கள்வனின் காதலி - 33.முத்தையன் எங்கே?
முன் அத்தியாயத்தில் கூறிய சம்பவங்கள் நடந்து சுமார் இரண்டு மாதம் ஆகியிருக்கும். திருப்பரங்கோவிலில் ஸப்-இன்ஸ்பெக்டர் ஸர்வோத்தம சாஸ்திரி ஒரு நாள் மாலை மிகுந்த மனச்சோர்வுடன் வீட்டுக்குத் திரும்பி வந்தார். அவர் வரும்போது, உள்ளே,
"போது போகுதில்லையே - எனக்கொரு
தூது சொல்வாரில்லையே!"
என்று இனிமையாகப் பாடுங்குரல் கேட்டுக் கொண்டிருந்தது. சாஸ்திரியார் உற்சாகமாயிருந்திருக்கும் பட்சத்தில், நேரே கூடத்திற்குப் போய் தாமும் ஒரு அடி இரண்டடி தம் மனைவியுடன் சேர்ந்து பாடியிருப்பார். கொஞ்சம் அபிநயம் பிடித்துக் கூடக் காட்டியிருப்பார்! ஆனால் இன்றைய தினம் மிகவும் மனச் சோர்வுக்கு அவர் ஆளாகியிருந்தபடியால், கூடத்துக் காமரா உள்ளில் பிரவேசித்து, தலைப்பாகையை எடுத்து ஆணியில் மாட்டி விட்டு ஈஸிசேரில் பொத்தென்று விழுந்தார்.
அவர் மனச்சோர்வு கொள்வதற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. அன்றைய தினம் அவரை ஜில்லா போலீஸ் சூபரின்டென்டெண்டு துரை மாட்டு மாட்டென்று மாட்டிவிட்டார். திருடன் முத்தையனை உயிருடனோ, உயிரில்லாமலோ கூடிய சீக்கிரத்தில் பிடிக்காத வரையில் சாஸ்திரியின் உத்தியோகத்துக்கே ஆபத்து வந்து விடலாமென்று தோன்றிற்று. துரை அவ்வளவு கடுமையாகப் பேசினார்.
முத்தையன் திருப்பரங்கோவில் லாக்-அப்பிலிருந்து தப்பி ஓடிய புதிதில் அவனைப் பிடிப்பதில் சாஸ்திரி அவ்வளவு சுறுசுறுப்புக் காட்டவில்லையென்பது உண்மைதான். அபிராமியின் மீது அவருக்கு ஏற்பட்ட வாத்ஸல்யம் முத்தையனைப் பிடிப்பதில் உள்ள ஆர்வத்தை ஓரளவு மழுங்கச் செய்திருந்தது. மேலும், முத்தையனுடைய துணிகரமான செயல்கள் மூன்று சர்கிள் இன்ஸ்பெக்டர்களுடைய எல்லைக்குள் நடந்தபடியால், இவருக்கு அவனைப் பிடிப்பதில் தனிப்பட்ட பொறுப்பு அப்போது ஏற்படவில்லை.
சமீபத்தில், அதாவது மூன்று மாதத்துக்கு முன்னால் தான் முத்தையனைப் பிடிப்பதற்கென்று ஸர்வோத்தம சாஸ்திரியை 'ஸ்பெஷல் டியூடி'யில் போட்டார்கள். இதில் இவருக்கு அவ்வளவு இஷ்டமில்லையென்றாலும் உத்தரவை மீற முடியாமல் ஒப்புக் கொண்டார்.
அவர் இந்த 'ஸ்பெஷல் டியூடி'யில் போடப்பட்டதிலிருந்து, மிகவும் ஆச்சரியமாக, களவுகளும் கொள்ளைகளும் நின்று போயின. சாஸ்திரி கொள்ளிடக்கரைப் படுகைகள், காடுகள், நாணல் காடுகள் எல்லாவற்றையும் ஒரு அடி இடம் கூட பாக்கியில்லாமல் தேடி விட்டார்; கொள்ளிடத்து மணலையே சல்லடை போட்டு சலித்து விட்டார். ஆனாலும் பலனில்லை. ஒரு வேளை அவன் கொள்ளிடத்து முதலைக்கு இரையாகி மாண்டு போனானோ என்று கூடச் சந்தேகப்படலானார்.
ஆனால், மேலதிகாரிகளுக்கு இந்த நம்பிக்கை ஏற்படவில்லை. ஏற்கனவே அவர்களுக்குச் சாஸ்திரியின் மீது ஒருவாறு சந்தேகம் ஏற்பட்டிருந்தது. முத்தையனுடைய துணிகரத் திருட்டுகளுக்குச் சாஸ்திரியும் உடந்தை என்பதாக அவர் மேல் 'மொட்டை விண்ணப்பங்கள்' வந்திருந்தன. இதன் உண்மையைப் பரிசோதிப்பதற்காகவே ஜில்லா சூபரின்டென்டெண்ட் துரை சாஸ்திரியை இந்த 'ஸ்பெஷல் டியூடி'யில் போட்டார். அவர் வந்ததிலிருந்து முத்தையனுடைய ஆர்ப்பாட்டம் ஓய்ந்திருக்கவே துரைக்கும் சாஸ்திரியின் மேல் சந்தேகம் உண்டாயிற்று. இவர் எச்சரிக்கை செய்துதான் முத்தையனை ஜாக்கிரதையாயிருக்கப் பண்ணி விட்டார் என்று ஊகிக்க இடமிருந்ததல்லவா?
உண்மையில் ஸர்வோத்தம சாஸ்திரி இந்த மூன்று மாதமும் சும்மா இருக்கவில்லை. குறவன் சொக்கனையும், அவனுடைய ஆட்கள் மூன்று பேரையும் கைது செய்திருந்தார். முத்தையனுக்குச் சாப்பாடு கொடுத்துக் கொண்டிருந்த அங்காடிக் கடைக்காரியையும் அவர் கைது செய்து விட்டார். இவர்கள் எல்லாம் இப்போது ஸப்ஜெயிலில் இருந்தனர். இவர்களிடம் துப்பு விசாரித்து முத்தையன் கொள்ளையடித்து வைத்திருந்த பணம், நகை இவற்றில் ஒரு பகுதியைக்கூடக் கைப்பற்றி விட்டார். ஆனால், முத்தையனைப் பற்றி மட்டும் அவர்களிடமிருந்து எவ்விதத் தகவல்களும் தெரிந்து கொள்ள முடியவில்லை. இன்று பகல் முழுவதும் அவர்களைப் பயத்தினாலும் நயத்தினாலும் மற்றும் போலீஸார் வழக்கமாகக் கையாளும் முறைகளைக் கைக்கொண்டும் விசாரிப்பதில்தான் அவர் ஈடுபட்டிருந்தார். ஒன்றும் பிரயோஜனப்படவில்லை. அவர்களுக்கு ஏதாவது முத்தையனைப் பற்றித் தெரிந்தால்தானே சொல்வார்கள்.
இதனால் மனச்சோர்வு அடைந்துதான், ஸர்வோத்தம சாஸ்திரி அவ்வளவு அலுப்புடன் அன்று வீடு திரும்பி வந்து ஈஸிசேரில் படுத்துக் கொண்டது. படுத்துக் கொண்ட சற்று நேரத்திற்கெல்லாம், அன்று வந்த தினசரி பத்திரிகையை எடுத்துப் புரட்டினார். அதில் வெளியாகியிருந்த ஒரு செய்தியின் தலைப்பைப் பார்த்ததும் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து அதைக் கவனமாய்ப் படிக்கத் தொடங்கினார். அந்தச் செய்தி வருமாறு:
"மதுரை ஒரிஜனல் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் நாடகக் கம்பெனியின் 'சங்கீத சதாரம்' என்னும் நாடகம் இந்நகரில் சென்ற ஒரு மாதமாய்த் தினந்தோறும் மேற்படி தியேட்டரில் நடந்து வந்த போதிலும், இன்னும் அபரிமிதமான கூட்டத்தைக் கவர்ந்து வருகிறது. பிரசித்தி பெற்ற மைசூர் குப்பி கம்பெனியாரைக் கூட இந்தக் கம்பெனியார் மிஞ்சிவிட்டார்கள் என்று சொல்லலாம். இந்த நாடகத்தில் திருடனாக நடிப்பவர் சென்னைவாசிகளின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டு விட்டார் என்று சொல்வது மிகையாகாது. உண்மையில் சதாரம் அத்திருடன் மீது காதல் கொள்ளவில்லையென்பது நம்பத் தகாத ஆச்சரியமாகவே இருக்கிறது. நாடக மேடையில் இவர் நடிக்கும் போது அசல் திருடனாகத் தோன்றுகிறாரே தவிர திருடன் வேஷம் போட்டு நடிக்கிறார் என்பதே சபையோருக்கு ஞாபகம் இருப்பதில்லை..."
இந்தச் செய்தியைப் படித்து வரும்போது, ஸப்-இன்ஸ்பெக்டரின் முகத்தில் பெரிதும் பரபரப்புக் காணப்பட்டது. படித்து முடித்த பின் சுமார் ஐந்து நிமிஷ நேரம் அவர் ஆழ்ந்த யோசனையில் இருந்தார். பிறகு அவசரமாய் "மீனாக்ஷி! மீனாக்ஷி! இங்கே வா!" என்று அலறினார்.
அவருடைய மனைவி பாடிக் கொண்டிருந்த பாட்டை அப்படியே அந்தரத்தில் நிறுத்திவிட்டு ஓடி வந்தாள்.
"என்ன? என்ன? திருடன் பிடிபட்டானா?" என்று கேட்டுக் கொண்டே வந்தாள்.
சாஸ்திரி மறுபடியும் பத்திரிகையில் ஆழ்ந்தவராய், "திருடனுமில்லை; பிடிபடவுமில்லை; நீ சுருக்கா இரண்டு சட்டையிலே ஒரு பெட்டியை வச்சுக் கொண்டா!" என்றார்.
"அப்படியேயாகட்டும் நான் சட்டையிலே பெட்டியை வச்சுக்கொண்டு வந்தால், நீங்கள் செருப்பிலே காலைப் போட்டுண்டு, கண்ணாடியிலே மூக்கைப் போட்டுண்டு எவ்விடத்துக்குப் பயணப்படப் போறயள்! சொன்னால் தேவலை?"
"ஓகோ! அது தெரியாதா? பட்டணத்திலே யாரோ திருடனுக்குக் கலியாணம் என்று சொன்னாயே? அதற்குப் போகிறதற்குத்தான்."
"எங்கள் அக்காளுக்கு வரப்போகிற மாப்பிள்ளையை இப்படி நீங்கள் திருடன் என்று சொன்ன செய்தி தெரிந்தால் அவள் உங்களை இலேசில் விடமாட்டாள். போனால் போகட்டும். உங்களை எப்படியும் கல்யாணத்துக்கு அழைச்சுண்டு போகிறதென்று தீர்மானம் பண்ணி மூட்டையெல்லாம் கட்டி வைத்து விட்டேன். சாப்பிட்டு விட்டுக் கிளம்ப வேண்டியதுதான். ஆனால் ஒரு சமாசாரம். வண்டியிலே நீங்கள் ஏறிக்கொண்டு வரவேண்டுமே தவிர, 'வண்டி தான் என்மேல் ஏறிண்டு வரணும்' என்று பிடிவாதம் பிடிக்கக்கூடாது..."
"மீனாக்ஷி! நீ மகாகெட்டிக்காரி; உன் சாமர்த்தியத்துக்குத் திருடப் போக வேண்டியதுதான்."
"ஆமாம், திருடனைப் பிடிக்கத்தான் யோக்யதையில்லை; திருடவாவது போகலாம்! சீக்கிரம் கிளம்புங்கள்."
இப்படியாக, இந்தக் குதூகலம் நிறைந்த தம்பதிகள் சென்னைக்குப் பிரயாணமானார்கள்.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 31 | 32 | 33 | 34 | 35 | ... | 53 | 54 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
33.முத்தையன் எங்கே? - Kalvanin Kaathali - கள்வனின் காதலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - சாஸ்திரி, விட்டார், அவ்வளவு, மூன்று, திருடன், முத்தையனைப், மீனாக்ஷி, ஸர்வோத்தம, முத்தையனுடைய, முத்தையன், ஸ்பெஷல், டியூடி, சாஸ்திரியின், பிடிப்பதில், நீங்கள், வந்தாள், கொண்டிருந்த, சட்டையிலே, வேண்டியதுதான், சந்தேகம், படித்து, உண்மையில், உங்களை, செய்தி, சதாரம், பெட்டியை, போட்டுண்டு, போட்டு, இந்தக், படுத்துக், ஏற்படவில்லை, வரும்போது, கேட்டுக், மிகவும், திரும்பி, இரண்டு, நடந்து, சுமார், ஈஸிசேரில், மனச்சோர்வு, சாஸ்திரியை, காடுகள், இவருக்கு, அவனைப், ஜில்லா, முத்தையனை, கொள்ளிடத்து