நற்றிணை - 90. மருதம்
ஆடு இயல் விழவின் அழுங்கல் மூதூர், உடையோர் பன்மையின் பெருங் கை தூவா, வறன் இல் புலைத்தி எல்லித் தோய்த்த புகாப் புகர் கொண்ட புன் பூங் கலிங்கமொடு வாடா மாலை துயல்வர, ஓடி, |
5 |
பெருங் கயிறு நாலும் இரும் பனம் பிணையல் பூங் கண் ஆயம் ஊக்க, ஊங்காள், அழுதனள் பெயரும் அம் சில் ஓதி, நல்கூர் பெண்டின், சில் வளைக் குறுமகள் ஊசல் உறு தொழில் பூசல் கூட்டா |
10 |
நயன் இல் மாக்களொடு கெழீஇ, பயன் இன்று அம்ம, இவ் வேந்துடை அவையே! |
கூத்தயர்கின்ற விழாவின் ஒலியையுடைய இம்மூதூரின்கண்ணே ஆடைகளை ஆராய்ந்து கழுவுந்தன்மையிற் பெரிதும் தன் கை ஒழியாத வறுமையில்லாத ஆடையொலிப்பவள்; இரவிலே தோய்த்த சோற்றின் கஞ்சியிட்டுப் புலர்த்திய சிறிய பூத்தொழிலையுடைய ஆடையுடனே பொன்னரி மாலையும் அசைந்தாட ஓடிச்சென்று; கரிய பனைநாரினாலே திரித்த கயிற்றைப் பிணித்துத் தொங்கவிட்ட வூசலிலேறிப் பூப்போல் உண்கண்களையுடைய தன் ஆயத்தார் அதனை ஆட்டவுந் தான் ஆடாளாய், அழுதனள் பெயரும் அஞ்சில் ஓதி நல்கூர் பெண்டின் சில்வளைக் குறுமகள் அழுது மீளுகின்ற அழகிய சிலவாகிய கூந்தலையுடைய பெண்தன்மையிற் குறைவுபட்ட சிலவாய வளைகளை யணிந்த பரத்தையாகிய பெதும்பைப் பருவத்தாள் ஓரிளமகளை; மீட்டும் ஊசலாடுகிற மிக்க தொழிலின் ஆரவாரத்திற் செய்யாத; விருப்பமற்ற மக்களொடு சேர்ந்து; இவ்வேந்தனது அவைக்களந்தான் பயனின்மையுடையதாயிரா நின்றது; இது மிக்க வியப்பு; அவளை ஆடச் செய்திருந்தால் அவள் ஊடாள்; தலைமகனும் அவளை நீங்கான்; ஆண்டு அவள் ஊடினமையால் இறைமகன் இங்கு வந்தான் போலும்; இனி இங்கு வாரா தொழிவானாக !;
தோழி, தலைமகளுக்கு உரைப்பாளாய், பாணனை நெருங்கி வாயில்மறுத்தது. - அஞ்சில் அஞ்சியார்
‹‹ முன்புறம் | 1 | 2 | ... | 88 | 89 | 90 | 91 | 92 | ... | 400 | 401 | தொடர்ச்சி ›› |
தேடல் தொடர்பான தகவல்கள்:
நற்றிணை, Narrinai, Ettuthogai, எட்டுத்தொகை, Sangam Literature's, சங்க இலக்கியங்கள், Tamil Literature's, தமிழ் இலக்கியங்கள், - மிக்க, குறுமகள், அவளை, அவள், இங்கு, பெண்டின், நல்கூர், பூங், தோய்த்த, அழுதனள், பெயரும், சில், பெருங்