மாஸ்டர் மெதுவடை
1
அவருடைய உண்மைப் பெயர் அப்பாஸாமி என்பது
அநேகம் பேருக்குத் தெரியாது. டிராமா நோட்டிஸுகளிலெல்லாம்,
"மாஸ்டர் மெதுவடை தோன்றுகிறார்,
உலகமெங்கும் புகழ்பெற்ற தென்னிந்திய ஹாஸ்ய நடிகர் ஜீரணமணி..."
என்றுதான் வெளியிட்டு வந்தார்கள். இப்போது
ஷுட் செய்யப்பட்டு வந்த தமிழ் டாக்கியின் பூர்வாங்க விளம்பரங்களிலும்
அதே பெயர் தான் காணப்பட்டது. ஒரு விளம்பரம் "மெதுவடை சுடப்படுகிறது!"
என்று மணிபிரவாள சிலேடையில் ஆரம்பமாயிற்று. இந்த சிலேடைக்கு வியாக்யானம்
தேவை என்று தோன்றுகிறது. சாதாரணமாய், இங்கிலீஷில் டாக்கி படம் பிடிப்பதைக்
குறிப்பிடும்போது, 'ஷுட் ஆகிறது', 'ஷாட் எடுக்கிறார்கள்' என்று குறிப்பிடுவது
உண்டு. 'ஷுட்' என்பதற்கு 'சுடு' என்றும் ஒரு அர்த்தம் இருக்கிறதல்லவா?
அந்தத் துப்பாக்கி சுடுகையை வடைசுடுவதற்கு உபயோகப்படுத்தி மேற்படி சிலேடையைப்
போட்டவர், அந்த டாக்கி கம்பெனியார் மாதம் 371/2 ரூபாய் சம்பளத்தில் அமர்த்தியிருந்த
கலியுகக் காளமேகக் கவிச் சக்கரவர்த்தி, பழனி பிரஸாதராவ். (அந்தப் பழைய
காளமேகன் திரேதாயுகத்தைச் சேர்ந்தவனென்பது அவர் எண்ணம்.)மாஸ்டர் மெதுவடை நெடுங்காலமாகத் தென்னிந்திய நாடக மேடைகளில் தமது விகட சக்ராதிபத்தியத்தை நிலைநிறுத்தி வந்தவர். பச்சை சிருங்காரப் பேச்சினால்தான் அவர் அவ்வளவு பிரசித்தியடைந்தது. மேடையில் வந்து நிற்பார்; இரண்டு தடவை கண்ணைச் சிமிட்டுவார். சபையில் கிளுகிளு வென்று சிரிப்பு அலை பரவும்.
"மாடி மேல் மாடி!" என்பார். பின்னால் வரப் போவதை அறிந்து சபையோர், 'கலீர்' என்று சிரிக்கத் தொடங்குவார்கள்.
"அதன் மேலே ஒரு லேடி!" என்பார். பிறகு, சபையோரின் குதூகலத்தை யாரால் கட்டிப் பிடிக்க முடியும்? "அவளும் நானும் ஜோடி!" என்றாரோ இல்லையோ, கொட்டகைச் சொந்தக்காரன் வயிற்றில் நெருப்புத்தான். கொட்டகை இடிந்து விழும் படியான சிரிப்பும் ஆரவாரமும் ஏற்படும்.
அவருடைய ஹாஸ்யத்தில் நான் ஒரு கோடிதான் காண்பித்திருக்கிறேன். இன்னும் வாடி, மோடி, கூடி என்று மேலே மேலே போய்க் கொண்டிருப்பார். அவருடன் தொடர்ந்து போவது என்னால் முடியாத காரியமாகையால், அவருக்கு "மெதுவடை" என்று பெயர்வந்த காரணத்தைப் பற்றி மட்டும் சொல்லி விடுகிறேன். ஒரு தடவை அவர் நாடக மேடையில், முழுசு முழுசாக இருபத்தெட்டு மெதுவடைகளை வாயசைக்காமல் விழுங்கினாராம்! அப்புறம் ஆறு மாத காலம் அவர் ஒவ்வொரு நாடகத்திலும் இருபத்தேழுவடைகள் தின்னவேண்டியிருந்ததாம். அந்தக் காட்சியை நடத்திக் காட்டினாலொழிய, ஜனங்கள் கலவரம் செய்யவும், டிக்கெட் பணத்தை வாபஸ் கேட்கவும் ஆரம்பித்து விட்டார்களாம். இதிலிருந்து அவருக்கு "மாஸ்டர் மெதுவடை" என்ற பெயர் ஏற்பட்டு நிலைத்து விட்டது.
இப்பேர்ப்பட்ட ஹாஸ்ய நடிக சக்கரவர்த்தி இந்தியாவின் சார்லி சாப்ளின் - தமிழ் நாட்டு ஹாரல்ட்லாயிட் தமிழ் டாக்கி முதலாளிகளின் வலையில் விழாமல் வெகு காலம் தப்ப முடியுமா? ஒரு நாள் தலை குப்புற விழுந்தார்; விழுந்ததோடில்லாமல் கழுத்தையும் முறித்துக் கொள்ளும்படியான நிலைமை ஏற்பட்டது.
1 | 2 | 3 | 4 | 5 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
மாஸ்டர் மெதுவடை - Master Medhuvadai - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - மெதுவடை, அவர், மேலே, டாக்கி, ஷுட், மாஸ்டர், பெயர், தமிழ்