முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.011.சீகாழி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.011.சீகாழி

2.011.சீகாழி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - பிரமபுரீசர்.
தேவியார் - திருநிலைநாயகி.
1580 | நல்லானை
நான்மறை யோடிய லாறங்கம் வல்லானை வல்லவர் பான்மலிந் தோங்கிய சொல்லானைத் தொன்மதிற் காழியே கோயிலாம் இல்லானை யேத்தநின் றார்க்குள தின்பமே. |
2.011.1 |
நன்மையே வடிவானவன். நான்கு மறைகள், அவற்றோடுஇயலும் ஆறு அங்கங்கள் ஆகியனவற்றில் வல்லவன். அவற்றைக் கற்றுணர்ந்த அந்தணர்பால் நிறைந்து அவர்கள் ஓதும் துதிகளைத் தன் வடிவாகக் கொண்டவன். பழமையான மதில்கள் சூழ்ந்த காழிப்பதியில் விளங்கும் கோயிலைத் தனது வீடாகக் கொண்டவன். அத்தகை யோனை ஏத்துவோர்க்கு இன்பம் உண்டாம்.
1581 | நம்மான
மாற்றிந மக்கரு ளாய்நின்ற பெம்மானைப் பேயுட னாடல்பு ரிந்தானை அம்மானை யந்தணர் சேரும ணிகாழி எம்மானை யேத்தவல் லார்க்கிட ரில்லையே. |
2.011.2 |
நம் குற்றங்களைத் தீர்த்து நமக்குக் கருணை காட்டும் தலைவன். பேய்களோடு ஆடல் புரிபவன். அரிய வீரன். அந்தணர்கள் வாழும் அழகிய காழிப்பதியில் விளங்கும் எம் கடவுள். அத்தகையோனைஏத்துவார்க்கு இடர் இல்லை.
1582 | அருந்தானை
யன்புசெய் தேத்தகில் லார்பாற் பொருந்தானைப் பொய்யடி மைத்தொழில் செய்வாருள் விருந்தானை வேதிய ரோதி மிடைகாழி இருந்தானை யேத்துமி னும்வினை யேகவே. |
2.011.3 |
தன்னிடம் அன்பு செய்து ஏத்தாதார் அளிக்கும் படையலை உண்ணாதவன். பொய்யாக அடிமை செய்வாரிடம் பொருந்தாதவன். புதுமைக்கும் புதியவன். நான்குவேதங்களை ஓதும் வேதியர் நிறைந்த காழிப் பதியில் இருப்பவன். அத்தகையோனை நும் இடர்போக ஏத்துவீராக.
1583 | புற்றானைப்
புற்றர வம்மரை யின்மிசைச் சுற்றானைத் தொண்டுசெய் வாரவர் தம்மொடும் அற்றானை யந்தணர் காழிய மர்கோயில் பற்றானைப் பற்றிநின் றார்க்கில்லை பாவமே. |
2.011. 4 |
புற்று வடிவானவன். புற்றில் வாழும் பாம்பினைத் தன் அரைமீது சுற்றியவன். தனக்குத் தொண்டு செய்பவர்களோடு தன் பெருமைகளை விடுத்துப் பழகி யருள்பவன். அந்தணர்கள் நிறைந்த காழிப்பதி மீது பற்றுடையவன். அவனைப் பற்றி நிற்பவர்கட்குப் பாவம் இல்லை.
1584 | நெதியானை
நெஞ்சிடங் கொள்ளநி னைவார்தம் விதியானை விண்ணவர் தாம்வியந் தேத்திய கதியானைக் காருல வும்பொழிற் காழியாம் பதியானைப் பாடுமி னும்வினை பாறவே. |
2.011. 5 |
நமக்கு நிதியாக விளங்குவோன். தம் நெஞ்சில் அவன் எழுந்தருளுமாறு நினைப்பவர்க்கு நன்னெறி காட்டுபவன். மேகங்கள் உலாவும் பொழில் சூழ்ந்த சீகாழியைத்தன் ஊராகக் கொண்டவன். அத்தகையோனை நும் வினை நீங்கப் பாடுவீராக.
1585 | செப்பான
மென்முலை யாளைத்தி கழ்மேனி வைப்பானை வார்கழ லேத்திநி னைவார்தம் ஒப்பானை யோதமு லாவுக டற்காழி மெய்ப்பானை மேவிய மாந்தர்வி யந்தாரே. |
2.011. 6 |
செப்புப் போன்ற மென்மையான தனங்களைக் கொண்ட உமையம்மை திருமேனியின் இடப்பாகமாக வைத்துள்ளவன். தன் திருவடிகளை நினைபவர்களிடம் ஒப்பப் பழகுபவன். கடல் நீர் உலாவுவதும், கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியில் மெய்ப்பொருளாக விளங்குபவன். அத்தகையோனை விரும்பி வழிபட்ட மக்கள் பிறரால் வியந்துபோற்றப்படும் புகழ் உடையோர் ஆவர்.
1586 | துன்பானைத்
துன்பம ழித்தரு ளாக்கிய இன்பானை யேழிசை யின்னிலை பேணுவார் அன்பானை யணிபொழிற் காழிந கர்மேய நம்பானை நண்ணவல் லார்வினை நாசமே. |
2.011. 7 |
நம்மைத் திருத்துமாறு துன்பங்களைத் தருபவன். நாம் துயர் உறும் போது, அத்துன்பங்களைத் தீர்த்து அருளைப்புரியும் இன்ப வடிவாய் இருப்பவன். ஏழிசையின் கூறுகளை அறிந்து பாடிப் போற்றுவாரிடம் அன்பு செய்பவன். அழகிய பொழில் சூழ்ந்த காழி நகரில் நம்மால் விரும்பப்படுபவனாய் எழுந்தருளி யிருப்பவன். அத்தகையோனை அடைந்து போற்ற வல்லாரின் வினைகள் அழியும்.
1587 | குன்றானைக்
குன்றெடுத் தான்புய நாலைந்தும் வென்றானை மென்மல ரானொடு மால்தேட நின்றானை நேரிழை யாளொடுங் காழியுள் நன்றானை நம்பெரு மானைந ணுகுமே. |
2.011. 8 |
மலைகளைத் தன் இருப்பிடமாகக் கொண்டவன். தான் எழுந்தருளிய கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் இருபது தோள்களையும் வென்றவன். மெல்லிய தாமரை மலரில் வாழும் நான்முகனும் மாலும் தேட ஓங்கி நின்றவன். உமையம்மையோடு காழிப்பதியுள் நன்மைகளைச் செய்பவனாய் வீற்றிருப்பவன். அத்தகைய நம் பெருமானை அடைந்து வழிபடுவீர்களாக.
1588 | சாவாயும்
வாதுசெய் சாவகர் சாக்கியர் மேவாத சொல்லவை கேட்டுவெகு ளேன்மின் பூவாய கொன்றையி னானைப் புனற்காழிக் கோவாய கொள்கையி னானடி கூறுமே. |
2.011. 9 |
தம் கொள்கைக்கு அழிவு வந்தபோதும் விடாதுவாது செய்யும் சமணர் சாக்கியர்களின் பொருந்தாத உரைகளைக் கேட்டு அவர்களையோ சைவத்தையோ, வெகுளாது கொன்றைப்பூ வணிந்தவனும், புனல் சூழ்ந்த காழி நகரின் தலைவனாய் மேலான சிவநெறிக்கு உரியவனும் ஆகிய சிவபெருமான் திருவடிகளைப் புகழ்ந்து போற்றுவீர்களாக.
1589 | கழியார்சீ
ரோதமல் குங்கடற் காழியுள் ஒழியாது கோயில்கொண் டானையு கந்துள்கித் தழியார்சொன் ஞானசம் பந்தன்ற மிழார மொழிவார்கண் மூவுல கும்பெறு வார்களே. |
2.011. 11 |
கழிகளின் வழியே வரும் மிக்க கடல்நீர் நிறைந்ததும் கடற்கரையை அடுத்துள்ளதுமான காழிப்பதியுள்கோயில் கொண்டு நீங்காது உறையும் இறைவனை, நினைந்து மகிழ்ந்து அவனைப் பொருந்தியவனாய், ஞானசம்பந்தன் பாடிய தமிழை மனம் பொருந்த மொழிந்து போற்றுபவர்கள் மூவுலகையும் பெறுவார்கள்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 9 | 10 | 11 | 12 | 13 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
சீகாழி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - சூழ்ந்த, அத்தகையோனை, கொண்டவன், காழிப்பதியில், வாழும், னைவார்தம், அவனைப், திருமுறை, பொழில், கடற்கரையை, காழியுள், அடைந்து, அடுத்துள்ளதுமான, இருப்பவன், நிறைந்த, யந்தணர், விளங்கும், திருச்சிற்றம்பலம், தீர்த்து, அந்தணர்கள், னும்வினை, சீகாழி, வடிவானவன்