கள்வனின் காதலி - 1.பறித்த தாமரை
பூங்குளம் என்று அந்தக் கிராமத்துக்குப் பொருத்தமாய்த்தான் பெயர் அமைந்திருந்தது. நீர்வளம் நிறைந்த ஊருக்கு உதாரணம் வேண்டுமானால், பூங்குளத்தைத் தான் சொல்ல வேண்டும். ஆடி, ஆவணி மாதத்தில் ஊருக்கு வெளியே சென்று பார்த்தால் குளங்களிலும், ஓடைகளிலும், வாய்க்கால்களிலும், வயல்களிலும் தண்ணீர் நிறைந்து ததும்பி அலைமோதிக் கொண்டிருக்கும். எங்கெங்கும் ஜலமாகவே காணப்படும்.
இந்த ஊருக்கென்று அவ்வளவு புஷ்பங்களும் எங்கிருந்து வந்து சேர்ந்தனவோ தெரியாது; குளத்தைத் தாண்டி அப்பால் போனோமோ இல்லையோ, கொன்றை மரங்களிலிருந்து சரம் சரமாய்த் தொங்கும் பொன்னிறப் புஷ்பங்கள் கண்ணைக் கவர்கின்றன. அந்த மங்களகரமான மஞ்சள் நிறப் பூக்களிடம் சிவபெருமான் அவ்வளவு காதல் கொண்டிருப்பதில் ஆச்சரியம் என்ன? அப்புறம் இந்தப் பக்கம் பார்த்தோமானால், வேலி ஓரத்தில் வளர்ந்திருக்கும் பொன்னரளிச் செடிகளில், பொன்னரளிப் பூக்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருப்பதைக் காண்கிறோம். அத்தகைய பத்தரை மாற்றுப் பசும் பொன்னின் நிறம் அந்தப் பூவுக்கு எப்படித்தான் ஏற்பட்டதோ என்று அதிசயிக்கிறோம். வேலிக்கு அப்பால் நெடிது வளர்ந்திருக்கும் கல்யாண முருங்கை மரத்தைப் பார்த்தாலோ, அதிலே இரத்தச் சிவப்பு நிறமுள்ள புஷ்பங்கள் குலுங்குவதைக் காண்கிறோம்.
சமீபத்திலுள்ள அந்தச் சிவன் கோயிலைத்தான் பாருங்கள். கோயில் பிரகாரத்தில் மதிலை அடுத்தாற் போல் வளர்ந்திருக்கும் பன்னீர் மரங்களிலே அந்தப் பன்னீர்ப் புஷ்பங்கள் எவ்வளவு அழகாயிருக்கின்றன? பச்சைப் பசேலென்ற இலைகளுக்கு மத்தியில், இந்த வெண்ணிற மலர்கள் எப்படி சோபிக்கின்றன? அடுத்தாற்போலிருக்கும் பவளமல்லி மரத்தையும் அதன் அடியில் புஷ்பப் பாவாடை விரித்தாற்போல் உதிர்ந்து கிடக்கும் பவளமல்லிப் பூக்களையும் பார்த்து விட்டாலோ ஏன், அப்பால் போவதற்கே நமக்கு மனம் வருவதில்லை.
ஆனாலும் மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அதோ சற்றுத் தூரத்தில் தெரியும் குளக்கரையை நோக்கிச் செல்வோம். ஒற்றையடிப் பாதை வழியாகச் செல்லும் போது கம்மென்ற வாசனை வருவதைக் கண்டு அண்ணாந்து பார்க்கிறோம். அது ஒரு நுணா மரந்தான். பார்ப்பதற்கு ஒன்றும் அவ்வளவு பிரமாதமாயில்லை. எனினும் அந்த மரத்தின் சின்னஞ்சிறு பூக்களிலிருந்து அவ்வளவு நறுமணம் எப்படித்தான் வீசுகின்றதோ?
இதோ தடாகத்துக்கு வந்து விட்டோ ம். குளத்தின் கரையிலே உள்ள நந்தவனத்திலே மட்டும் பிரவேசித்து விட்டோ மானால் திரும்ப வெளியே வருவதே பிரயாசையாகிவிடும். ஆகையால், வெளியிலிருந்தே அதை எட்டிப் பார்த்துவிட்டுப் போகலாம். அதோ நந்தியாவட்டைச் செடிகளில் கொத்துக் கொத்தாகப் பூத்திருக்கும் வெண்ணிறப் பூக்கள் கண்ணைப் பறிக்கின்றன. அந்தப் புறத்தில் செம்பருத்திச் செடிகளும், வேலி ஓரம் நெடுக கொக்கு மந்தாரையும் இந்தண்டைப் பக்கம் முழுதும் மல்லிகையும் முல்லையும் பூத்துக் குலுங்குகின்றன. அதோ அந்தப் பந்தலில் ஒரு புறம் ஜாதி முல்லையும், இன்னொரு புறம் சம்பங்கியும் பூத்து, நந்தவனம் முழுவதிலும் நறுமணத்தைப் பரப்புகின்றன. அந்த ஈசான்ய மூலையில் ஒரே ஒரு ரோஜாச் செடி, வீட்டுக்குப் புதிதாய் வந்த விருந்தாளியைப் போல் சங்கோஜத்துடன் தனித்து நிற்கிறது. அதிலே ஒரு கிளையில் கொத்தாகப் பூத்த இரண்டு அழகிய ரோஜாப் புஷ்பங்கள்.
"ரோஜாப் பூவாம் ரோஜாப்பூ! பிரமாத அதிசயந்தான்!" என்று சொல்வது போல், குளத்தின் கரையில் அடர்ந்து வளர்ந்திருக்கும் அரளிச் செடிகளிலே அரளிப் புஷ்பங்கள் மண்டிக் கிடக்கின்றன. செண்டு கட்டுகிறார்களே, செண்டு! இயற்கைத் தேவி கட்டியிருக்கும் இந்த அற்புதப் பூச்செண்டுகளைப் பாருங்கள்! கரும் பச்சை இலைகளுக்கிடையில் கொத்துக் கொத்தாய்ப் பூத்திருக்கும் இந்த செவ்வரளிப் பூக்களின் அழகை என்னவென்று சொல்வது? ஆகா! அந்தப் பூங்கொத்தின் மேலே இதோ ஒரு பச்சைக்கிளி வந்து உட்காருகிறது. கிளையும் அந்த இயற்கைப் பூச்செண்டும் சேர்ந்து ஊசலாடுகின்றன. ஏதோ தெய்வ லோகம் என்று உயர்வாய்ச் சொல்கிறார்களே, அந்தத் தெய்வ லோகத்தில் இதைவிடச் சிறந்த சௌந்தரியக் காட்சி இருக்க முடியுமோ?
கடைசியாக, அந்தக் குளத்தையும் பார்த்துவிடுவோம். அது குளமா அல்லது புஷ்பக் காடா? மலர்க் குலத்துக்கு ஒரு சக்கரவர்த்தி உண்டு என்றால் அது செந்தாமரைதான் என்பதில் சந்தேகமில்லை. எத்தனை பெரிய பூ! அதுவும் ஒன்றிரண்டு, பத்து, இருபது அல்ல; -ஆயிரம் பதினாயிரம்! அவை தலைதூக்கி நிற்கும் கம்பீரந்தான் என்ன? சௌந்தரிய தேவதை செந்தாமரைப் பூவைத் தன் இருப்பிடமாகக் கொண்டதில் வியப்பும் உண்டோ ?
புஷ்பராஜா கொலுவீற்றிருக்கும் இடத்தில் தாங்களும் இருக்கிறோமே என்று வெட்கப்பட்டுக் கொண்டு, அந்த மூலையில் சில அல்லிப் பூக்கள் ஒளிந்து நிற்கின்றன. இன்னும் சிறிது கூர்ந்து பார்த்தால், சில நீலோத்பலங்கள் இதழ் விரிந்தும் விரியாமலும் தலையைக் காட்டிக் கொண்டிருப்பதும் தெரிய வருகின்றன.
ஆமாம், அங்கங்கே வெள்ளை வெளேரென்று தோன்றுகின்றவை கொக்குகள்தான். ஆனால் அவை மீனுக்காகத் தவம் செய்கின்றனவா அல்லது அந்த அழகுக் காட்சியிலே மதிமயங்கிப் போய்த்தான் அப்படிச் சலனமற்று நிற்கின்றனவா, நாம் சொல்ல முடியாது.
இந்த அற்புத சௌந்தரியக் காட்சியிலிருந்து நமது பார்வையைச் சிறிது வேறு பக்கம் திருப்புவோம். குளத்தின் கரையில் படித்துறைக்குச் சமீபத்திலுள்ள ஒரு சிறு மண்டபத்தைப் பார்ப்போம். அந்த மண்டபத்தில் இப்போது விபூதி ருத்ராக்ஷதாரிகளான இரண்டு பெரியவர்கள் உட்கார்ந்து அனுஷ்டானம் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் தர்மகர்த்தாப்பிள்ளை; இன்னொருவர் அவருடைய சிநேகிதர் சோமசுந்தரம் பிள்ளை.
"சிவாய நம: சிவாய நம: சிவாய நம:... உமக்குத் தெரியுமோ, இல்லையோ! நமது சிற்றம்பலத்தின் மகளுக்குக் கல்யாணம் நிச்சயமாகிவிட்டது" என்கிறார் தர்மகர்த்தாப் பிள்ளை.
"தெரியும், ஆனா அந்தப் பையன் முத்தையன் தான் ஏமாந்து போகிறான். அவனுக்கு முறைப் பெண் அல்லவா கல்யாணி?"
"முறைப்பெண்ணாவது ஒண்ணாவது; சுத்தத் தறுதலைப் பையன்! ஒரு காலணா சம்பாதிக்க யோக்யதை இல்லை. அவனுக்கு யார் பெண்ணைக் கொடுப்பார்கள்?"
"இருந்தாலும் அவன் ரொம்ப ஆசை வைத்திருந்தான். காத்திருந்தவன் பெண்ணை நேற்று வந்தவன் கொண்டு போன கதைதான்."
இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருக்கையில் அந்த மண்டபத்தினருகே ஓர் இளைஞன் வருகிறான். அவன் காதில் மேற்படி பேச்சின் பின்பகுதி விழுகிறது. அவர்கள் பாராதபடி அந்த மண்டபத்தின் மேல் ஏறி உச்சியை அடைகிறான். அந்த இளைஞனுக்கு வயது இருபது, இருபத்திரண்டு இருக்கும். வாகான தேகமும் களையான முகமும் உடையவன். அவனுடைய தலைமயிரைக் கத்தரித்துக் கொஞ்ச நாள் ஆகியிருக்க வேண்டும். நெற்றியின் மேலெல்லாம் மயிர் விழுந்து ஊசலாடிக் கொண்டிருக்கிறது. தலையை ஒரு குலுக்குக் குலுக்கிக் கண்களை மறைந்த மயிர்ச் சுருளை விலக்கிக் கொள்கிறான். உடனே 'தொபீர்' என்று நின்ற வாக்கிலேயே குளத்தில் குதிக்கிறான். அவன் குதித்த இடத்திலிருந்து ஜலம் வெகு உயரம் எழும்பி, நாலாபக்கமும் சிதறி விழுகிறது. சில திவலைகள் மண்டபத்தின் அடியில் அனுஷ்டானம் செய்து கொண்டிருந்த பெரியோர்கள் மேலும் விழுகின்றன.
"நல்ல பிள்ளை! நல்ல பிள்ளை! வால் ஒன்று தான் வைக்கவில்லை" என்கிறார் தர்மகர்த்தாப் பிள்ளை.
"முரட்டு முத்தையன் என்று பெயர் சரியாய்த்தான் வந்திருக்கிறது" என்கிறார் சோமசுந்தரம் பிள்ளை.
இருக்கட்டும்; குளத்தில் குதித்தவன் என்ன ஆனான், பார்ப்போம். ஆசாமியைக் காணவே காணோம்? ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷம், மூன்று நிமிஷம்...ஐயோ முழுகியே போய் விட்டானோ, என்ன? - ஒரு கணம் நமது நெஞ்சு துணுக்குறுகிறது - இல்லை, அதோ ஜலத்தில் குமிழி வருகிறதே! கொஞ்ச தூரத்தில், நாலைந்து எருமை மாடுகள் சுகமாய்ப் படுத்துக் கொண்டிருந்த இடத்தில் முத்தையன் ஜலத்துக்கு வெளியே தலையைத் தூக்குகிறான். அந்த எருமைகளின் வாலைப் பிடித்து முறுக்கி விரட்டுகிறான். அவை கரையேறி நாலாபக்கமும் ஓடுகின்றன. மண்டபத்திலிருந்த இரண்டு பெரிய மனுஷர்களும் 'அடடே!' 'அடடே!' என்று கூவிக்கொண்டு எழுந்து அந்த மாடுகளை நோக்கி ஓடுகிறார்கள்.
முத்தையன் அங்கிருந்து நீந்திச் சென்று குளத்தில் தாமரைகள் பூத்திருக்கும் இடத்தை அடைகிறான். ஒரு தாமரைப் பூவைப் பறிப்பதற்காக அதனிடம் அணுகுகிறான். என்ன பிரமை இது? பூ இருந்த இடத்திலே ஓரிளம் பெண்ணின் சிரித்த முகம் காணப்படுகிறதே! முத்தையன் தலையை ஒரு தடவை குலுக்கியதும் முகம் மறைந்து மறுபடி பூ ஆகிறது. முத்தையன் அந்தப் பூவை அடிக்காம்போடு பலமாகப் பிடித்து இழுத்துப் பறிக்கிறான். அப்பா! என்ன கோபம்! என்ன ஆத்திரம்! கோபத்தையும் ஆத்திரத்தையும் அந்தப் பூவினிடமா காட்ட வேண்டும்? பூவைத்தான் பறிக்கலாம்! மனத்திலுள்ள ஞாபகத்தை அந்த மாதிரி பறித்து எறிந்துவிட முடியுமா? முத்தையன் பூவுடனே இரண்டு தாமரை இலைகளையும் பறித்துச் சுருட்டிக் கொண்டு கரையேறுகிறான். கிராமத்தை நோக்கி நடக்கிறான். அவனைப் பின் தொடர்ந்து நாமும் செல்வோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
1.பறித்த தாமரை - Kalvanin Kaathali - கள்வனின் காதலி - Kalki's Novels - அமரர் கல்கியின் புதினங்கள் - அந்தப், முத்தையன், பிள்ளை, புஷ்பங்கள், இரண்டு, கொண்டு, வளர்ந்திருக்கும், அவ்வளவு, நிமிஷம், குளத்தில், என்கிறார், கொத்துக், குளத்தின், பூத்திருக்கும், பக்கம், வெளியே, அப்பால், வேண்டும், பூக்கள், சோமசுந்தரம், பார்த்தால், இடத்தில், செய்து, பார்ப்போம், சென்று, சிறிது, அனுஷ்டானம், அவனுக்கு, கொண்டிருந்த, ஊருக்கு, பிடித்து, நோக்கி, நாலாபக்கமும், அடைகிறான், இருபது, விழுகிறது, மண்டபத்தின், தர்மகர்த்தாப், செண்டு, பாருங்கள், அடியில், தூரத்தில், தெரியும், சமீபத்திலுள்ள, எப்படித்தான், கொத்தாய்ப், காண்கிறோம், செடிகளில், செல்வோம், விட்டோ, ரோஜாப், சொல்வது, கரையில், சௌந்தரியக், மூலையில், முல்லையும், இல்லையோ, கொத்தாகப், அந்தக், அல்லது