கள்வனின் காதலி - 38."ஐயோ! என் அண்ணன்!"
அன்றிரவு வழக்கம் போல், "சங்கீத சதாரம்" நாடகம் நடந்து கொண்டிருந்தது. கமலபதி சதாரம் வேஷத்தில் மேடையில் வந்து நடித்துக் கொண்டிருந்த போது, தற்செயலாக அவனுடைய பார்வை அபிராமியின் மீது விழுந்தது. ஒரு நிமிஷம் அவன் மெய்ம்மறந்து போனான். அச்சமயம் மேடையில் சொல்ல வேண்டியதைக் கூட மறந்து போய் நின்றான். கோமுட்டி செட்டியாரின் மகன் வேஷம் போட்டவன் கெட்டிக்காரனாதலால், அவன் கமலபதியின் கால் விரலைத் தன் கால் விரலால் அமுக்கி, "என்ன நான் கேட்கிறேன், சும்மா இருக்கிறாயே?" என்று கூறி, மறுபடியும் கேள்வியைப் போட்ட போதுதான் கமலபதிக்கு நாடகக் கட்டம் ஞாபகம் வந்தது. அந்தக் காட்சி முடிந்து திரை விட்டதும், கமலபதி முத்தையனிடம் அவசரமாகச் சென்று, "முத்தையா! ஒரு அதிசயம்!" என்றான். முத்தையன் என்னவென்று கேட்கவும், அபிராமி நாடகம் பார்க்க வந்திருக்கிறாள் என்பதைத் தெரிவித்து, "நல்ல வேளை நான் முதலில் அவளைப் பார்த்தேன். எனக்கே ஒரு நிமிஷம் திணறிப் போய்விட்டது. நீ மேடையிலிருக்கும் போது திடீரென்று அவளைப் பார்த்திருந்தால் என்ன செய்திருப்பாயோ என்னமோ?" என்றான்.
முத்தையன் அளவிலாத ஆவலுடனும் பரபரப்புடனும் மேடையின் பக்கத் தட்டிக்குச் சமீபம் வந்து, இடுக்கு வழியாக, கமலபதி காட்டிய திக்கை நோக்கினான். அடுத்த நிமிஷம் அவன் கமலபதியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். அவன் உடம்பு நடுங்கிற்று. கமலபதியை அவன் தனி இடத்துக்கு அழைத்துச் சென்று, "கமலபதி! நான் சாயங்காலம் சொன்னது நிஜமாய்ப் போய்விடும் போலிருக்கிறது. அபிராமியின் பக்கத்திலிருப்பது யார் தெரியுமா? அவர்தான் திருப்பரங்கோயில் போலீஸ் ஸப்-இன்ஸ்பெக்டர். ஏதோ சந்தேகம் தோன்றித்தான் அவர் அபிராமியை இந்த நாடகத்துக்கு அழைத்து வந்திருக்க வேண்டும்" என்றான்.
ஸர்வோத்தம சாஸ்திரி முத்தையனைப் பார்த்ததில்லையே தவிர, முத்தையன் திருப்பரங்கோயிலில் இருந்த போது பல தடவை சாஸ்திரியைப் பார்த்திருக்கிறான். ஒரு ஊரில் ஸப்-இன்ஸ்பெக்டர் உத்தியோகம் பார்ப்பவரை அந்த ஊரில் உள்ளவர்களுக்குத் தெரியாமல் இருக்க முடியுமா?
நண்பர்கள் இருவரும் கவலையுடனே ஆலோசனை செய்தார்கள். முத்தையன் நாடகம் முழுவதும் நடித்து விடவேண்டியதுதான் என்று தீர்மானித்தார்கள். அவன் அபிராமியின் பக்கம் திரும்பிப் பார்க்கக் கூடாது. பார்த்தாலும் தெரிந்தவளென்பதாகக் காட்டிக் கொள்ளக் கூடாது. வேறு வழி ஒன்றுமில்லை. இப்போது மேடைக்கு வரமாட்டேனென்றால், எல்லாம் ஒரே குழப்பமாக முடிவதோடு சந்தேகமும் ஊர்ஜிதமாகுமல்லவா?
ஏதாவது அபாயத்துக்கு அறிகுறி தென்பட்டால் என்ன செய்ய வேண்டுமென்பதையும் அவர்கள் யோசித்து முடிவு செய்தார்கள். கமலபதி சென்னைக்கு வந்ததும், ஒரு 'ஸெகண்ட் ஹாண்ட்' மோட்டார் கார் வாங்கியிருந்தான். நடிகர்கள் வருவதற்கென்று கொட்டகைக்குப் பின்னால் ஒரு தனி வழியிருந்தது. அவனுடைய காரை அங்கே தான் நிறுத்தி வைப்பது வழக்கம். அவசியம் ஏற்பட்டால், முத்தையன் அந்தக் காரில் ஏறி ஓட்டிக் கொண்டு போய் விட வேண்டியது. அப்புறம் பகவான் விட்ட வழி விடுகிறார்.
"கமலபதி! உன் வாக்குறுதியை மறந்து விடாதே!" என்று கடைசியாகக் கேட்டுக் கொண்டான் முத்தையன்.
*****
நாடகம் நடந்து கொண்டு வந்தது. சதாரமும் திருடனும் சந்திக்கிறார்கள். திருடன் பாடுகிறான்:"கண்ணே உனக்குப் பயம் ஏனோ-நீ
கவலை கொள்ளவும் விடுவேனா - அடி
பெண்ணே பிரமாதம் பண்ணிடாதே-கள்ளப்
பிறப்பென்று அவமதிக்காதே!
கண்ணன் என்பானொரு கள்ளன் - முன்னம்
கன்னியர் மனங்களைக் கவர்ந்தான் - அவன்
கன்னமிடா இதயமில்லை - காதல்
கொள்ளையிடாத உள்ள மில்லை
வெண்ணெய் திருடி அந்தக் கள்வன் - எங்கள்
வம்சத்துக்கே வழி முதல்வன் - அந்தக்
கண்ணன் குலத்தில் பிறந்தேனே - ஏற்ற
கள்ளப் புருஷனாய் வாய்த்தேனே!"
கடைசி அடியைப் பாடும்போது, திருடன் தன் முகமூடியை விலக்குகிறான். உடனே சதாரம் மூர்ச்சித்து விழுகிறாள்.
அதே சமயத்தில் சபையில் குடிகொண்டிருந்த நிசப்தத்தைப் பிளந்து கொண்டு, "ஐயோ! என் அண்ணன்!" என்று ஒரு குரல் எழுந்தது. அடுத்த கணத்தில் அபிராமி நிஜமாகவே மூர்ச்சையடைந்து விழுந்தாள். மீனாட்சி அம்மாள் அவளைத் தாங்கிக் கொண்டாள்.
ஸப்-இன்ஸ்பெக்டர் ஒரு துள்ளுத் துள்ளி எழுந்து பின் புறம் நோக்கிச் சமிக்ஞை செய்தார். உடனே அங்கிருந்த நாலு பேரும் எழுந்து விரைந்து சென்றார்கள்.
இதற்குள் சபையில் பாதிப் பேருக்குமேல் எழுந்து நிற்கவும், "என்ன? என்ன?" என்று ஒருவரையொருவர் கேட்கவும் காரணந் தெரியாமல் சில பேர் விழுந்தடித்து வெளியே ஓடவும் - இம்மாதிரி அல்லோல கல்லோலமாகிவிட்டது. மேடையிலும் திரையை விட்டுவிட்டார்கள்!
உடுப்பணியாத போலீஸார் நாலு பேரும் வெளியே சென்று அங்கே தயாராயிருந்த உடுப்பணிந்த போலீஸ்காரர்களையும் அழைத்துக் கொண்டு மேடைக்குள் ஓடினார்கள். அங்கே மூலை முடுக்குகளில் எல்லாம் தேடியுங் கூடத் திருடன் அகப்படவில்லை!
கமலபதி கவலை தேங்கிய முகத்துடன், ஆவலுடன் எதையோ எதிர் நோக்குபவன் போல் இருந்தான். சில நிமிஷங்களுக்குப் பிறகு, சற்று தூரத்துக்கப்பாலிருந்து அவனுடைய மோட்டார் ஹாரனின் சப்தம் வரவும் அவனுடைய முகம் பிரகாசம் அடைந்தது!
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 36 | 37 | 38 | 39 | 40 | ... | 53 | 54 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
38."ஐயோ! என் அண்ணன்!" - Kalvanin Kaathali - கள்வனின் காதலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கமலபதி, முத்தையன், கொண்டு, அந்தக், நாடகம், அவனுடைய, என்றான், நிமிஷம், சென்று, அபிராமியின், சதாரம், இன்ஸ்பெக்டர், எழுந்து, திருடன், கூடாது, மோட்டார், எல்லாம், கண்ணன், வெளியே, பேரும், சபையில், செய்தார்கள், கள்ளப், அபிராமி, மறந்து, மேடையில், நடந்து, வழக்கம், வந்தது, கேட்கவும், கொண்டான், அடுத்த, அவளைப், அண்ணன், தெரியாமல்