கள்வனின் காதலி - 27.பிள்ளைவாளின் பழி
கல்யாணியைப் பழி வாங்குவதற்குப் புலிப்பட்டி ரத்தினம் அநேக குருட்டு யோசனைகள் செய்துவிட்டுக் கடைசியில் ஒரு முடிவுக்கு வந்தான். தாமரை ஓடைப் பண்ணையின் நிலங்களைப் பலாத்காரமாய்த் தன் வசப்படுத்திக் கொண்டு விடுவதென்றும், கல்யாணியைக் கோர்ட்டுக்குப் போகும் படியாகவோ தன்னுடன் ராஜி பேச வரும்படியாகவோ செய்து விடுவதென்றும் தீர்மானித்தான்.
பண்ணையின் நிலங்கள் எல்லாம் அந்த வருஷம் நன்றாய் விளைந்திருந்தன. அறுவடையாகிவிட்டது. ஆனால் நெல் எல்லாம் இன்னும் களத்திலேயே கிடந்தது. களத்திலிருந்தபடியே நெல்லை விற்றுவிடுவதா அல்லது எடுத்துக் கொண்டு போய்ச் சேர் கட்டி வைத்திருப்பதா என்பதைப் பற்றிக் கல்யாணி யோசனை செய்து கொண்டிருந்தாள்.
நெல்லைப் போட்டு விடும்படியாக நெல் வியாபாரி ஒருவன் வந்து அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தான். பண்ணையின் காரியஸ்தருக்கு இது பிடிக்கவில்லை. "நம்முடைய பண்ணையில் எப்போதும் ஆனி மாதத்திலே தான் நெல்லுப் போடுகிற வழக்கம்" என்று அவர் சொன்னார்.
இம்மாதிரி அவர்கள் பேசிக் கொண்டிருக்கையில், ஒரு ஆள் குடல் தெறிக்க ஓடி வந்து, "ஆச்சி! ஆச்சி! மோசம் வந்துட்டுது!" என்று கதறினான். என்னவென்று கேட்கவும், "புலிப்பட்டி ஆட்கள் வந்து களத்திலிருக்கும் நெல்லை அள்ளறானுங்க. இருபது முப்பது வண்டி வந்து கிடக்கு. தடியுங் கையுமாய் நூறு ஆட்கள் வந்து நிற்கிறானுங்க. எல்லாரும் நன்னாப் புட்டிப் போட்டுட்டு வந்திருக்கானுங்க. கிட்ட வந்தால் மண்டையை உடைச்சுடுவேன் என்கிறானுங்க. பாருங்க, அங்கே புடிச்ச ஓட்டம் இங்கே வந்துதான் நின்னேனுங்க" என்றான்.
அதைக் கேட்ட காரியஸ்தர் முதலியார், "ஐயோ!" என்று அப்படியே உட்கார்ந்து போய்விட்டார். அவர் சாது மனுஷர். பண்ணையாரின் காலத்தில் இம்மாதிரிச் சங்கடம் ஒன்றும் நேர்ந்தது கிடையாது. ஆகவே, இந்த நிலைமையை எப்படிச் சமாளிக்கப் போகிறோமென்று அவர் ஏங்கிப் போனார்.
நெல் வியாபாரி இது தான் சமயம் என்று, "அப்பவே நெல்லைப் போட்டுடுங்க போட்டுடுங்க என்று அடிச்சுண்டேனே, கேட்டீங்களா? இப்படி ஒரு பேச்சு காதில் படக் கொண்டுதானே அவ்வளவு தூரம் வற்புறுத்தினேன்?..." என்று சரடு விட்டான்.
கல்யாணி சற்று நேரம் யோசனையில் ஆழ்ந்திருந்தாள். சட்டென்று அவளுடைய முகத்தில் பிரகாசம் ஏற்பட்டது. "முதலியார்! கிளம்புங்கள் களத்துக்குப் போகலாம்!" என்றாள்.
முதலியார் திகைத்துப் போனார். "ஆச்சி! என்ன சொல்றீங்க?"
"ஆமாம்; களத்துக்கு நானே வருகிறேன். வாருங்கள் போகலாம்" என்று சொல்லி, அவளே முதலில் கிளம்பினாள்.
உள்ளேயிருந்த அத்தையின் காதில் இது விழுந்தது. அவள் ஓடி வந்து, "கல்யாணி, கல்யாணி! நான் சொல்கிறேன், நீ போவாதே" என்று குறுக்கே மறித்தாள் கல்யாணி அதைப் பொருட்படுத்தாமல் அத்தையை இலேசாக வழியை விட்டு நகர்த்தி விட்டு விரைந்து நடந்தாள்.
அப்போது காரியஸ்த முதலியாருக்கும் ரோஸம் பிறந்து, "அடே! ஓடு! நம்ம ஆளையெல்லாம் தடியுங்கையுமாய்க் களத்துக்கு வரச்சொல்லு!" என்று கூறினார். அதற்குக் கல்யாணி, "முதலியார்! ஆளும் வேண்டாம், தடியும் வேண்டாம். நீங்கள் மட்டும் என் பின்னோடே வாருங்கள், போதும்" என்றாள்.
*****
தூரத்தில் கல்யாணியைக் கண்டதும், நெல் அள்ளியவர்கள், தடியுங் கையுமாய் நின்றவர்கள், வண்டிக்காரர்கள் எல்லாருக்கும் ஆச்சரியமாய்ப் போயிற்று. அந்தப் பக்கங்களில் சாதாரணமாய்ப் பண்ணை வீட்டு ஸ்திரீகள் வயல்வெளிகளுக்கு வருவது கிடையாது. அதுவும் இம்மாதிரி சந்தர்ப்பத்தில் கல்யாணி ஆள்படை ஒன்றும் இல்லாமல் வருவதைப் பார்த்ததும் அவர்கள் எல்லோருக்குமே காரணம் சொல்ல முடியாத திகில் உண்டாய் விட்டது. எல்லாரும் அப்படியே நின்று கல்யாணி வரும் திக்கையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கல்யாணி கம்பீரமாய் நடந்து நேரே அவர்களுக்கு மத்தியில் வந்து நின்றாள். "அடே! நீங்கள் எல்லாம் யார்?" என்று கேட்டாள்.கொஞ்ச நேரம் பதில் ஒன்றும் வரவில்லை. அவர்களில் பெருங்குடிகாரனும் வாயாடியுமான ஒருவன் "நாங்களெல்லாம் மனுஷங்க" என்றான்.
"நீங்கள் எந்தப் பண்ணை ஆட்கள்?" என்று கல்யாணி கேட்டாள்.
"புலிப்பட்டி ஆட்களுங்க."
"சரி, இது எந்தப் பண்ணைக் களம்?"
"தாமரை ஓடைப் பண்ணைக் களம்."
"பின்னே, ஏன் அப்பா இந்தக் களத்தில் வந்து நெல் வாருகிறீங்க?"
ஆட்கள் மௌனமாயிருந்தார்கள்.
"அடே! எல்லோரும் என்னை நன்றாய்ப் பாருங்க. நான் யார் தெரிகிறதா?" என்று கம்பீரமாய்க் கேட்டாள் கல்யாணி.
அப்போது அந்தப் பெருங்குடிகாரன், "அம்மா! நீ மாரியம்மனாச்சே! எனக்குத் தெரியாமே போச்சே! அடே ஆளுங்களா! எல்லாரும் விழுந்து கும்பிடுங்கடா!" என்று சொல்லி முதலில் தானே திடீரென்று தரையில் விழுந்து கும்பிட்டான். "அம்மா! தாயே! காப்பாத்தணும்" என்று புலம்பத் தொடங்கினான். மற்ற ஆட்கள் எல்லாம் பிரமை பிடித்தவர்கள் போல் நின்றார்கள்.
"அடே! உங்களையெல்லாம் காப்பாற்றத்தான் நான் வந்தேன். நீங்கள் இப்போது செய்வதற்கு வந்தது, பெரிய தப்புக் காரியம். பகல் கொள்ளை அடிப்பதற்காக வந்திருக்கிறீர்கள். இதற்காக உங்களைப் பிடித்துக் காலிலேயும் கையிலேயும் விலங்கு மாட்டி, ஏழு ஏழு வருஷம் ஜெயிலிலே போட்டு விடுவார்கள். நீங்கள் ஜெயிலுக்குப் போய் விட்டால், உங்கள் பெண்சாதி, பிள்ளைகளை உங்கள் எசமான் காப்பாத்தி விடுவாரா?" என்றாள் கல்யாணி.
"ஐயோ! எங்க எசமானா? செய்யற வேலைக்கு வயத்திலே அடிக்காமே கூலி கொடுத்தால் போதாதா?"
"பின்னே, அவர் சொல்றதைக் கேட்டுக் கொண்டு இந்தத் திருட்டு வேலைக்கு வந்தீர்களே! எல்லாரும் திரும்பிப் போய்ச் சேருங்கள். சாயங்காலம் உங்கள் வீட்டுப் பெண் பிள்ளைகளை வரச் சொல்லுங்கள் தலைக்கு பதக்கு நெல் கொடுத்தனுப்பச் சொல்கிறேன். ஏன் நிற்கிறீர்கள்? போங்கள்!" என்றாள்.
"ஆமாண்டா, போகலாம் வாங்கடா! நமக்கென்னத்துக்கடா தண்டா!" என்றான் ஒருவன். முதலில் பத்துப் பேர் கிளம்பினார்கள். அவர்கள் பின்னால் இன்னும் சிலர் போனார்கள். பிறகு பாக்கியுள்ளவர்களும் "நமக்கு மாத்திரம் என்னடா?" என்று சொல்லிக் கொண்டு கிளம்பிச் சென்றார்கள்.
பிறகு, கல்யாணி வண்டிக்காரர்களை அழைத்துப் பேசினாள். அதன் பயனாக, எல்லா வண்டிக்காரர்களும் நெல் மூட்டைகளுடன் தாமரை ஓடை வீதிக்குச் சென்று, அங்கே, பண்ணையில் சேர் கட்டும் முற்றத்தில் நெல்லைப் போட்டுவிட்டு வண்டிச் சத்தத்தை வாங்கிக் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.
இந்த விவரமெல்லாம் புலிப்பட்டி ரத்தினத்தின் காதுக்கு எட்டியபோது, அவன் அவமானத்தினால் குன்றிப் போனான். அவ்வளவுக்கு அவனுடைய குரோதமும் அதிகமாயிற்று. அப்போதுதான், கொள்ளிடக்கரைத் திருடனுக்குப் பணம் கொடுத்துக் கல்யாணி வீட்டில் கொள்ளையடிக்கச் செய்ய வேண்டுமென்ற அபூர்வ யோசனை அவனுடைய மூளையில் உதயமாயிற்று.
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 25 | 26 | 27 | 28 | 29 | ... | 53 | 54 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
27.பிள்ளைவாளின் பழி - Kalvanin Kaathali - கள்வனின் காதலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - கல்யாணி, ஆட்கள், கொண்டு, நீங்கள், எல்லாரும், என்றாள், புலிப்பட்டி, முதலியார், எல்லாம், அவர்கள், ஒன்றும், கேட்டாள், என்றான், பண்ணையின், ஒருவன், முதலில், நெல்லைப், உங்கள், போய்ச், போகலாம், வாருங்கள், அப்போது, சொல்லி, சொல்கிறேன், விட்டு, வேண்டாம், எந்தப், பிள்ளைகளை, வேலைக்கு, அவனுடைய, விழுந்து, பின்னே, களத்துக்கு, பண்ணைக், அந்தப், போனார், பண்ணையில், இம்மாதிரி, தடியுங், கேட்டுக், வியாபாரி, நெல்லை, வருஷம், போட்டு, கையுமாய், செய்து, இன்னும், போட்டுடுங்க, காதில், கிடையாது, அப்படியே, பாருங்க, கல்யாணியைக், விடுவதென்றும்