர், யீர்சொலீர், வான்மியூர்ச், உமையம்மையை, நிறைந்த, செஞ்சடை, எல்லோரும், பழமையான, சொல்வீர், வண்டுகள், எழுந்த, சாக்கியர், மதில்களையும், நால்வர்க்கு, குந்திரு, புறத்தே, திருவான்மியூர், குளிர்ந்த, அடியவர்கள், திருச்சிற்றம்பலம், உடையவரே, யங்கிய, பொழில்கள், அலைகள், திருமுறை, சூழ்ந்து