கள்வனின் காதலி - 9.வெயிலும் மழையும்
சென்ற அத்தியாயங்களில் கூறிய சம்பவங்கள் நடந்து இரண்டு வருஷங்கள் ஆகிவிட்டன.
அபிராமி இப்போது இன்னும் ஒரு நாலு விரற்கடை உயரமாகியிருக்கிறாள். அத்துடன், நெற்றியிலே ஒரு வடு - வண்டி குடை சாய்ந்த ஞாபகார்த்தமாக - இலேசாய்த் தெரிகின்றது. மற்றபடி அதே குழந்தை முகம் தான்; கண்களில் அதே குறுகுறுப்புத்தான்.
திருப்பரங்கோவில் கிராமத்து வீதி ஒன்றில், ஒரு பழைய ஓட்டு வீட்டின் கொல்லைப் புறத்துக் கிணற்றங்கரையில் அவளை இப்போது நாம் பார்க்கிறோம். கிணற்றைச் சுற்றி ஒரு வரிசை கமுகு மரங்களும் அவற்றுக்கப்பால் சில தென்னை மரங்களும் வளர்ந்து அந்த இடத்தைக் குளிர்ச்சியாகச் செய்து கொண்டிருக்கின்றன. சூரிய கிரணம் ஒவ்வொன்று அங்கங்கே எட்டிப் பார்க்கின்றது. சில நாரத்தை மரங்களும் இருக்கின்றன. செழித்து வளர்ந்த ஒரு பம்பளிமாஸ் மரத்தில் பெரிய பெரிய பம்பளிமாஸ் பழங்கள் தொங்குகின்றன. கிணற்றில் ஏற்றம் போட்டு இருக்கிறது. கிணற்றின் கைப்பிடிச் சுவரிலே அபிராமி உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய வாய் ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருப்பதையும், தலை அசைவதையும் பார்த்தால், ஏதோ பாட்டு 'கவனம்' செய்யும் முயற்சியில் இருக்கின்றாள் என்று ஊகிக்கலாம்.
கமுகு மரத்தில் எங்கேயோ ஒளிந்து கொண்டிருக்கும் குயில் ஒன்று விட்டுவிட்டுப் பாடுகிறது. இடையிடையே அபிராமி நிமிர்ந்து பார்க்கிறாள். குயில் இருக்கும் இடம் தெரியவில்லை.
'சட சட சட சட'வென்ற சப்தத்துடன் திடீரென்று பெருந் தூறல்கள் விழுகின்றன. "அடாடா! முற்றத்தில் அப்பளம் காய்கிறதே?" என்று கூவிக் கொண்டு, அபிராமி எழுந்து உள்ளே ஓடுகிறாள். முற்றத்தில் உலர்த்தியிருந்த அப்பளங்களை அவசர அவசரமாக எடுத்துக் கொண்டு போய்க் கூடத்தில் இருந்த கிராமபோன் பெட்டிக்கு அருகில் வைக்கிறாள். எல்லா அப்பளங்களையும் எடுத்து வைத்தாளோ இல்லையோ உடனே தூறல் நின்று பளீரென்று வெயில் காய்கிறது. அபிராமி தனக்குள் சிரித்துக் கொண்டு "அட நாசமாய்ப் போகிற வெயிலே!" என்று உரத்து வைகிறாள்.
அப்போது "அது யார் நாசமாய்ப் போகிற பயல்!" என்று சொல்லிக் கொண்டே முத்தையன் உள்ளே வந்தான். அபிராமி அவனைப் பார்த்து மறுபடியும் சிரித்துவிட்டு, "பயல் இல்லை, அண்ணா! வெயில் - வெயிலை வைதேன்!" என்று கூறினாள். அவனுடைய கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் கூடத்தில் கிராமபோனுக்குப் பக்கத்தில் கிடந்த பலகையில் உட்கார வைத்து, "அண்ணா இந்தப் பாட்டைக் கேளு!" என்று சொல்லிப் பாடத் தொடங்கினாள்.
அவள் பாடி முடித்ததும், முத்தையன், "அடாடா! நேற்றுத்தானே பிலஹரி பிளேட் வாங்கி வந்தேன். அதற்குள்ளே அந்த மெட்டை அவ்வளவு நன்றாய்ப் படம் பிடித்தது போல் பாடுகிறாயே? 'கவனம்' கூடத்தான் எவ்வளவு நன்றாயிருக்கிறது! நம்முடைய வீட்டுக் கொல்லை இவ்வளவு அழகாயிருப்பது எனக்கு இதுவரையில் தெரியாது. நான் சொல்கிறேன், கேள், அபிராமி! ஒரு நாளைக்கு நான் நாடகத்தில் சேர்ந்துவிடப் போகிறேன். அப்போது நீயே எனக்கு எல்லாப் பாட்டுக்களும் இட்டுக் கட்டித் தரலாம்..." என்றான்.
அபிராமி வெட்கத்துடன் முகத்தைக் கையினால் மறைத்துக் கொண்டு "போ, அண்ணா!" என்றாள்.
"என்னைப் 'போ', 'போ' என்று சொல்லிக் கொண்டிருந்தாயோ, ஒரு நாளைக்கு நான் போயே போய் விடுவேன். அப்புறம் திரும்பி வரவே மாட்டேன்" என்றான் முத்தையன்.
என்ன ஆச்சரியம்! அபிராமியின் கண் முனைகளில் அந்த நீர்த்துளிகள் அதற்குள் எங்கிருந்துதான் வந்தனவோ?
மேலாடையினால் அவள் கண்ணைத் துடைத்துக் கொண்டு "ஆமாம்; என்னால் உனக்குக் கஷ்டந்தான். நானொருத்தி இல்லாவிட்டால்..." என்பதற்குள் முத்தையன், "சரி, சரி, பல்லவி பாடியதே போதும்; அநுபல்லவி, சரணம் எல்லாம் இப்போது வேண்டாம்" என்று கூறிவிட்டு எழுந்தான்.
பிறகு, "வேலை தலைக்கு மேல் கிடக்கிறது. சீக்கிரம் போக வேண்டும். சமையல் ஆகி விட்டதா? அல்லது பாட்டு இட்டுக்கட்டிக் கொண்டே உட்கார்ந்திருந்து விட்டாயா?" என்று கேட்டான்.
"இலை போட்டுத் தயாராய் வைத்திருக்கிறேன்" என்றாள் அபிராமி.
முத்தையன் சமையலறைக்குச் சென்று இலையில் உட்கார்ந்து சாப்பிடத் தொடங்கினான்.
"நிஜமாகவே என்னை விட்டுவிட்டுப் போய் விடுவாயா அண்ணா!" என்று அபிராமி கேட்டாள்.
முத்தையன் சிரித்தான். ஆனால் அந்தச் சிரிப்பிலே சந்தோஷமில்லை. இருதயத்தைப் பாதிக்கும் துக்கம் இருந்தது.
"அபிராமி! உன்னை விட்டுவிட்டுப் போகிறவனாயிருந்தால் இரண்டு வருஷத்துக்கு முன்பே போயிருப்பேன்" என்றான்.
*****
கொஞ்ச நேரம் கழித்து அபிராமி சொன்னாள்: "ஒரு சமாசாரம் அண்ணா! அந்தக் கார்வார் பிள்ளையை இங்கே அழைத்துக் கொண்டு வராதே! அவன் மூஞ்சியைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை. நீ அந்தண்டை போகும் சமயம் அவன் என்னைப் பார்த்து வெறிக்க வெறிக்க முழிக்கிறான்..."முத்தையன் நிமிர்ந்து பார்த்து, "என்ன சொல்கிறாய்? நிஜமாகவா?" என்று கேட்டான்.
"ஆமாம். நேற்றைக்கு நீ இல்லாதபோது அவன் இங்கே வந்து கதவை இடித்தான். நான் ஜன்னல் வழியாகப் பார்த்து, 'அண்ணன் இல்லை' என்றேன். 'அண்ணன் இல்லாவிட்டால் கதவைத் திறக்கக்கூடாதா?' என்று சொல்லிவிட்டுப் போனான். அவனுடைய நடவடிக்கை ஒன்றும் எனக்குக் கட்டோட பிடிக்க வில்லை."
அபிராமியின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த முத்தையன் திடீரென்று கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். அபிராமியின் கண்கள் மறுபடியும் "இதோ ஜலத்தைப் பெருக்கி விடுவோம்" என்று எச்சரிக்கை செய்தன.
முத்தையன் சிரித்துக் கொண்டே "ரொம்ப சரி, பேஷான யோசனை! அபிராமி, நான் சொல்வதைக் கேள். அந்தக் கார்வார் பிள்ளை அப்படியா பண்ணுகிறான்? பேசாமலிரு, அவனுக்கு உன்னைக் கட்டிக்கொடுத்து விடுகிறேன். அதுதான் அவனுக்குச் சரியான தண்டனை!" என்றான்.
இதைக் கேட்ட அபிராமி, அவன் சற்றும் எதிர்பாராத வண்ணம் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். முத்தையனுக்கோ கோபம் அசாத்தியமாய் வந்தது. "சீச்சீ! வரவர நீ மகா அழுமூஞ்சியாய்ப் போய்விட்டாய்! என்ன சொன்னாலும் அழுகைதானா? நான் தொலைந்து போகிறேன்..." என்று சொல்லிவிட்டுப் பாதி சாப்பாடு அப்படியே இலையில் இருக்க, எழுந்து போனான்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 7 | 8 | 9 | 10 | 11 | ... | 53 | 54 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
9.வெயிலும் மழையும் - Kalvanin Kaathali - கள்வனின் காதலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அபிராமி, முத்தையன், கொண்டு, என்றான், பார்த்து, கொண்டே, அபிராமியின், மரங்களும், இப்போது, விட்டுவிட்டுப், நாளைக்கு, என்னைப், போகிறேன், இல்லாவிட்டால், என்றாள், இலையில், அண்ணன், சொல்லிவிட்டுப், போனான், வெறிக்க, கார்வார், எனக்கு, தொடங்கினான், அந்தக், கேட்டான், மறுபடியும், முற்றத்தில், பம்பளிமாஸ், எழுந்து, திடீரென்று, நிமிர்ந்து, பாட்டு, குயில், கூடத்தில், வெயில், இரண்டு, மரத்தில், அவனுடைய, சொல்லிக், அப்போது, சிரித்துக், நாசமாய்ப், தொடங்கினாள்