முதன்மை பக்கம் » இலக்கியங்கள் » சைவ இலக்கியங்கள் » பன்னிரு திருமுறை » இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் » 2.010.திருமங்கலக்குடி
இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - 2.010.திருமங்கலக்குடி

2.010.திருமங்கலக்குடி
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
பண் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
இத்தலம் சோழநாட்டிலுள்ளது.
சுவாமிபெயர் - புராணவரதேசுவரர்.
தேவியார் - மங்களநாயகியம்மை.
1569 | சீரி
னார்மணி யும்மகில் சந்துஞ் செறிவரை வாரி நீர்வரு பொன்னி வடமங் கலக்குடி நீரின் மாமுனி வன்னெடுங் கைகொடு நீர்தனைப் பூரித் தாட்டியர்ச் சிக்க விருந்த புராணனே, |
2.010.1 |
மலையிலிருந்து புகழ்மிக்க மணிகள், அகில், சந்தனம் ஆகியனவற்றை வாரிக்கொண்டு வரும் நீரை உடைய பொன்னி நதியின் வடபால் விளங்கும் திருமங்கலக்குடியில், அக்காவிரி நீரினைப் பெருமைமிக்க முனிவர் ஒருவர், தமது வலிமை மிக்க நீண்ட கையால் கோயிலில் இருந்தவாறே நீட்டி எடுத்து நிறைத்து இறைவனுக்கு அபிடேகம் புரிந்து அர்ச்சிக்க பழையவனாகிய பெருமான் மகிழ்ந்து அதனை ஏற்று வீற்றிருந்தருள்கின்றான்.
1570 | பணங்கொ
ளாடர வல்குனல் லார்பயின் றேத்தவே மணங்கொண் மாமயி லாலும் பொழின்மங் கலக்குடி இணங்கி லாமறை யோரிமை யோர்தொழு தேத்திட அணங்கி னோடிருந் தானடி யேசர ணாகுமே. |
2.010.2 |
ஆடும் அரவினது படம் போன்ற அல்குலை உடைய மகளிர் பலகாலும் சொல்லி ஏத்த, மணம் பொருந்தியனவும் பெரிய மயில்கள் ஆடுவனவுமான பொழில்கள் சூழ்ந்த மங்கலக் குடியில் தம்முள் மாறுபடும் செய்திகளைக் கூறும் வேதங்களை வல்ல அந்தணர்களும் இமையவர்களும் வணங்கிப்போற்ற உமையம்மையாரோடு எழுந்தருளியிருக்கும் பெருமான் திருவடிகளே நமக்குப் புகலிடமாகும்.
1571 | கருங்கை
யானையி னீருரி போர்த்திடு கள்வனார் மருங்கெ லாமண மார்பொழில் சூழ்மங் கலக்குடி அரும்பு சேர்மலர்க் கொன்றையி னானடி யன்பொடு விரும்பி யேத்தவல் லார்வினை யாயின வீடுமே. |
2.010.3 |
கரிய துதிக்கையை உடைய யானையை உரித்த தோலைப் போர்த்த கள்வரும், அயலிடமெல்லாம் மணம் பரப்பும் பொழில்கள் சூழ்ந்த மங்கலக்குடியில் அரும்புகளோடு கூடிய கொன்றை மலர் மாலையை அணிந்தவரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அன்போடு விரும்பி ஏத்த வல்லவர் வினைகள் நீங்கும்.
1572 | பறையி
னோடொலி பாடலு மாடலும் பாரிடம் மறையி னோடியன் மல்கிடு வார்மங் கலக்குடிக் குறைவி லாநிறை வேகுண மில்குண மேயென்று முறையி னால்வணங் கும்மவர் முன்னெறி காண்பரே. |
2.010. 4 |
பறையொலியோடு பாடல் ஆடல்புரியும் பூதகணங்கள் சூழ, வேத ஒழுக்கத்தோடு நிறைந்து வாழும் அந்தணர் வாழும் திருமங்கலக்குடியில் விளங்கும் இறைவனை, குறைவிலா நிறைவே என்றும், பிறர்க்கு இல்லாத எண்குணங்களை உடையவனே என்றும் முறையோடு வணங்குவோர், முதன்மையான சிவநெறியை அறிவார்கள்.
1573 | ஆனி
லங்கிள ரைந்தும விர்முடி யாடியோர் மானி லங்கையி னான்மண மார்மங் கலக்குடிஊனில் வெண்டலைக் கையுடை யானுயர் பாதமே ஞான மாகநின் றேத்தவல் லார்வினை நாசமே. |
2.010. 5 |
பசுவிடம் விளங்கும் பால், தயிர் முதலான ஐந்து தூயபொருள்களிலும் மூழ்கி, மானை ஏந்திய அழகிய கையினராய், மணம் பொருந்திய மங்கலக்குடியில், தசைவற்றிய வெள்ளிய பிரமகபாலத்தைக் கையின்கண் உடையவராய் விளங்கும் பெருமானார் திருவடி அடைதலே ஞானத்தின் பயனாவது என்பதை அறிந்து அவற்றை ஏத்த வல்லவர் வினைகள் நாசமாகும்.
1574 | தேனு
மாயமு தாகிநின் றான்றெளி சிந்தையுள் வானு மாய்மதி சூடவல் லான்மங் கலக்குடி கோனை நாடொறு மேத்திக் குணங்கொடு கூறுவார் ஊன மானவை போயறு முய்யும் வகையதே. |
2.010.6 |
தேனும் அமுதமும் போல இனியவனும், தௌந்த சிந்தையில் ஞானவொளியாக நிற்பவனும், பிறைமதியை முடியிற் சூடவல்லவனும் ஆகிய திருமங்கலக்குடிக்கோனை நாள்தோறும் வணங்கி, அவன் குணங்களைப் புகழ்பவர்களின் குறைகள் நீங்கும். உய்யும் வழி அதுவே யாகும்.
1575 | வேள்ப
டுத்திடு கண்ணினன் மேருவில் லாகவே வாள ரக்கர் புரமெரித் தான்மங் கலக்குடி ஆளு மாதிப் பிரானடி கள்ளடைந் தேத்தவே கோளு நாளவை போயறுங் குற்றமில் லார்களே. |
2.010.7 |
மன்மதனை அழித்த நுதல் விழியினனும், மேரு மலையை வில்லாகக் கொண்டு வாட்படை உடைய அரக்கர்களின் முப்புரங்களை எரித்தவனும் ஆகிய, திருமங்கலக்குடியை ஆளும் முதற்பிரானாகிய சிவபிரான் திருவடிகளை அடைந்து, அவனை ஏத்துவார் நாள், கோள் ஆகியவற்றால் வரும் தீமைகள் அகல்வர். குற்றங்கள் இலராவர்.
1576 | பொலியு
மால்வரை புக்கெடுத் தான்புகழ்ந் தேத்திட வலியும் வாளொடு நாள்கொடுத் தான்மங் கலக்குடிப் புலியி னாடையி னானடி யேத்திடும் புண்ணியர் மலியும் வானுல கம்புக வல்லவர் காண்மினே. |
2.010. 8 |
விளங்கித் தோன்றும் பெரிய கயிலைமலையைப் பெயர்த்து எடுத்த இராவணனை முதலில் அடர்த்துப் பின் அவன் புகழ்ந்து ஏத்திய அளவில் அவனுக்கு வலிமை, வாள், நீண்ட ஆயுள் முதலியனவற்றைக் கொடுத்தருளியவனும், புலித்தோல் ஆடை உடுத்தவனும் ஆகிய மங்கலக்குடிப் பெருமானை வணங்கி, அவன் திருவடிகளை ஏத்தும் புண்ணியர் இன்பம் மிகப் பெறுவர். சிவலோகம் சேர வல்லவர் ஆவர். காண்மின்.
1577 | ஞால
முன்படைத் தானளிர் மாமலர் மேலயன் மாலுங் காணவொ ணாவெரி யான்மங் கலக்குடி ஏல வார்குழ லாளொரு பாக மிடங்கொடு கோல மாகிநின் றான்குணங் கூறுங் குணமதே. |
2.010.9 |
உலகைப் படைத்தவனாகிய குளிர்ந்த தாமரை மலர் மேல் உறையும் பிரமனும் திருமாலும் அறிதற்கரிய நிலையில் எரி உரு வானவனும், திருமங்கலக்குடியில் மண மயிர்ச்சாந்தணிந்த குழலினளாயஉமையம்மையை இடப்பாகமாகக் கொண்ட அழகிய வடிவினனுமாகியசிவபிரானின் குணத்தைக் கூறுங்கள். அதுவே உங்களைக் குணமுடையவராக்கும்.
1578 | மெய்யின்
மாசினர் மேனி விரிதுவ ராடையர் பொய்யை விட்டிடும் புண்ணியர் சேர்மங் கலக்குடிச் செய்ய மேனிச் செழும்புனற் கங்கை செறிசடை ஐயன் சேவடி யேத்தவல் லார்க்கழ காகுமே. |
2.010.10 |
அழுக்கேறிய மேனியராகிய சமணர்கள், மேனி மீது விரித்துப் போர்த்த துவராடையராகிய சாக்கியர் ஆகியோர்களின் பொய்யுரைகளை விட்டுச் சைவ சமய உண்மைகளை உணரும் புண்ணியர்கள் வாழும் திருமங்கலக்குடியில், சிவந்த திருமேனியனாய்ச் செழுமையான கங்கை நதி செறிந்த சடையினனாய் விளங்கும் தலைவன் சேவடிகளை ஏத்த வல்லார்க்கு, அழகிய பேரின்ப வாழ்வு அமையும்.
1579 | மந்த
மாம்பொழில் சூழ்மங் கலக்குடி மன்னிய எந்தை யையெழி லார்பொழிற் காழியர் காவலன் சிந்தை செய்தடி சேர்த்திடு ஞானசம் பந்தன்சொல் முந்தி யேத்தவல் லாரிமை யோர்முத லாவரே. |
2.010.11 |
தென்றற் காற்றைத்தரும் பொழில்கள் சூழ்ந்த திருமங்கலக்குடியில் நிலைபெற்றுள்ள எம் தந்தையாகிய சிவபிரானை அழகிய பொழில் சூழ்ந்த காழிப்பதியின் தலைவனாகிய ஞானசம்பந்தன், சிந்தித்து அவன் திருவடிகளைச் சேர்க்கவல்லதாகப் பாடிய இத்திருப்பதிக வாய்மொழியை அன்புருக ஏத்த வல்லவர், இமையோர் தலைவர் ஆவர்.
திருச்சிற்றம்பலம்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 8 | 9 | 10 | 11 | 12 | ... | 121 | 122 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
திருமங்கலக்குடி - இரண்டாம் திருமுறை - தேவாரப் பதிகங்கள் - Panniru Thirumurai - பன்னிரு திருமுறை - Shaiva Literature's - சைவ இலக்கியங்கள் - கலக்குடி, விளங்கும், திருமங்கலக்குடியில், வல்லவர், சூழ்ந்த, திருவடிகளை, பொழில்கள், வாழும், புண்ணியர், யேத்தவல், திருச்சிற்றம்பலம், நீங்கும், வினைகள், என்றும், வணங்கி, திருமுறை, தான்மங், பொன்னி, பெருமான், திருமங்கலக்குடி, விரும்பி, சூழ்மங், லார்வினை, போர்த்த, சிவபிரான், மங்கலக்குடியில், தேத்திட